மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 ஜுன் 2018

வாய்ப்பை வீணடித்த ரஜினி

வாய்ப்பை வீணடித்த ரஜினி

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 8

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்று ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டு, ஆராதிக்கப்பட்ட ரஜினிகாந்த் நடித்து அவரது குடும்பம் தயாரித்துள்ள காலா படம் இன்று உலகம் முழுவதும் ரீலீஸ் ஆகியுள்ளது.

காலா படம் அறிவிக்கப்பட்ட அன்றே அது எங்களுடைய குடும்பக் கதை என்று மும்பையில் இருந்து முதல் எதிர்ப்பு குரல் கிளம்பியது. படம் வெளியாகும் வரை காலா சந்தித்த பல இடையூறுகளை நீதிமன்றம், பேச்சுவார்த்தை ஆகிய வழிமுறைகளைக் கையாண்டு முடிவுக்கு கொண்டு வந்தது தயாரிப்பு தரப்பு.

ரஜினிகாந்த் நடித்து வெளியான பாபா படம் மட்டுமே தமிழகத்தில் பிரச்சினையை எதிர்கொண்டது அதுவும் பாமக என்ற அரசியல் கட்சியினால். வேறு எந்தப் படமும் காலாவுக்கு ஏற்பட்டது போன்ற சிக்கல்களைச் சந்திக்கவில்லை.

கழுவுகிற மீனில் நழுவுகிற ரகம்

முதல்வன் படத்தின் கதையை ரஜினியிடம்தான் இயக்குனர் ஷங்கர் முதலில் கூறினார். தமிழ்நாட்டுக்குத் தேவையான படம், சூப்பர் கதை; ஆனால், என்னால் நடிக்க முடியாது கலைஞர்ஜீ வருத்தப்படுவார் என்றாராம் ரஜினி.

அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக யாருடையை எதிர்ப்பையும், எதிர்கொள்ள விரும்பாத கழுவுகிற மீனில் நழுவுகிற ரகம் ரஜினிகாந்த். அதனால்தான் அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளின் அபிமானத்துக்குரிய நடிகராக, பயத்தை உண்டாக்குபவராக ரஜினி காலம் கடத்த முடிந்தது.

கபாலியின் தோல்வி ரஜினியைக் கவலை கொள்ள செய்தது, இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் போன்று கதாநாயக பிம்பத்திலிருந்து கதை நாயகனாகத் தன்னை மாற்றிக்கொள்ள மனதளவில் ரஜினியால் முடியவில்லை.

கபாலிக்குப் பின் 2.0 தன்னை உச்சபட்ச நட்சத்திரமாகத் தக்கவைக்க உதவும் என எதிர் பார்த்தவருக்கு சிந்துபாத் கதை போன்று ஷங்கர் 2.0 படத்தின் வேலைகளைத் தொடர்ந்துகொண்டிருக்க, எப்போது வரும் என அவரால் கூற முடியாததால் காலாவைக் குடும்ப நெருக்கடியில் தொடங்கினார்.

எல்லோரும் 2.0 எதிர்பார்த்திருக்க காலாவை வியாபார ரீதியாக விநியோகஸ்தர்கள் அணுகத் தயக்கம் காட்டினார்கள்.

காலாவை முடித்த கையோடு ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் ஆண்டவன் அனுமதித்தால் கட்சி தொடங்குவேன் என 70 வயதில் அறிவித்தார்.

கட்சி வேறுபாடு இன்றி எல்லாத் தரப்பினராலும் சினிமாவில் ரசிக்கப்பட்ட ஒரே நடிகர் என்ற சிறப்பு ரஜினிக்கு இருந்தது.

அரசியல் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்தது முதல் நடிகர் என்ற பிம்பம் பின்னுக்குத் தள்ளப்பட்டு சிஸ்டம் சரியில்லை என்று சொன்னவர் அதனைச் சரி செய்ய என்ன முயற்சி எடுக்கிறார் என்பதைத் தமிழ்ச் சமூகம் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியதை அவர் கவனத்தில் கொள்ளவில்லை

அரசியல், சமூகத்தில் நடக்கும் அநீதிகள் பற்றி அரசியல் கட்சி தலைவராக ரஜினியின் கருத்தை எதிர்பார்க்கத் தொடங்கியது தமிழகம்.

ஏதோ ஒரு நெருக்கடியில் அரசியலுக்கு வருவேன் என அறிவித்துவிட்டாரே தவிர அதற்கான ஆளுமை, தகுதியை உடனடியாக விலைக்கு வாங்கிவிட முடியாது, அது இயல்பாக வர வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளவே அவருக்குப் பல மாதங்கள் ஆனது.

அதன் வெளிப்பாடுதான் தூத்துக்குடிக்கு நேரில் சென்று வந்த பின் கூறிய கருத்துகளில் முரண்பாடுகளும் முரட்டுத்தனமான ஆணவமும்.

அதற்கு எழுந்த எதிர்ப்புக்கு உடனடியாக வருத்தம் தெரிவித்தாலும் அதில் அரசியல் பக்குவம் இல்லை.

இவை எல்லாம் சேர்ந்துதான் காலாவுக்கான எதிர்ப்பாக விஸ்வரூபமெடுத்து நிற்க்கிறது.

கபாலி வரை என்ன மொக்கை படமாக இருந்தாலும் பார்த்து ரசித்துப் பரவசப்பட்டவர்கள் சமூக வலைதளங்களில் காலாவுக்கு எதிரான நிலைபாட்டை உலகம் முழுமையும் எடுக்கக் காரணம் சுயநலம் சார்ந்த அரசியல் நிலைப்பாடுதான்.

தமிழ் சினிமாவுக்கு இயற்கை வழங்கிய கொடை ரஜினிகாந்த் என்கிற நடிகன் என்பதை அவரது எதிரிகள்கூட மறுக்க மாட்டார்கள். அந்த வாய்ப்பை ரஜினிகாந்த் முறையாகப் பயன்படுத்தத் தவறியதன் விளைவு கன்னடத்தில் பேசிக் கலங்கவைத்துவிட்டது அவரை.

ரஜினி என்ன செய்திருக்க வேண்டும்?

சிஸ்டம் சரியில்லை என்றவர் அதனை எப்படிச் சரி செய்வேன் என்பதை தனது காலா படத்தின் வியாபாரம், வெளியீடு, டிக்கட் விற்பனை மூலம் செய்துகாட்ட இயற்கை அவருக்கு வழங்கிய வாய்ப்பைச் சரியாக பயன்படுத்தியிருந்தால் அரசியல் கட்சி சார்பு இல்லாத அனைவரும் அவர் பின் அணிவகுத்திருக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

தான் நடித்து சம்பாதித்துதான் வாழ்க்கைச் செலவுகளைச் செய்ய வேண்டும் என்ற நிலை ரஜினிக்கு இல்லை. கடந்த கால் நூற்றாண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக அவரை அழகு பார்த்த தமிழக மக்களுக்கு இலவசமாக எதையும் அவர் கொடுக்க வேண்டியதில்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்தில் அனைத்து திரையரங்குகளும் காலா டிக்கட்டை விற்பனை செய்ய வேண்டும்.

கூடுதல் பணம் கொடுத்து எனது ரசிகர்கள், பொதுமக்கள் வாங்கக் கூடாது என பகிரங்கமாக ரஜினி அறிக்கை ஒன்ன்ற வெளியிட்டிருந்தால் காலாவுக்கான எதிர்ப்புகள் காணாமல் போயிருக்கும்.

என் கருத்தில் உடன்படாத கர்நாடகாவில் நான் நடிக்கும் படங்களை இனிமேல் ரீலீஸ் செய்ய மாட்டேன் என்னை வாழவைத்ததமிழ் மண்ணின் நியாயம் பக்கம் இருப்பேன் என்று ரஜினி கூறுவதால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்காது,

கர்நாடக வியாபாரத்தின் மூலம் கிடைப்பது நஷ்டமல்ல, லாபத்தின் சதவீதம் குறைந்திருக்கும். ரஜினியின் சம்பளம் உள்பட 75 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள காலா 150 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது,

விளம்பரதாரர்கள் மூலம் கிடைத்த வருவாய் 50 கோடி கூடுதல் வருவாய். இதில் கர்நாடக வியாபார வருவாய் கோடி இழப்பு எட்டு கோடிதான்.

தமிழகத்தில் காலாவுக்கான எதிர்பார்ப்பு, படம் பார்த்தவர்களின் மனநிலை, என்ன வசூல் ஆகிய தகவல்கள் 7 மணிப் பதிப்பில்

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வியாழன், 7 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon