மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 ஜுன் 2018

காலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10!

காலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10!

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 14

இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் ரஜினிகாந்த் என்ற நடிகருக்கு அவரது ரசிகர்களிடத்தில் இருக்கும் இமேஜ், கதாநாயக பிம்பம் இவற்றுக்கு ஏற்ப திரைக்கதை அமைப்பார்கள். இது வணிக ரீதியான வெற்றிக்கு அடிப்படையானது. அதனால்தான் இவர்கள் இயக்கிய ரஜினிகாந்த் படங்கள் முதலுக்கு மோசம் செய்ததில்லை. இவர்கள் கொடுத்த வெற்றிப் படங்களின் முதலீடு - லாபத்தை ரஜினிகாந்த் படங்களை இயக்கிய வேறு இயக்குநர்களால் இன்று வரை நெருங்க முடியவில்லை.

கே.எஸ்.ரவிக்குமார் கடைசியாக இயக்கிய லிங்கா படம் அதிக விலைக்கு வியாபாரம் செய்யப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டது. ரஜினி படங்களுக்கு இயல்பாக கிடைக்கும் வசூல்தான் திரும்பியது. இயக்குனர் ஷங்கர், பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளுக்குள் ரஜினி என்கிற நாயக பிம்பத்தை முன்வைத்துத் திரைக்கதை அமைப்பார். அதனால் ஷங்கர் - ரஜினி படம் என்றால் ரசிகர்களிடம் சிறப்பு கவனத்தை பெறும். அதிகமான முதலீட்டில் குறைவான லாபத்தை அல்லது நஷ்டத்தை இவர் படம் தயாரிப்பாளர்களுக்குப் பெற்றுத் தரும்.

இயக்குனர் ரஞ்சித்திடம் தான் எழுதிய திரைக்கதைக்கு ஏற்ப ரஜினிகாந்தை மாற்றிவிடும் சூட்சமம் இருந்தது. எஸ்.பி.முத்துராமனுக்குப் பின், தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த இரு படங்களை இயக்கியவர் ரஞ்சித். இவர் இயக்கிய கபாலி, காலா இரு படங்களின் திரைக்கதை ஒன்லைன் ஒன்றுதான். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை மீட்கப் போராடும் வயதான கதாநாயகன்.

கபாலி, ரஜினி படமாக இல்லாமல் இயக்குனரின் கொள்கைப் பிரச்சார படமாக இருந்ததால் காலாவும் அது போன்றதொரு படமாகவே இருக்கும் என்று ஊடகங்கள் எழுதிவந்த சூழலில் ஆடியோ வெளியீட்டு விழாவில் காலா என் படம் என்றார் ரஜினிகாந்த். 80 கோடி எங்கே என்பதைக் கூறாமல் சம்பந்தமில்லாமல் நீட்டி முழக்கவில்லை. மேற்சொன்ன தகவலுக்கும் 80 கோடிக்கும் தொடர்பு இருக்கிறது. நேற்றைய தினம் வெளிநாட்டு வியாபாரத்தையும், வருமானத்தையும் குறிப்பிட்டிருந்தோம். தமிழகத்தில் எஞ்சிய 80 கோடியில் என்ன கிடைத்ததது; கிடைக்கப் போகிறது?

ரஜினி படங்களின் வசூலில் தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, நெல்லை விநியோகப் பகுதிகள் ஆதிக்கம் செலுத்தும்.

லிங்கா, கபாலியைப் போன்று தன் பெயரில் வெளியாகி காலா பட வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு வீட்டுக் கதவையும், மீடியா கதவையும் விநியோகஸ்தர்கள் தட்டி விடக் கூடாது என்பதில் ரஜினிகாந்த் தெளிவாக இருந்தார் என்கிறது அவரது வட்டாரம். அதனால் தமிழ்நாடு முழுவதும் விநியோக முறையில் காலா படம் வியாபாரம் செய்யப்பட்டது.

திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மூன்று பகுதிகளும் முறையே 7 கோடி, 8 கோடி, 3.75 கோடி ரூபாயாக, மொத்தம் 18.75 கோடிக்கு வியாபாரமான காலா 126 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. நான்கு நாட்களில் சுமார் 9.50 கோடி ரூபாயை மொத்த வசூலாகப் பெற்றுள்ளது.

மதுரை ஏரியாவில் கபாலி கல்லா கட்டியிருந்தும், காலா கலகலத்துப் போனதற்குக் காரணம் தூத்துக்குடிக்கு ரஜினி போய் வந்த பின் மக்கள் போராட்டத்துக்கு எதிராக பேசியது; கச்சநத்தம் ஆணவப் படுகொலைக்குப் பின் அதனைக் கண்டித்துப் படத்தின் இயக்குனர் ரஞ்சித் மதுரையில் உண்ணாவிரதம் இருந்தது ஆகிய சம்பவங்கள் பெரும்பான்மை சமூக மக்களை வருத்தத்திற்குள்ளாக்கின என்கின்றன தியேட்டர் வட்டாரங்கள்.

குறிப்பிட்ட சமூகத்தை அடையாளப்படுத்திக்கொண்டு பிரச்சார தொனியில் பேசும் ரஞ்சித் படத்தைப் பார்க்காமல் தவிர்த்துவிடுவோம் என அந்தச் சமூகத்தினர் முடிவு எடுத்தனர் என்கிறார் மதுரை விநியோகஸ்தர் மணி. காலா ரஞ்சித் படம். நாங்கள் பார்க்க விரும்புவது ரஜினி படத்தை. அடுத்து வர உள்ள 2.0 படத்தை பார்த்துக்கொள்வோம் என்றார் ரஜினி மன்றத் தலைவர் சரவணன். குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காலா படம் வசூலில் கதறியுள்ளது.

முதலீடான 18.75 கோடி அசல், விநியோகஸ்தர்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றால் சுமார் 25 கோடி வரை வசூல் ஆக வேண்டும். காலா ஓடி முடியும்போது சுமார் 13 கோடி வரை பங்குத் தொகை கிடைக்கலாம். எஞ்சிய தொகை கிடைக்க வாய்ப்பில்லை. இதுதான் காலாவின் கல்லா இருப்பாக இருக்கும். அப்புறம் எப்படி 3 நாட்களில் உலகம் முழுவதும்100 கோடி? 80 கோடி மீதியில் 10 கோடி எங்கே எனத் தெரிந்துவிட்டது.

எஞ்சிய 70 கோடியில் மிகப் பெரும் வசூல் பகுதியான கொங்கு மண்டலத்தில் என்ன வசூல் செய்திருக்கும் காலா? நாளைக் காலை 7 மணிக்கு.

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வாய்ப்பை வீணடித்த ரஜினி

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்

குடை சாய்ந்த கோபுரம்!

ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை

காலா வசூலித்த 100 கோடியைத் தேடி...

எங்கே அந்த நூறு கோடி?

செவ்வாய், 12 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon