மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 4 ஜுன் 2018

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

மினி தொடர்: காலாவுடன் ஒரு வியாபாரப் பயணம் -4

இராமானுஜம்

திரையுலகில் நேரடிப் போட்டியாளர்களாக இருந்து வந்த கமலும் ரஜினியும் அரசியல் களத்தில் போட்டியாளர்களாக மாற முயற்சித்துவந்தார்கள். தூத்துக்குடிக்கு ரஜினிகாந்த் போய் வந்ததும் காலா படம் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் முதலிடத்துக்கு வந்தன. காலா - விஸ்வரூபம் 2 இரண்டு படங்களையும் கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என அங்கிருந்து தகவல்கள் வந்துகொண்டிருந்தபோது கமலஹாசன் கர்நாடகாவின் புதிய முதல்வர் குமாரசாமியை சந்தித்துப் பேசுகிறார்.

“காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அது பற்றி குமாரசாமியிடம் பேசினேன்” எனத் திரியைக் கொளுத்திப் போட்டு ஊடக கவனத்தை மட்டும் அல்ல அரசியல் கட்சிகளின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிச் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகிக்கொண்டிருக்கிறார். காலா டிரைலர் மட்டும் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் காலா படத்துக்கான எதிர்பார்ப்புயோ பரபரப்பையோ பொதுவான சினிமா ரசிகர்களிடம் காண முடியவில்லை. ஓப்பனிங் ஷோவுக்கான டிக்கெட் கேட்கும் தொலைபேசி தொந்தரவு இல்லை. அதனால்தான் காலா வியாபாரம் சூடு பிடிக்கவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

ரஜினிகாந்த் நடித்த படங்களைத் தங்கள் திரையரங்குகளில் திரையிட உரிமையாளர்களிடம் கடும் போட்டி எப்போதும் உண்டு. அதனால்தான் சினிமா நாட்டாமைகள் ஸ்கெட்ச் போட்டுத் தங்களுக்குத் தேவையான பகுதிகளைப் பொறுமையாக; அதே நேரம் எளிதாக எந்த கமிட்மெண்டும் இல்லாமல் கைப்பற்றியிருக்கிறார்கள். புதுமுகங்கள் நடித்த படங்கள்கூட அவுட்ரேட் முறையில் வியாபாரம் ஆகி வரும் சூழலில் "காலா" குறைந்த பட்ச விலையில் கூடவா அவுட்ரேட் முறையில் விற்பனை ஆகவில்லை என்ற ஐயம் எல்லோருக்கும் இருந்தது.

வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையில் விலை சமச்சீராக இல்லை. தமிழகத்தில் மெர்சல், பாகுபலி - 2 படங்கள், எவ்வளவு மொத்த வசூல் ஆனதோ அதனையே காலாவுக்கான விலையாகக் கூறப்பட்டதால் புதியவர்களுக்கு லிங்கா பட விநியோகஸ்தர்கள் நினைவுக்கு வந்து பெரும்பான்மை விநியோகஸ்தர்கள் மீண்டும் வியாபாரம் பேச விரும்பவில்லை.

தாங்கள் எதிர்பார்க்கும் பணம் வர வேண்டும். அதே வேளை எந்தப் பிரச்சினையும் இன்றி அதிக திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என விரும்பிய லைகா- தனுஷ் தரப்பு, செங்கல்பட்டு விநியோக உரிமையை 12 கோடிக்குத் தானாக முன்வந்து அருள்பதிக்குக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

காலா வெளியாகும் அன்று உலகம் முழுவதும் ஜுராசிக் வேர்ல்டு 2 படமும் வெளியாகிறது. மால் தியேட்டர்கள் ஆங்கிலப் படத்திற்கு முன்னுரிமை கொடுப்பதுடன், அதன் மூலம் வருவாய் அதிகம் கிடைக்கும் என்பதால் ஜுராசிக் வேர்ல்டு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் குழல் உருவானது.

சென்னை நகரில் காலா படம் திரையிடும் மால்களில் ஜுராசிக் வேர்ல்டு படத்திற்கு பெரிய ஸ்கீரீன் கொடுக்கக் கூடாது, தவிர்க்க முடியாமல் கொடுத்துவிட்டால் அதிக காட்சிகள் ஒதுக்கீடு செய்யக் கூடாது என்ற நிபந்தனைகளை விதிக்கிறதாம் காலா படத்தின் சென்னை நகர தியேட்டர் கன்ஃபர்மேஷன் வேலை செய்யும் சத்யம் சினிமாஸ்.

தமிழ்நாட்டில் அதிகத் திரையரங்குகள் இருக்கும் பகுதி செங்கல்பட்டு விநியோகப் பகுதி. விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரிடம் படத்தின் உரிமையைக் கொடுத்துவிட்டால் அதிக திரையரங்குகள் கிடைக்கும். பிரச்சினை வந்தால் அதனை சமாளிக்கவும் பவர் வேண்டும் என்பதால் அருள்பதிக்கு காலா கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது மதுரை பைனான்சியர் அன்பு செழியனின் சென்னை பிரதிநிதியாக செயல்படுபவர் அருள்பதி. அதனால் அன்புவின் சிபாரிசில் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது

செங்கல்பட்டு ஏரியா அட்வான்ஸ் 12 கோடி. இந்தத் தொகை வசூலாகுமா என்பதுதான் சினிமா வட்டாரத்தின் தற்போதைய விவாதப் பொருள். ஜிஎஸ்டி கணக்கில் வராது. அசல் கிடைப்பதற்கே வரி, வாடகை அனைத்தும் சேர்த்து சுமார் 17 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆக வேண்டும். தற்போதைய டிக்கெட் விலை ரூபாய் 150 வீதம் சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முதல் வாரத்தில் காலா படம் பார்த்தால் 12 கோடி அசல் கிடைக்கும். நடக்குமா பொறுத்திருந்து பார்ப்போம். மரண பயத்தில் மதுரை திரையரங்குகள் இருப்பதன் காரணம் என்ன?

நாலை மாலை 7 மணி அப்டேட்டில்.

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

திங்கள், 4 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon