மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 6 ஜுன் 2018

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 7

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கே.ஆர்.கங்காதரனுக்குப் பின்னால் பொறுப்புக்கு வந்த தலைவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள்போல் தங்களை வளப்படுத்திக்கொண்டார்கள். இவர்களின் அதிகாரத்தை வைத்து அவர்களது கையாட்கள் கட்டப் பஞ்சாயத்துகள் செய்து காசு பார்த்தார்கள். இவர்களை விரட்டி அடிக்கவும், தமிழ் சினிமா தயாரிப்புகளை ஒழுங்குபடுத்தவும், படத்தயாரிப்பில் இருந்து ஒதுங்கிய தயாரிப்பாளர்களை மீண்டும் படம் எடுக்க வைக்கவும் முயற்சிப்போம் என்று கூறி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது விஷால் அணி.

தலைவராகப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை விஷாலின் திட்டங்கள், வாக்குறுதிகள் எல்லாம் தமிழக அரசியல்வாதிகள் போன்று அறிவிப்புகளுடன் நின்றுவிடுகின்றன. அரசியல், சமூக விஷயங்களில் விஷால் செய்த அறிவிப்புகள் இல்லாமல் தமிழ் சினிமாவில் அவர் செய்த அறிவிப்புகள், வாக்குறுதிகளை குறிப்பாக டிக்கெட் கட்டணம், தியேட்டர் எண்ணிக்கை பற்றி விவாதிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

டிஜிட்டல் கட்டண உயர்வை முன்வைத்துத் தமிழ் சினிமா தயாரிப்பு, திரையிடல் இரண்டையும் 48 நாட்கள் செயல்படவிடாமல் வேலை நிறுத்தம் நடைபெறக் காரணமாக இருந்தது விஷால் தலைமை. வேலைநிறுத்தத்தின்போது பிரதானமாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் தியேட்டர் டிக்கெட் கட்டணம் முறைப்படுத்துவது, புதிய திரைப்படங்கள் வெளியிடுவதை ஒழுங்குபடுத்துவது, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே படங்கள் திரையிட வேண்டும் ஆகியவை. அனைத்து நடிகர்களின் படங்களுக்கும் இது பொருந்தும் என்றார் விஷால். இது நடைமுறை சாத்தியமாகி இருக்கிறதா என்பதை விட இதை அமல்படுத்தத் தயாரிப்பாளர்கள் சங்கமோ, அதன் தலைவர் என்ற முறையில் விஷாலோ என்ன முயற்சி எடுத்தார்கள் என்பது இன்றைக்கு விவாதப் பொருளாக மாறி விஷால் எங்கே எனத் தயாரிப்பாளர்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவிருக்கிறது காலா திரைப்படம். இந்தப் படத்திற்கு டிக்கெட் விற்பனை செய்வது முதல், தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்வது வரை நடக்கும் அத்துமீறல்களைத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் என இரு தரப்பும் தலையிட்டு ஒழுங்குபடுத்த முடியாமல் செயலிழந்துள்ளன. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஒருங்கிணைந்த அமைப்பாக, ஒற்றைத் தலைமையின் கீழ் இங்கு இல்லை. தயாரிப்பாளர்கள் சங்கம் வலிமையான தலைமையின் கீழ் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

காலா படத்திற்கு 400க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது. ஒரே ஊரில் இரண்டு தியேட்டர்களில் படங்களை திரையிடக் கூடாது எனக் கூறியவர் விஷால். ‘அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் கூடுதலாக விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்களே புகார் செய்வோம்’ என்று கூறிய விஷால் அவர் தயாரித்து நடித்து வெளியிட்ட இரும்புத் திரை படத்தில் தனது கட்டுப்பாடுகளை அமல்படுத்தவில்லை.

320 தியேட்டர்களில் இரும்புத்திரை படத்தை ரிலீஸ் செய்ததுடன், புறநகர் பகுதிகளில் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தைக் காட்டிலும் அதிகமாகவே இப்படத்திற்கு டிக்கெட் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. டிக்கெட் விற்பனை, வசூல் இவை இரண்டிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என வீர வசனம் பேசிய விஷால், இரும்புத்திரை படம் 35 நாட்களைக் கடந்த பின்பும் அதன் உண்மையான வசூலை புள்ளிவிவரங்களுடன் பகிரங்கமாக அறிவிக்காதது ஏன் என்ற கேள்வி எழுப்பபடுகிறது.

கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட முயற்சி எடுக்கப்படும் எனக் கூறும் விஷால், தமிழகத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மட்டுமே தியேட்டர்கள் டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று அறிவிக்கத் தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாதல்லவா?

காலா படத்தை உலகம் முழுமையும் வெளியிடும் லைகா நிறுவனத்துடன் விஷால் ஏற்படுத்திக்கொண்டுள்ள வியாபாரத் தொடர்புகளே, காலா படம் பற்றிய விஷயங்களில் விஷால் கருத்து சொல்லாமல் மௌனம் காக்கக் காரணம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் தரப்பில். தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றபோது ஒன்றாக இருந்த நிர்வாகிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. விஷால் வெற்றிக்குத் திருமங்கலம் பார்முலாவை அமல்படுத்திய ‘சினிமா அழகிரி’ ஞானவேல்ராஜா கெளரவச் செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். சுயேச்சையாக வெற்றி பெற்ற கதிரேசன், நியமனச் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் இருவருக்கும் இடையில் ஒருமித்த கருத்து கிடையாது.

துணைத் தலைவர்களாக வெற்றி பெற்ற பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் இருவரும் சங்கத்திற்கு வருவதே இல்லை என்கின்றனர். முதலாளித்துவ அரசியல் கட்சிகளைப் போலத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரை நம்பியே சங்க நடவடிக்கைகள் இருக்கின்றன. இவரது செயல்பாடுகள் அனைத்தும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்னும் போக்கில் இருக்கின்றன.

எதற்கெடுத்தாலும் அறிக்கை வெளியிடும் விஷால், காலா படத்தின் டிக்கெட் கட்ட்ணம் பற்றிப் பேசவே இல்லை. காலா படத்தின் டிக்கெட்டுகளில் 20% மட்டுமே அரசு நிர்ணயித்த கட்டணத்தில் சென்னை, மதுரை, திருச்சி, நகரங்களில் ஆன்லைனில் கிடைக்கின்றன. 80% டிக்கெட்டுகள் தியேட்டர் நிர்வாகங்களால் அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்கவோ, கண்டிக்கவோ தயக்கம் காட்டும் விஷாலின் கனத்த மெளனம் காலாவைக் காப்பாற்றவா, லைகா கட்டளைக்குக் கட்டுப்பட்டா?

மெளனம் கலைப்பாரா விஷால்?

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

புதன், 6 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon