மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 மே 2018

சிறப்புக் கட்டுரை: நிதியமைச்சர்களுக்கு ஒரு திறந்த மடல்!

சிறப்புக் கட்டுரை: நிதியமைச்சர்களுக்கு ஒரு திறந்த மடல்!

டி.எம்.தாமஸ் ஐசக்

என்னுடைய சக நிதியமைச்சர்களே, நிதிக் குழுவின் பரிந்துரைகள் மாநிலத்தின் நிதி ஆதாரத்துக்கு முக்கியமானவை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நம்மில் சிலர் முதற்கட்டமாகக் கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலும், பிறகு ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியிலும் சந்தித்தோம். ஒன்றிய அரசு நியமித்துள்ள நிதிக் குழுவின் வரன்முறைகள் பற்றியும் அவற்றின் விளைவுகள் பற்றியும் நாம் வருந்தினோம். வரி வருவாய் பகிர்வு விவகாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தலைப்புச் செய்திகளிலும் இடம்பெற்றது. ஆனால் நம்முன் இருக்கும் பிரச்சினைகள் அதை விட மிகப் பெரிதானவை.

நிதிக் குழுவின் வரன்முறைகள் அரசியல் சாசனத்தில் வார்க்கப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்தின் மதிப்புகளுக்கும், மாநில அரசுகளிடம் எஞ்சியுள்ள நிதித் தன்னாட்சிக்கும் சவால் விடுவதாக அமைந்துள்ளது. நிதிப் பகிர்வைத் தீர்மானிக்க 1971ஆம் ஆண்டின் மக்கள்தொகைக்குப் பதிலாக 2011ஆம் ஆண்டு மக்கள்தொகையால் ஏற்படும் இழப்புகள் பற்றி மட்டுமே நாங்கள் கவலை கொள்வதாக நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். இந்த மாற்றத்தால் தென்மாநிலங்கள் மட்டுமல்ல, எந்த மாநிலங்களிலெல்லாம் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டதோ அவை எல்லாம் இழப்பைச் சந்திக்கும். தேசிய மக்கள் கொள்கையை நடைமுறைப்படுத்தியதற்காக நமக்குத் தண்டனை வழங்கப்படாதவாறு அனைத்துவிதமான முறையான கோரிக்கைகளை நாம் நிச்சயமாக முன்வைப்போம். நிதிக் குழுவிடம் நாம் சமர்ப்பிக்கவுள்ள குறிப்பாணையில், மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வுக்கான அடிப்படை விதிகள் குறித்து நாம் முரண்படலாம். ஆனால், ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையேயான நிதிப் பகிர்வு, இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கே பாதிக்கும் வல்லமை கொண்டது.

ஆனால், அரசியல் காரணங்களுக்காக நம்மில் சிலர் மாநிலங்களின் உரிமைகளையும், நாட்டின் நிதிக் கூட்டாட்சி முறையையும் காக்கத் தவறுவதாக நான் நினைக்கிறேன். நிதிக் குழுவின் வரன்முறைகள் நிதி ஆதாரங்களையும், மாநிலங்களின் நிதி தன்னாட்சியையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து உங்களிடம் மக்கள் முன்பு நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். என்னுடைய சக நிதியமைச்சர்கள் யாருக்கேனும் மாற்றுக் கருத்து இருந்தால், பொது விவாதத்தில் என்னுடன் இணைந்து கொள்ளுங்கள். உங்களில் சிலரேனும் பொது விவாதத்தில் கலந்து கொள்வீர்கள் என்று நான் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

முதலாவதாக, 14ஆவது நிதிக் குழு பரிந்துரைத்த மாநிலங்களுக்கான 42 விழுக்காடு வருவாய் பங்கை மேலும் குறைப்பதை எந்தவொரு நிதியமைச்சராவது விரும்புவாரா? ஆனால், இதைத்தான் நிதிக் குழுவின் வரன்முறைகள் முன்மொழிகின்றன. இந்தியாவின் வரலாற்றில் இதுவரை ஒருமுறைகூட முன்னாள் நிதிக் குழுவின் பரிந்துரைகளை மறு ஆய்வு செய்ய நடப்பு நிதிக் குழுவுக்குப் பணி வரையறுக்கப்படவில்லை. 13ஆவது நிதிக் குழு பரிந்துரைத்த 32 விழுக்காட்டையும், 14ஆவது நிதிக் குழு பரிந்துரைத்த 42 விழுக்காட்டையும் ஒப்பிட முடியாது. 13ஆவது நிதிக் குழுவின் 32 விழுக்காடு திட்டங்கள் சாராத வருவாய் செலவினங்களுக்கானது மட்டுமே ஆகும். 14ஆவது நிதிக் குழுவின் 42 விழுக்காடு மொத்த வருவாய் செலவினங்களுக்கானது ஆகும். ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான செலவில் மாநிலங்களின் பங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான வரி வருவாய் பகிர்வை ஜிஎஸ்டி மேலும் மோசமாக்கியுள்ளது. ஏனெனில் ஜிஎஸ்டி வரி மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே 50:50 விகிதத்தில் வரி வருவாய் பகிரப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, ஜிஎஸ்டியினால் ஒன்றியத்தின் நிதி நிலை மோசமாகியுள்ளது என்று நிதிக் குழுவின் வரன்முறைகள் கூறுவது நகைப்பிற்குரியதல்லவா?

இரண்டாவதாக, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒப்பிடக்கூடிய பொதுச் சேவைகளும், வரி விதிப்பும் வழங்கப்படுவதைக் கூட்டாட்சித் தத்துவம் உறுதி செய்கிறது. இதற்காகத்தான் வருவாய் பற்றாக்குறை மானியம் வழங்கப்படுவதற்கான உரிமையை அரசியல் சாசனமும் வழங்குகிறது. எந்த நிதிக் குழுவாலும் இதை மறு ஆய்வு செய்ய இயலாது. பிறகு எப்படி 15ஆவது நிதிக் குழுவின் வரன்முறைகளில், “வருவாய் பற்றாக்குறை மானியம் வழங்கப்படலாமா என்பது குறித்தும் நிதிக் குழு ஆய்வு செய்யலாம்” என்று கூறப்பட்டுள்ளது? அதற்கான உரிமைகளை நிதிக் குழுவுக்கு யார் வழங்கியது? இது, மாநிலங்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை மீறும் செயல் என்பதை நீங்கள் ஏற்கவில்லையா?

மூன்றாவதாக, மொத்த உள் மாநில உற்பத்தியில் மாநிலங்கள் பெறும் கடனை 3 விழுக்காட்டிலிருந்து 1.7 விழுக்காடாகக் குறைக்க நிதிக் குழுவின் வரன்முறை விரும்புகிறது. 14ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் பெறும் உரிமைகளை நாங்கள் இப்போதுதான் கையாளத் தொடங்கியுள்ளோம். இந்த உரிமையைக் குறைத்தால் மாநிலங்களின் மூலதனச் செலவுகள் கடுமையாகச் சுருங்கும். மேலும், மாநிலங்கள் பெறும் கடன்களில் நிபந்தனைகளை விதிக்கவும் நிதிக் குழுவின் வரன்முறைகள் முன்மொழிகின்றன. இது விஷமத்தனமான போக்கு ஆகும். இதுவரையில் மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 3 விழுக்காடு அளவுக்குக் கடன் வாங்கும் உரிமையில் எந்தவொரு நிபந்தனையும் இல்லை. மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்தின் மீது ஏவி விடப்பட்டிருக்கும் இந்த ஊடுருவலை நாம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

நான்காவதாக, மானியம் வழங்கும்போது விருப்புரிமையை முற்றிலும் அகற்ற 14ஆவது நிதிக் குழு முயற்சி செய்துள்ளது. நிதிக் குழுவின் வழியே மீண்டும் நிபந்தனைகளுடன் கூடிய நிதியை வலுப்படுத்த ஒன்றிய அரசு முனைந்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. மாநிலச் செயல்பாடுகளை ஊக்குவிப்பது குறித்து நிதிக் குழுவின் வரன்முறைகள் பேசுகின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றை நான் எதிர்க்கவில்லை. ஆனால், அதைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை மாநிலங்களிடம் விட்டுவிட வேண்டும். மாநில அரசுகளின் பிரத்யேக அதிகார எல்லைக்குள் இருக்கும் பாப்புலிஸ்ட் திட்டங்கள் பற்றிய குறிப்பும் ஏற்புடையது அல்ல. இது ஜனநாயகத்துக்கு எதிரானது அல்லவா?

அரசியல் சாசனத்தை நிலைநிறுத்தவும், மாநிலங்களின் உரிமைகளைக் காக்கவும், இந்தியாவின் நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை வலுவிழக்க வைப்பதற்கான வஞ்சக நடவடிக்கைகளை அழிக்கவும் நாம் அனைவரும் கைகோக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வில் உள்ள சிக்கல்கள் குறித்து நாம் முரண்படலாம். நமது குறிப்பாணையில் 15ஆவது நிதிக் குழுவைத் தனிப்பட்ட முறையில் அணுகலாம். மாநிலங்களின் அரசியல் சாசன உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எங்களின் முயற்சிகளில் நீங்களும் இணைய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மாநிலங்களின் உரிமைகளைக் காப்பதற்கான நமது பாதையில் அரசியல் ஆதாயங்கள் குறுக்கே நிற்பதை அனுமதிக்க வேண்டாம்.

பேராசிரியர் டி.எம்.தாமஸ் ஐசக் கேரள மாநிலத்தின் நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இதற்கு முன் இந்தியச் சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்தின் பகுதியான திருவனந்தபுரத்தில் உள்ள Centre for Development Studies என்ற ஆய்வு நிறுவனத்தில் பொருளாதார பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

நன்றி: தி இந்து

தமிழில்: அ.விக்னேஷ்

நேற்றைய கட்டுரை: சக்கைபோடு போடும் டீ தொழில்!

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

புதன் 16 மே 2018