மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 5 ஆக 2020

மீச்சிறு காட்சி 6: உள்ளுக்குள் பல ரூபங்கள்!

மீச்சிறு காட்சி 6: உள்ளுக்குள் பல ரூபங்கள்!

சந்தோஷ் நாராயணன்

கலையோடு வாழ்வை இணைத்துப் பேசும் சிறப்புத் தொடர்

கடந்த அத்தியாயத்தில் கஸ்மிரின் ஓவியங்களைச் சுட்டி “ஒண்ணுமே புரியலையே. ஸ்டாலினுக்குக் கோபம் வந்தது நியாயம்தான்” என்று ஒரு நண்பர் கவலைப்பட்டார்.

பொதுவாக நவீன ஓவியங்கள் குறித்த விமர்சனங்களின் தொடர்ச்சி இது. இரண்டு செவ்வகங்களையும், நான்கு வட்டங்களையும் போட்டால் ஓவியமாகிவிடுமா என்பது நண்பரின் கேள்வி. அவர் கேள்வியிலிருக்கும் நியாயத்தை புறம் தள்ளாமல், கொஞ்சம் நவீன கலைகளைப் பற்றிய அடிப்படையான புரிதலைப் பார்ப்போம்.

புரிவதும் புரியாததும்

மினிமலிசத்துக்கு முன்னும் பின்னுமான வெவ்வேறு வகையான ஓவிய / கலைப் பாணிகளைத் தொடர்ந்து பார்த்தால் ஒரு விஷயம் பிடிபடும். சர்ரியலிசம், க்யூபிசம், தாதாயிசம் என்று இசங்களாக வகை பிரிக்கப்பட்டிருந்தாலும் அடிப்படையில் நவீன கலைப் பாணிகள் நிறையவே அரூபத் தன்மை கொண்டிருக்கின்றன. மறுமலர்ச்சி கால ஓவியங்களின் இயல்புத் தன்மைகள், அதன் ஒளி நிழல் விளையாட்டுகள் எல்லாம் புகைப்படக் கலை வந்த பின் கேள்விக்குள்ளானது. இருப்பதை அப்படியே அச்சு அசலாக வரைவதற்கு ஓவியர் எதற்கு? அதுதான் கேமரா இருக்கிறதே என்கிற கேள்வி. அந்தக் கேள்வியை எதிர்கொள்ள, இருப்பதை அப்படியே வரையாமல் தங்கள் கற்பனையில் வருவதையும், தங்கள் மனவெளிகளில் தோன்றுவதையும், கனவுகளில் கண்டதையும் எல்லாம் ஓவியமாக்க முனைந்தார்கள் ஓவியர்கள். அது அரூபமாக, புரியாதபடி இருந்தாலும் அது அந்த ஓவிய மனதின் கலை வெளிப்பாடு.

ஒரு யதார்த்த ஓவியத்தை “ஆஹா எவ்வளவு அழகாக, நேச்சராக, அச்சு அசலாக வரைந்திருக்கிறார்” என்று பிரமித்துக்கொண்டு மட்டுமே இருந்த பார்வையாளன் நவீன ஓவியங்களின் அரூபத் தன்மைக்கு (Abstract) முன்பாகக் குழம்பி நின்றான். இங்கேதான் பார்வையாளனுக்குச் சவால்கள் காத்திருந்தன. அந்த ஓவியங்களைப் புரிந்துகொள்ளப் பார்வையாளனின் கலை மனமும் கற்பனையும் தேவைப்பட்டன. யதார்த்த ஓவியங்கள் ஓவியனின் திறமைகளை மட்டுமே காட்டி முடிந்துபோனபோது, நவீன ஓவியங்கள் பார்வையாளனின் திறனையும் கோரி நின்றன. பார்வையாளனின் அனுபவத்தையும், அறிதலையும் ஒட்டி நவீன ஓவியங்கள் பல்வேறு பரிமாணங்கள் கொண்டு விரியும் மாயாஜாலம் நிகழ்ந்ததைப் பார்க்க முடிந்தது.

புனிதப்படுத்தலுக்கு எதிரான பகடி

இந்தப் பின்னணியில் வைத்துத்தான் நவீன கலைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, தாதாயிசக் கலைஞனான மார்செல் டுசாம்பின் (Marcel Duchamp) Fountain சிற்பத்தைப் பார்ப்போம். தலைகீழாகத் திருப்பிய சாதாரண கழிவறைப் பாத்திரத்தை ஒரு கண்காட்சியில் வைத்தார். ஆனால் கண்காட்சி நிர்வாகத்தினர் அதை ஒரு கலைப் படைப்பாக முதலில் அங்கீகரிக்கவில்லை. காட்சிப்படுத்த முடியாது என்று தூக்கி போட்டுவிட்டார்கள். அது அன்றைய கலை ஆர்வலர்களிடையே சர்ச்சையைக் கிளப்பியது.

கலை என்பதைப் புனிதப்படுத்துதலுக்கும், கலை மேன்மையானது என்கிற பாவனைகளுக்கும் எதிராக டுசாம்ப் செய்த பகடிதான் இந்த இன்ஸ்டல்லெஷன். Fountain பற்றிய பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களை இப்போதும் இணையத்தில் நீங்கள் படிக்கலாம்.

ஆனால், பிற்காலத்தில் இந்த இன்ஸ்டல்லெஷன் இருபதாம் நூற்றாண்டின் நவீன கலைப் படைப்புகளில் முக்கியமான ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

இப்போதும் கண்காட்சிகளில் வைக்கப்படும் இந்த fountain இன்ஸ்டல்லெஷன் மீது பல நிகழ்த்துக் கலைஞர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணிகள் எல்லாம் தெரியாமல் அந்த இன்ஸ்டல்லேஷனைப் பார்க்கும் பார்வையாளன் “அச்சச்சோ” என்று முகத்தைச் சுளித்துக்கொள்ளலாம். அதற்கான உரிமையும் பார்வையாளனுக்கு இருக்கிறது.

Pierre Pinoncelli என்கிற ஒரு நிகழ்த்து கலைஞர் ஒரு தடவை இந்தச் சிற்பத்தைச் சுத்தியலால் உடைக்கப்போய் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் கூறியது “டுசாம்ப் இருந்தால் நான் செய்ததைப் பார்த்து சந்தோஷப்படுவார். ஏனென்றால் எதுவும் புனிதமில்லை”.

இயற்கையிலும் உள்ள அரூபம்

இப்போது நாம் புரிதல் பற்றிய உரையாடலுக்கு வருவோம். ஒரு கலைப் படைப்பைப் புரிந்துகொள்ள அதன் பின்னணியையும் வரலாற்றையும் தத்துவங்களையும் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுத்தான் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் எனக்குப் புரியாமலே போகட்டும் என்று சொல்பவரா நீங்கள்? கண்டிப்பாக இது உங்களுக்கானதில்லை. இதை நிராகரித்துவிட்டுச் செல்ல ஒரு பார்வையாளனாக உங்களுக்கு முழு உரிமை உள்ளது.

இந்த அரூபத் தன்மைகள் ஓவியத்தில் இருந்தால்தான் புரியவில்லை என்கிற விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால், இயற்கையில் இருந்தால் ரசிக்கிறோம். உதாரணத்திற்கு, கடற்கரையின் அந்தி நேரச் சூரியனின் சிவப்பு வண்ணங்களால் அடர்ந்த செந்நிற மேகங்கள்கூட அரூபமாகத்தான் இருக்கின்றன. அதை யாரும் புரியவில்லை என்று நிராகரிப்பதில்லை. முடிந்தால் திரும்பி நின்று செல்ஃபி எடுத்து முகநூலிலும் போடுகிறோம்.

வடிவேலு பாணியில் சொல்வதென்றால் “வெளியேதான் அரூபம். உள்ளுக்குள் பல ரூபங்கள்” என்று சொல்வேன்.

(காண்போம்)

(கட்டுரையாளர்:

சந்தோஷ் நாராயணன்

ஓவியர், அட்டைப்பட வடிவமைப்பாளர், விளம்பர வடிவமைப்பாளர், எழுத்தாளர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

முந்தைய அத்தியாயங்கள்:

அத்தியாயம் - 1

அத்தியாயம் - 2

அத்தியாயம் - 3

அத்தியாயம் - 4

அத்தியாயம் - 5

செவ்வாய், 21 ஆக 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon