மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 22 ஜன 2020

சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்

சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்

முரளி சண்முகவேலன்

லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்

சாம் செல்வன் என்ற ட்ரினிடாட் தமிழர் பிரிட்டனில் உள்ள கரிபீய கறுப்பு இலக்கியத்தை முன்னெடுத்ததில் பெரும்பங்கு வகித்ததை இரண்டு வாரத்திற்கு முன் நாம் பார்த்தோம் (போன வாரம் இத்தொடர் எழுத முடியாது போனதற்கு மன்னிக்க). பிரிட்டனின் சமகாலக் கறுப்பு அறிவுஜீவிகளின் செயல்பாடுகளில் சிவானந்தன் என்ற கொழும்பில் பிறந்த தமிழர் பற்றியவரின் பங்களிப்பை இந்த வாரம் பார்க்கலாம்.

அதற்கு முன் ஒரு விளக்கம். பிரிட்டனில் உள்ள கறுப்பின வாழ்க்கைக்கு உரம் போ(ட்)ட பல நூறு கரீபிய அல்லது மேற்கு இந்திய இலக்கிய சாம்பவான்கள் பங்களித்து உள்ளனர். சமகாலத்தில் உள்ள முக்கியமான எழுத்தாளர்களின் பட்டியல் இங்கே. பெண் எழுத்தாளர்களின் பட்டியல் இங்கே. மற்றும் இங்கே. பின்னர் ஏன் இரண்டு தமிழர்களைப் பற்றி மட்டும் முன்னுரிமைப்படுத்த வேண்டும்?

முதல் காரணம் நான் இந்தக் கட்டுரையை தமிழர்களுக்கு அல்லது தமிழில் படிக்கும் வாசகர்களுக்காக எழுதுவது ஆகும். ஆனால் அதை மட்டும் காரணமாகச் சொன்னால் வெறும் இனப்பெருமை பேசுவதாக ஆகிவிடும். அதைத் தாண்டியும் முக்கியமான காரணங்கள் உள்ளன. சாம் செல்வன் அறிமுகப்படுத்திய நாட்டு நடை (Creolised English). இது மிக முக்கியம். அதாவது சாம் செல்வன், பிரிட்டனின் கி. ராஜநாரயணன் என சொல்லிக் கொண்டாடலாம். அது மட்டுமல்ல சாம் கரிபீயக் கறுப்பு இலக்கியவாதிகளை ஓரிடத்தில் ஒருங்கிணைத்து ஒரு உரையாடலைத் தொடங்கி வைத்திருக்கிறார். பின்னாளில் மேற்கிந்தியக் கரிபீய இலக்கிய வெளியை பிரிட்டனில் உருவாக்குவதில் தலையாய பங்கினை வகித்துள்ளார். இதுவே நான் சாம் செல்வன் என்ற ட்ரினிடாட் தமிழரை முக்கியப்படுத்துவதற்கான ஒரு காரணம்.

இப்போது சிவானந்தனுக்கு வருவோம்.

சிவானந்தன் 2018 ஜனவரி மாதம் இறந்தபோது உள்ளூர் ஊடகங்கள் ‘பிரிட்டனின் மூத்த கறுப்பு அறிவிஜீவி இறந்தார்’ என்று எழுதின. இவரைக் கறுப்பு அறிவிஜீவி என ஊடகங்கள் அழைத்தது ஒருபுறமிருக்கட்டும். இந்தக் கறுப்பு அறிவிஜீவியின் கொடையை அங்கீகரித்ததில் ஒரு முக்கியமான பிரபலமான பிரிட்டனின் மற்றொரு அறிவு ஜீவி ஸ்டுவர்ட் ஹால்.

ஸ்டூவர்ட் ஹால் யார்?

பிரிட்டனின் கறுப்பு அறிவுஜீவிகளில் ஒரு முக்கியமான ஆளுமை ஸ்டுவர்ட் ஹால். கறுப்புக் கலாச்சாரம் பற்றிய வாதங்களில் இவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. கலாச்சார ஆய்வினில் மார்க்சியத்தைப்புகுத்தியதில் இவரின் பங்கு மகத்தானது. பிர்மிங்காம் கலாச்சாரப் படிப்புகள் (Birmingham Cultural readies) என்ற பெயரில் பிரிட்டனின் ஊடகம், மற்றும் தினசரிக் கலாச்சாரத்தின் நிற மற்றும் இனக்கூறுகளைக்கூர்மையாக ஆய்ந்தவர். பிரிட்டனின் பன்மைக் கலாச்சாரத்தன்மையின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசியவர்களில் மிக முக்கியமான கறுப்பு ஆளுமைகளில் ஹால் முதன்மையானவர். தாட்சரின் கொள்கைகள் (அதாவது நவதாராள கொள்கைகள்) எவ்வாறு கறுப்பினத்தாரை குறிவைத்துத் தாக்குகின்றன என்பதைப் பொது வெளியில் முன்வைத்தார். மார்க்சிஸம் டுடே என்ற ஆய்விதழை நடத்திவந்தார்.

ஸ்டுவர்ட் ஹாலிடம் தொடர்ந்து சண்டை பிடித்தவர் சிவானந்தன். ஹால் பிரிட்டனின் மீடியாக்களின் செல்லப் பிள்ளை. சிவானந்தன் அப்படிக் கிடையாது. நிழல் உலக அறிவுஜீவி. ஆனால் ஸ்டுவர்ட் சிவானந்தன் மீது மாறாத மதிப்பு வைத்திருந்தார்.

மார்க்சிஸம் டுடேவில் 1988ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் மேற்குலக நாடுகள் இயந்திரமயமாக்கலை விட்டு மீறிக் கணினி உலகத்திற்குச் செல்வதை உழைப்பாளர்களின் பார்வையில் ஸ்டூவர்ட் பதிவு செய்திருந்தார். கணினியின் பங்கானது இயந்திரப் புரட்சியில் விளைந்த உழைப்பாளர்களின் (வறுமை) நிலையை மாற்றக்கூடும் எனவும், அரசு மற்றும் யதேச்சாதிகாரத்திற்கு எதிராகக் கலாச்சார எதிர்வினை நடைபெற வாய்ப்புள்ளது எனவும் ஸ்டூவர்ட் கணித்தார்.

இந்த எண்ண அலைகளோடு பல மேற்குலக தாராளவாதிகள், நவ மார்க்ஸிஸ்டுகள் ஒத்துப்போயினர்.

இந்தக் கணிப்புக்கு சிவானந்தனின் நெடிய எதிர்வினையைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்: புதிய உலகத்தின் அடிப்படையும் முதலீட்டியத்தை நம்பியே இயங்குகிறது / இயங்கும். எனவே முதலீட்டியத்தின் அடிப்படையில் வருகின்ற கணினி உலகில் எதுவும் மாறாது எனவும், அதனடிப்படையில் கட்டியெழுப்பப்படுகிற கலாச்சார ஆய்வு, பரிவர்த்தனைகள், எதிர்ப்பு எல்லாம் ஒன்றும் சாதித்துவிட முடியாது எனவும் வாதிட்டார். ஸ்டூவர்ட் ஹால் சிந்தனைகளின் மீது தொடர்ந்து இப்படி எதிர்வினைகள் செய்தாலும், சிவானந்தனை ‘பிரிட்டனின் மிகப் பெரிய கறுப்பு இயக்கத்தின் அறிவுஜீவி’ என ஸ்டூவர்ட் சொல்லத் தவறியதே கிடையாது.

‘எ டிஃபரன்ட் ஹங்கர்: ரைட்டிங்ஸ் ஆன் ப்ளாக் ரெசிஸ்டன்ஸ்’ (இது வேறு வகையான பசி: கறுப்பர்களின் எதிர்ப்பு பற்றிய எழுத்துக்கள், A different hunger: Writings on Black Resistance) என்ற சிவானந்தனின் புத்தகத்தின் முன்னுரையில் ஸ்டூவர்ட் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

சிவாவின் எழுத்துக்கள் எல்லாம் விளிம்பு நிலை மக்களினால் வாசிக்கப்படுகின்றன. அவற்றைப் பொதுத்தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். சிவா போன்றவர்கள் பின்னிருந்து இயக்குபவர்களாகவே இருந்துவருவது நமக்கெல்லாம் தெரியும். ஆரம்பகால பிரிட்டிஷ் கறுப்பு அறிவு ஜீவி இயக்கம் பிரிட்டனில் தொடர்ந்து இருந்துவருகிறது என ஸ்டூவர்ட் ஹால் சொல்லியிருந்தார். அவருடைய ஆய்வுச் சிந்தனைகளும் பலரையும் சேர்ந்தடைய வேண்டுமெனெ விருப்பம் தெரிவித்திருந்தார். ஸ்டுவர்ட் ஹால், பால் கில்ராய் போன்ற கருப்பு அறிவுஜீவிகளை பிரிட்டனைச் சேர்ந்தோர் ‘கறுப்பின அறிவுஜீவிகள்’ என்றே பார்க்கின்றனர். சாம், சிவா என்ற கறுப்பரல்லா இரண்டு தமிழர்களும் கறுப்பர்களாகவே பிரிட்டனின் மேற்கிந்திய, பின் காலனிய வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்டனர் என்பது பெருமைக்குரிய ஒரு விசர்பொருளாகும்.

நவீன பிரிட்டனில் சிவாவின் இன அரசியல் குறித்த பங்களிப்புதான் என்ன? அவரது பங்களிப்பிற்கு அவரது பிறந்த மண்ணான இலங்கையில் தொடர்ந்து நடைபெற்றுவந்த சிங்கள – தமிழ் இனப் படுகொலை எவ்வாறு அடிப்படையாக இருந்தது என்பதையும் சிவாவின் கறுப்பு விடுதலைக் குரலின் தன்மை என்ன என்பதையும் வரும் வாரங்களில் பார்க்கலாம்.

*​

கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன், ஊடக மானுடவியலாளர். லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)

கட்டுரை 1: பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?

கட்டுரை 2: விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?

கட்டுரை 3: காலனியமும் சேவை நிறுவனங்களும்

கட்டுரை 4: காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்

கட்டுரை 5: சாம் செல்வன்; டரினிடாட் தமிழர்

புதன், 25 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon