மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 2 டிச 2020

சிறப்புக் கட்டுரை: நாட்டின் வரலாறு சொல்லும் நார்ட்டன் வாழ்க்கை!

சிறப்புக் கட்டுரை: நாட்டின் வரலாறு சொல்லும் நார்ட்டன் வாழ்க்கை!

காந்தி பாலசுப்பிரமணியன்

ஏர்ட்லி நார்ட்டனின் நினைவு தினமான இன்று (ஜூலை 13) அவரைப் பற்றிய நூலின் அறிமுகம்

ஏர்ட்லி நார்ட்டன் (1852 – 1931) மிகப் பிரபலமான பாரிஸ்டராக இருந்தார் என்றும் இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினராக இருந்தார் என்றும் பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், மெட்ராஸில் வழக்கறிஞராகப் பிரபலமாவதற்கு முன்பு தொழில் செய்யும் உரிமையையே இழக்க நேரிடும் அளவிற்குப் பெரும் சோதனையைச் சந்தித்தார் என்பதும், காங்கிரஸ்காரராகப் பலர் அறியாத குறிப்பிடத்தக்க பணிகள் சிலவற்றைச் செய்தார் என்றும் எத்தனை பேருக்குத் தெரியும்?

உதாரணமாக, சார்ல்ஸ் பிராட்லா என்பவர் இந்தியர்களுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சேவைகள் ஆற்றினார் என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், அவரை இந்திய அரசியல் உரிமைப் போராட்டப் பணிக்காக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று முதன்முதலில் தன் காங்கிரஸ் தோழர்களிடம் கூறியது நார்ட்டன் என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த ஜூலை 7 அன்று ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் Eardley Norton and the Indian National Struggle என்ற தலைப்பில் சுரேஷ் பாலகிருஷ்ணன் உரையாற்றினார். இந்திய தேசிய போராட்டத்தில் நார்ட்டனின் பங்கையும் காங்கிரஸ் கட்சியில் அவருடைய பணிகளையும் விவரித்து இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இவர் முன்பொரு முறை ‘சென்னையின் பிரபல நார்ட்டன்’களைப் பற்றி மின்னம்பலத்தில் கட்டுரை எழுதியிருந்தார் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தக் கட்டுரையின் முடிவில் அவர் நார்ட்டனின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதிக்கொண்டிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

நார்ட்டன் தன்னுடைய காலத்தில் மிகவும் பிரபலமானவராக இருந்தபோதிலும், அவர் இறந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னும் அவருடைய வாழ்க்கை வரலாறு சமீப காலம்வரை எழுதப்படவில்லை. அவர் இறந்து இன்றுடன் சரியாக 87 வருடங்கள் ஆகின்றன. 1931இல் இதே ஜூலை 13 அன்று அவர் இறந்தார். இப்போதுதான் முதன்முறையாக, இரண்டு பாகங்களில் (1,200 பக்கங்கள்) Eardley Norton: A Biography என்று ஆங்கிலத்தில் மிகச் சிறந்த நூல் ஒன்று வெளிவந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வெளியான இந்த நூலின் ஆசிரியர் சுரேஷ் பாலகிருஷ்ணன்.

பல நூற்றுக்கணக்கான அரிய ஆவணங்களை ஆராய்ந்து இதுவரை வெளிவராத, யாராலும் தொகுக்கப்படாத பல அரிய செய்திகளைத் தொகுத்து இந்நூலைத் தயார் செய்திருக்கிறார். இந்நூலில் மொத்தம் 70 அத்தியாயங்களும் 3 அனுபந்தங்களும் உள்ளன. 140க்கும் மேற்பட்ட அரிய படங்களும் உள்ளன. அவற்றில் பல, வண்ணப் படங்கள்!

​நார்ட்டன் சென்னையில் வாழ்ந்த குழந்தைப் பருவம், இங்கிலாந்தில் அவருடைய பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை, மீண்டும் சென்னைக்குத் திரும்பி வருவது, வழக்கறிஞராக முதலில் போராடி, பிறகு உச்ச நிலையை அடைவது, பரபரப்பு ஏற்படுத்திய பல வழக்குகளில் ஆஜராகி வெற்றி கண்டது, சிலவற்றில் தோல்வி அடைந்தது, சென்னையைவிட்டு கொல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தது, இந்தியாவின் மிகச் சிறந்த வழக்கறிஞர் என்று பெயர் பெற்றபின் ஓய்வுபெற்று மீண்டும் இங்கிலாந்துக்கே திரும்பிச் சென்றது என அவருடைய வாழ்க்கையின் எல்லாக் காலகட்டங்களும் இந்நூலில் பதிவாகியுள்ளன. பல்வேறு பொறுப்புகளில் அவர் ஆற்றிய பணிகளும் அவருடைய வெற்றி தோல்விகளும் ஏற்றத் தாழ்வுகளும் அவர் கண்ட பெரும் சோதனைகளும் இமாலயச் சாதனைகளும் இந்நூலில் மிக விரிவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட மனிதருடைய விரிவான வாழ்க்கை வரலாறு ஏன் இதுவரை எழுதப்படவில்லை என்று நூலாசிரியர் முன்னுரையில் வியப்படைகிறார். இந்நூலைப் படித்த பின் நாமும் அதே வியப்படைகிறோம்!

இந்திய அரசியல் வரலாற்றின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது நார்ட்டனின் காங்கிரஸ் பணிகள் இந்நூலில் விரிவாக இடம்பெறுகின்றன. அவற்றுள் சில முக்கிய அம்சங்களின் சாராம்சத்தை நூலாசிரியர் ரோஜா முத்தையா நூலகத்தில் கொடுத்த உரையில் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உரையின் காணொளி Youtubeஇல் விரைவில் வெளிவர உள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான மைல் கற்களாகிய வங்கப் பிரிவினை, சுதேசி இயக்கம், வங்காளத்தில் பயங்கரவாதம், மார்லி - மின்டோ சீர்திருத்தங்கள், முதலாவது உலக யுத்தத்தில் இந்தியாவின் பங்கு, ஆனி பெசன்ட் அம்மையார் துவங்கிய சுயாட்சி இயக்கம் (Home Rule Movement), ஜாலியன்வாலா பாக் பயங்கரம், பஞ்சாபில் ராணுவ ஆட்சி, ரௌலட் சட்டங்கள், மொன்டகு - செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்கள், காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், சத்யாகிரகப் போராட்டம் இவற்றைப் பற்றியெல்லாம் நார்ட்டன் கூறிய கருத்துகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள இந்நூலைப் படியுங்கள்.

தாதாபாய் நவுரோஜி, கோபால கிருஷ்ண கோகலே, பால கங்காதர திலகர், அரோபிந்தோ, ஆனி பெசன்ட் அம்மையார் மற்றும் பிரபலமான பல தலைவர்கள் இந்நூலில் இடம் பெறுகின்றனர். காந்தி இடம் பெறுகிறாரா என்று கேட்டால் அவருக்கென்று தனி அத்தியாயமே இருக்கிறது. எல்லோரும் நார்ட்டனின் வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களில் வந்து செல்பவர்கள். அவர்களைப் பற்றியும் அவர்களுடைய அரசியல் கொள்கைகள், செயல்பாடுகளைப் பற்றியும் நார்ட்டனின் கருத்துகள், அவர்கள் நார்ட்டனைப் பற்றிச் சொல்லும் கருத்துகள் இவையெல்லாம் இந்நூலில் இடம் பெறுகின்றன. காந்தி நார்ட்டனைப் பற்றிச் சொல்வது, நார்ட்டன் காந்தியைப் பற்றியும் அவருடைய அரசியல் செய்முறைகள் பற்றியும் சொல்லும் கருத்துகள் இதுவரை தொகுக்கப்படாத செய்திகளில் முக்கியமானவை என்றே சொல்ல வேண்டும். அலிப்பூர் குண்டு வழக்கைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அந்தக் கதை இடம் பெறாமல் நார்ட்டனின் வாழ்க்கை வரலாறு முழுமை அடையாது!

ஆக, இந்த நூல் நார்ட்டன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மட்டும் அல்ல. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்ப மற்றும் பிற்காலத்திய கட்டங்கள் சிலவற்றைப் பற்றிய மிக அரிய, இது வரை தொகுக்கப்படாத, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறியாத பல செய்திகளைக் கொண்ட நூல். இத்தனை அம்சங்களைக் கொண்டுள்ள இந்த நூலை ஒரு வரலாற்று நூல் என்றே சொல்ல வேண்டும். வரலாற்று ஆய்வாளர்களுக்குக் கிடைத்த பொக்கிஷம் என்றும் சொல்லலாம்!

சரி, நூலில் குறைகளே இல்லையா என்றால் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இந்த நூல் மிகவும் பெரிய நூலாகத் தென்படலாம். இரண்டாவது, நார்ட்டனின் உரைகள், எழுத்துகளிலிருந்து நூலாசிரியர் பல பத்திகளை அப்படியே கொடுத்திருக்கிறார். நார்ட்டனின் ஆங்கிலம் பழைய காலத்தைச் சேர்ந்தது. சில இடங்களில் கடினமான நடையைக் கொண்டது. இந்தக் காலத்துக்கேற்றவாறு நூலாசிரியர் அவற்றை எளிமைப்படுத்தி, அதன் சாராம்சத்தைத் தன் பாணியில் தெரிவித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இரண்டு பாகங்கள் கொண்ட இந்நூலின் விலையையும் கிடைக்குமிடத்தையும் அறிய www.oldmadraspress.com என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

சென்னையில் வசித்த நார்ட்டன்கள் பற்றி மின்னம்பலத்தில் சுரேஷ் பாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரை

வெள்ளி, 13 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon