மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

திராவிட் வைத்த நம்பிக்கை!

திராவிட் வைத்த நம்பிக்கை!

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரிஷப் பந்த், இங்கிலாந்து மண்ணில் சாதிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் திராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றிய போதிலும்; 1-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இந்த நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் விரித்திமான் சஹா இடம்பெறாததால் அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த்திற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்தியா 'ஏ', மேற்கிந்தியத் தீவுகள் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு தொடரில் சிறப்பாக விளையாடியதையடுத்து அவருக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் மாறுபட்ட பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி ரிஷப் பந்த் சாதிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் திராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் "ரிஷப் பந்த் வித்தியாசமாக பேட்டிங் செய்வதில் சிறப்பானவர். நிலைமையைக் கணித்து விளையாடுபவர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்தான். ஆனால், சிவப்பு பந்து (டெஸ்ட்) போட்டியில் சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்றபடி விளையாடக்கூடியவர். மேற்கிந்தியத் தீவுகள் ‘ஏ’ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேஸிங்கின்போது ஜெயந்த் யாதவுடன் இணைந்து ரிஷப் எடுத்த 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அபாரம். முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் முக்கியமான கட்டத்தில் நிலைமையை அறிந்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் சேர்த்தார். அவர் எப்படி விளையாடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த ரஞ்சி தொடரிலும் அதிரடியாக 900க்கும் அதிகமான ரன்களை எடுத்திருந்தார். அதனால் அவர் இங்கிலாந்து மண்ணில் கண்டிப்பாக சாதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்றார்.

செவ்வாய், 24 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon