மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 ஜுன் 2018

செங்கல்பட்டில் நடந்த காலா பஞ்சாயத்து!

செங்கல்பட்டில் நடந்த காலா பஞ்சாயத்து!

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 24

காலாவுடன் ஒரு வியாபாரப் பயணம்

ரஜினிகாந்த் நடிப்பில் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படம் லிங்கா. குறுகிய காலத் தயாரிப்பாக வெளியான லிங்கா படம் ரஜினி படங்களின் மார்க்கெட் மதிப்பைக் காட்டிலும் இரு மடங்கு விலை வைத்து விற்கப்பட்டதால் படம் வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

ராக்லைன் வெங்கடேஷிடமிருந்து மதன் வாங்கி, அதன்பிறகு இவரிடமிருந்து விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கியதால் கூடுதல் விலை எனக் கூறப்பட்டது. படம் திரையிட்ட மற்றும் வாங்கிய விநியோகஸ்தர்கள் யாரிடம் நஷ்டத்தைக் கேட்பது எனத் தெரியாமல் தடுமாறினார்கள். படம் வெளியான முதல் வாரமே விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை சரி செய்யக் கேட்டு ரஜினிக்கு எதிராகப் போராடத் தொடங்கினார்கள்.

அதுபோன்றதொரு நிலைமை காலா படத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ரஜினி தரப்பினர் தெளிவாக இருந்தனர். லைகா நிறுவனத்திற்கு விநியோக அடிப்படையில் காலா கொடுக்கப்பட்டிருந்தது. அதே நேரம் முடிவு எடுக்கும் அதிகாரம் தனுஷ் - ரஜினி கட்டுப்பாட்டில் இருந்தது. அடுத்து வரக்கூடிய 2.0 படத்தைத் தமிழகத்தில் திரையிடும்போது என்னவெல்லாம் பிரச்சினைகள் ஏற்படும், திருட்டுத்தனங்கள் அரங்கேறும் என்பதனைக் காலா படம் மூலம் கண்டறிய முயற்சி எடுத்தது லைகா.

செங்கல்பட்டு விநியோக உரிமையை அவுட்ரேட் அடிப்படையில் கேட்டும் கொடுக்காமல் 12 கோடி ரூபாய் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு விநியோக அடிப்படையில் வழங்கப்பட்டது. படம் வசூல் ஆகவில்லை என்றால் பாக்கி அட்வான்ஸ் தொகையைத் திருப்பிக் கொடுக்கும் விநியோக முறையில் திரையரங்குகள் நஷ்டத்திலிருந்து தப்பித்துவிட இயலும். லாபம், நஷ்டம் என முழுப் பொறுப்பும் தயாரிப்பாளரைச் சார்ந்தது.

படத்தின் விநியோக உரிமையை வாங்கிய அருள்பதி தரப்பு, முடிந்தவரை சிறிய ஊர்களில், தனித் தியேட்டர் இருக்கும் இடங்களில் எம்ஜி, பிக்சட் ஹையர் முறையில் காலா படம் திரையிட ஒப்பந்தம் செய்தனர். இது லைக்கா நிறுவனத்துடன் செய்து கொண்ட விநியோக ஒப்பந்தத்துக்கு எதிரானது. படம் ரிலீஸுக்குப் பின் தியேட்டர்கள் கொடுக்கும் டிக்கெட் விற்பனைக் கணக்கு சரியாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய தியேட்டரில் திடீர் விசிட் செய்யும் ஸ்குவாடு ஒன்றைத் தமிழகம் முழுவதும் அனுப்பியது லைகா.

செங்கல்பட்டு ஏரியாவில் திடீர் விசிட் செய்த குழு சென்னைக்கு அருகில் உள்ள மேடவாக்கத்தில் காலா படம் திரையிடப்பட்ட தியேட்டருக்குச் சென்றது. படம் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர் எண்ணிக்கை, ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருந்த எண்ணிக்கை இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் அங்கு சென்றவர்கள்.

டிக்கெட் விற்பனையில் தியேட்டர் நிர்வாகம் திருட்டுக் கணக்கு எழுதியதாகக் கூற, வாக்குவாதம் ஏற்பட்டது. காலா படம் பிக்சட் ஹையர் அடிப்படையில் திரையிடப்பட்டிருக்கிறது. படம் வசூல் ஆனாலும் இல்லை என்றாலும் அது எங்களைச் சார்ந்தது. அதனால் டிக்கெட் கணக்கு விஷயத்தில் லைகா மட்டுமல்ல விநியோகஸ்தர் அருள்பதிக்கும்கூட எங்களைக் குற்றம் சுமத்தவோ, கேள்வி கேட்கவோ உரிமையில்லை என்றனர்.

அதிர்ச்சி அடைந்த லைகா தரப்பு அருள்பதியிடம் விளக்கம் கேட்டது. அதற்கு அவரோ ஹையர் அடிப்படையில் காலா திரைப்படம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை எனக் கூறினார். தியேட்டர் நிர்வாகம் அருள்பதி சொல்வது போன்று லைகாவிடம் சொல்லுங்கள் எனக் கூறியதால், இதனால் ஏற்படும் நஷ்டத்தைத் தாங்கள் ஏற்பதாக உறுதியளித்தனர் தியேட்டர்காரர்கள்.

தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையில் நடைபெறும் திருட்டுக்கு எதிராகத் தீர்ப்பு சொல்ல வேண்டிய நாட்டாமை பொறுப்பில் உள்ளவர் செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி. அவரே பொய் சொல்லும்படி சொன்ன தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்தது லைகா தரப்பு.

பிரச்சினைக்கு முடிவு காண பஞ்சாயத்து கூட்டப்பட்டது. குற்றம் செய்யச் சொன்னவரே அதற்குத் தீர்ப்பு சொல்பவர்...

என்ன முடிவு எடுத்தார்கள்?

நாளை இரவு 7 மணிப் பதிப்பில்...

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வாய்ப்பை வீணடித்த ரஜினி

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்

குடை சாய்ந்த கோபுரம்!

ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை

காலா வசூலித்த 100 கோடியைத் தேடி...

எங்கே அந்த நூறு கோடி?

காலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10!

கோவையில் வெளுத்த காலா சாயம்!

காலாவைக் காப்பாற்றிய செங்கல்பட்டு!

வட ஆற்காட்டில் சிதைந்த 6 கோடிக் கனவு!

கால்பந்தாக உருட்டப்பட்ட காலா!

சாதியக் கட்டுமானத்தால் சரிந்த காலா!

சென்னை என்னும் வழுக்குப் பாறை!

விதிமுறைகளை மீறியும் நிரம்பாத கல்லா!

இந்தப் பின்னடைவு தற்காலிகமானதா, நிரந்தரமானதா?

காலா: தமிழ் சினிமா பெற்றது, கற்றது என்ன?

புதன், 27 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon