மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 4 ஜுன் 2018

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

மினிதொடர்: காலாவுடன் ஒரு வியாபாரப் பயணம் -3

இராமானுஜம்

ரஜினிகாந்த் நடித்த படங்களும், அப்படங்களை வசூல் ரீதியாக வெற்றிபெற வைக்க அவர் கையாளும் யுக்திகளும் விமர்சனங்களுக்கு உட்பட்டவை. அதே நேரம் தன் மாநில மக்கள் பிரச்சினைக்குக் குரல் கொடுத்ததற்காக அவரைத் தொழில் ரீதியாக முடக்க முயற்சிப்பதை நாம் வேடிக்கை பார்க்கக் கூடாது.

ரஜினி கன்னடரா, மராட்டியரா, தமிழரா என்பதல்ல பிரச்சினை. அவர் இந்தியக் குடிமகன். காலா படத்தைத் திரையிட கர்நாடக அரசு தடை விதிக்கிறது. தங்களின் ஆதர்ச நாயகனாகத் தமிழர்கள் கொண்டாடிய ரஜினி நடித்த காலாவுக்கு நார்வே வாழ் தமிழர்கள் தடை விதிக்கிறார்கள். துக்க பூமியான தூத்துக்குடியில் காலா திரையிடப்படாது எனக் கூறப்படுகிறது. இன்னும் எத்தனை தடைகள் வரும் என்பது தெரியாது.

ரஜினி நடித்த படங்கள் ரிலீஸுக்கு முன்பும், பின்பும் பிரச்சினைகளைச் சந்திப்பதும், பொது வெளியில் விவாதங்களையும் உருவாக்குவதும் புதிதல்ல. காலா படத்திற்கு கர்நாடகாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது. காவிரி விவகாரம் பற்றிப் பேசியதற்குக் கருத்து ரீதியாக பதில் சொல்வதை விட்டுவிட்டுத் தொழில் ரீதியாக முடக்க முயற்சிப்பது தவறான முன்னுதாரணம்.

இந்தியனாக இருப்பவர் நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வசிக்கவும், செல்லவும், வேலை பார்க்கவும் அரசியல் சட்டம் கொடுத்துள்ள அடிப்படை உரிமையை கர்நாடக முதல்வர் காலில் போட்டு மிதித்திருக்கிறார். தூத்துக்குடியில் இல்லாத சமூக விரோதிகளுக்கு எதிராக ஆவேசம் காட்டிய ஆன்மிக அரசியல்வாதி ரஜினி, தனது அடிப்படை உரிமைக்கு எதிராகப் பேசிவரும் கர்நாடக அரசுக்கு எதிராக மௌனம் காத்துவருகிறார். ரஜினியைக் கடுமையாக விமர்சித்து வந்த அதிமுக அமைச்சர்கள் காலா ரசிகர்களாக மாறித் தடையை நீக்க ஸ்டாலின் கர்நாடக அரசிடம் பேச வேண்டும் எனக் கூறிவருகிறார்கள்.

தங்கள் மாநிலக் குடிமகன் தனுஷ் தயாரித்துள்ள படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை விதிப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என தமிழக முதல்வர் கண்டிக்கவில்லை. அதிமுக கட்சியும் இதற்கு எதிராக எந்தக் கருத்தையும் கூறவில்லை. திரைப்பட அமைப்புகளும் இந்த விஷயத்தில் ரஜினிக்கு ஆதரவான நிலைப்பாட்டை உறுதியாக எடுக்கவில்லை. இது போன்று பல்வேறு பிரச்சினைகளுக்காகத் திரையுலகினர் ஒன்றுபட்டு போராடியபோது ரஜினி மவுனம் காத்திருப்பார் அல்லது எதிரான நிலை எடுத்திருப்பார். அவர் படங்களுக்குப் பிரச்சினை என்றால் அதனைத் தீர்க்க எந்தச் சமரசத்திற்கும் தயாராக இருக்கக் கூடியவர் ரஜினி என்பதால், அவரை நம்பித் தமிழ்த் திரையுலக அமைப்புகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்கிறது திரைத்துறை வட்டாரம்.

காலா மட்டுமல்ல, கமல்ஹாசன் படமான விஸ்வரூபம் 2 படத்துக்கும் தடை என்கிறது கர்நாடக சினிமா வர்த்தக சபை. இதை கமல், ரஜினி இருவரும் பேசிய அரசியல் பேச்சை முன்வைத்து தமிழ்ப் படங்களுக்கு எதிரான வியாபார அடக்குமுறையாகத்தான் பார்க்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் கர்நாடகாவுக்கு எதிராக எந்த நடிகரும் பேசக் கூடாது. பேசினால் அவர்கள் நடிக்கும் படங்களுக்கும் இதே நிலை ஏற்படும் என்பதைக் கன்னட அமைப்புகளை முன்னிறுத்தி மறைமுகமாக எச்சரித்திருக்கிறது கர்நாடக அரசு.

காலாவுக்காக மட்டுமல்ல மொத்த இந்தியத் திரையுலக நலன் கருதி திரைத்துறை ஆளுமைகள் இந்திய அரசிடமும், கர்நாடக அரசிடமும் பேச வேண்டிய நேரம் இது. இதை ரஜினியின் காலாவுக்கு ஏற்பட்ட தடையாக பார்க்காமல் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரானதாகப் பார்க்க வேண்டும்.

செங்கல்பட்டு ஏரியா விலையான 12 கோடி அசல் கிடைக்க எவ்வளவு வசூல் ஆக வேண்டும்? எத்தனை லட்சம் பேர் படம் பார்க்க வேண்டும்? புள்ளிவிவரங்களுடன் 7 மணி பதிப்பில்.

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

திங்கள், 4 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon