மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

நெடுஞ்சாலைத் துறை ஊழல்: அமைச்சர் மறுப்பு!

நெடுஞ்சாலைத் துறை ஊழல்: அமைச்சர் மறுப்பு!

நெடுஞ்சாலைத் துறையின் சாலை பராமரிப்புப் பணிகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நெடுஞ்சாலைத் துறை பணிகளுக்கான ஒப்பந்ததாரர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 23) ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து மனு அளித்தார். நெடுங்சாலைத் துறை முறைகேடு விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கத் தயங்கினால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறையின் சாலை பராமரிப்புப் பணிகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சாலை பராமரிப்பு பணிகள் குறித்து வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது. உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி நெடுஞ்சாலையின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

“நெடுஞ்சாலைத் துறையை பொறுத்தவரை சாலைகளை செம்மையாகப் பராமரித்தல், உடனுக்குடன் பழுதுகளை நீக்குவது, மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளைக் களைய பல்வேறு விதமான பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை என்பது அரசுக்கு நிதி சேமிப்பை உண்டாகிறதே தவிர, நிதி இழப்பும், எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்த அமைச்சர், செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டத்தின் முறையில் செயல்படுத்தப்படும் ஒப்பந்தம் முறை குறித்து குறிப்பிட்ட நாளிதழ் இந்தச் செய்தியினை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் பொள்ளாச்சி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் விருதுநகர் கோட்டங்களில் செயல்படுத்தப்பட்டதால் அரசுக்கு ரூபாய் 527.73 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

செவ்வாய், 24 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon