மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

மாறிய காட்சிகள்!

மாறிய காட்சிகள்!

இன்று வெளியாகியுள்ள கர்நாடக தேர்தல் முடிவுகள், அம்மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பாஜக பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கூட்டணிக்கு தயாராகி வருகின்றன. மஜகவின் குமாரசாமி முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணியில் பாஜக: பெரும்பான்மையைத் தொடுமா? என்று, இன்றைய 1 மணி மின்னம்பலம் பதிப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதற்கேற்ப, முன்னிலை பெற்றும் பெரும்பான்மையைப் பெறத் தேவையான இடங்களை பாஜக பெறவில்லை. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி 38 இடங்களிலும், இதர கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மதியம் 12 மணி வரை பாஜகவுக்கு ஏறுமுகமாகவே இருந்தது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைவது உறுதி என்று தெரிவித்தார். இவரைப் போலவே, பாஜகவின் தேசியத் தலைவர்கள் பலரும் இதே நம்பிக்கையில் இருந்தனர். கிட்டத்தட்ட 110 இடங்களைப் பெறும் என்ற வகையில், அக்கட்சி முன்னிலை பெற்றிருந்தது.

பிற்பகலுக்குப் பிறகு, காட்சிகள் மாறின. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் தோற்ற நிலையிலும், ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலையிலும், கவுரவமான நிலையைப் பெற்றது காங்கிரஸ். ஏற்கனவே தேர்தல் கருத்துக்கணிப்புகளும் வாக்குக் கணிப்புகளும் குறிப்பிட்டது போல, கர்நாடகாவில் ஆட்சியைத் தீர்மானிக்கும் நபராக மாறியுள்ளார் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி.தேவகவுடாவின் மகன் குமாரசாமி.

தேர்தல் பிரசாரத்தின்போதே, தான் கிங்மேக்கர் அல்ல என்றும், தான் கிங் என்றும் கூறியிருந்தார். அதாவது, தான் முதலமைச்சராகப் பதவியேற்பேன் என்று மக்களிடம் தெரிவித்திருந்தார்.

இன்று மதியம் 3 மணியளவில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத், இதனை செய்தியாளர்கள் மத்தியில் அறிவித்தார். மஜக ஆட்சியமைக்க, காங்கிரஸ் கட்சி ஆதரவு தருவதாகக் கூறினார். ”இது தொடர்பாக, குமாரசாமி மற்றும் தேவகவுடாவிடம் பேசினோம். அவர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். மாலையில் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவோம்” என்றார் ஆசாத். முதலமைச்சர் சித்தராமையாவும் இதனை உறுதிப்படுத்தினார்.

துணை முதல்வர் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படுமென்றும், மஜகவினருக்கு 14 அமைச்சர் பதவிகளும் காங்கிரஸ் கட்சியினருக்கு 20 அமைச்சர் பதவிகளும் ஒதுக்கப்படுமென்றும் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் கர்நாடக தலைவர் பரமேஸ்வரா தலைமையில் அக்கட்சியினர் ஆட்சியமைக்க உரிமை கோரும் வகையில், ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்திக்க முயன்றனர். ஆனால், அப்போது அவர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.

மாலை 4 மணிக்கு மேல் ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் முதலமைச்சர் சித்தராமையா.

பாஜகவின் மனமாற்றம்!

முன்னதாக, பதவியேற்பு விழாவுக்கு பிரதமருக்கு அழைப்பு விடுக்க டெல்லி செல்வதாக அறிவித்திருந்தார் எடியூரப்பா. மஜக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க முடிவு என்று செய்தி வெளியான நிலையில், அவரது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கர்நாடக அரசியல் நிலவரத்தைக் கண்காணிக்க, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான் மற்றும் பிரகாஷ் ஜாவ்டேகரை பெங்களூருவுக்கு அனுப்பியுள்ளார் பாஜக தலைவர் அமித் ஷா.

வாக்கு சதவிகிதம்

இந்த தேர்தலில் காங்கிரஸ் 37.9%, பாஜக 36.2%, மஜக 18.5%, சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் 3.9% வாக்குகள் பெற்றுள்ளன. வாக்குக் கணிப்புகளில் பல நிறுவனங்கள் குறிப்பிட்டபடி, காங்கிரஸ் கட்சியானது பரவலாக வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், குறிப்பிட்ட பகுதிகளில் வெற்றிகளைப் பெறும் வகையில் வாக்குகளைப் பெற்றுள்ளது பாஜக என்பது, இந்த முடிவுகளில் தெளிவாகத் தெரிய வந்துள்ளது.

மதியம் 5 மணியளவில் ஆளுநரைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, தங்களது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் விரைவில் நிரூபிப்போம் என்று தெரிவித்தார்.

மஜகவின் விஸ்வரூபம்!

ஆளுநரைச் சந்திக்க தனித்தனியாக காங்கிரஸும் மஜகவும் கடிதம் அளித்தது. இதற்கு மாறாக சித்தராமையா, குமாரசாமி உள்பட இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் இணைந்துவந்து, ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் சந்தித்துப் பேசினர்.

இதன் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சித்தராமையா. அப்போது, “மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைக்க, காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு தருகிறது. காங்கிரஸ் உதவியோடு மஜக ஆட்சியமைக்கும். இந்த முடிவை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம்: என்று கூறினார்.

மாலை 6 மணிக்கு மேல் பெங்களூருவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரும் ஓரிடத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

கர்நாடக நிலவரம் குறித்து விவாதிக்க, இன்று மாலை 7 மணியளவில் டெல்லியில் பாஜக நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுமென்று தெரிகிறது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon