மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 5 ஆக 2020

மீச்சிறு காட்சி 7: எளிமையின் கட்டுமானம்

மீச்சிறு காட்சி 7: எளிமையின் கட்டுமானம்

சந்தோஷ் நாராயணன்

கலையோடு வாழ்வை இணைத்துப் பேசும் சிறப்புத் தொடர்

அப்ஸ்ட்ராக்ட் என்கிற அரூபத் தன்மை கலைகளில் வருவதன் புரிதல் பற்றிப் போன அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த அரூப வடிவங்கள் ஓவியங்களிலோ அல்லது சிற்பத்திலோ வரும்போது புரியவில்லை என்று சொல்கிறோம். ஆனால், இயல்பில் ஒரு சமையல் பாத்திரத்தின் வடிவமைப்பிலிருந்து கட்டடத்தின் வடிவமைப்பு வரை பல விஷயங்கள் அரூபங்களால் நிறைந்திருக்கின்றன.

அங்கே நாம் அதன் வடிவத்தை அரூபமாக இருக்கிறது என்று சொல்வதில்லை. புரிவதில்லை என்று சொல்வதில்லை. கண்களுக்கு அழகாக இருக்கிறதா, பயன்பாட்டிற்கு அதன் வடிவம் ஏற்றதாக இருக்கிறதா என்று மட்டுமே பார்க்கிறோம். இதை இன்னும் நுட்பமாக அறிந்துகொள்ளும் முயற்சியாக மினிமலிசக் கட்டடக் கலையைப்பற்றி பார்ப்போம்.

கட்டுமானத்தில் சிக்கனத்தின் கலை

ஓவியத்திலும் சிற்பத்திலும் மினிமலிசம் எப்படித் தாக்கம் செலுத்தியது என்பதை முந்தைய சில அத்தியாயங்களில் பார்த்தோம். பொதுவாக வெகுஜன மக்களைப் பொறுத்தவரை கலை பயன்படு பொருளாக மாறும்போது அதை உள்வாங்கிக்கொள்வார்கள்.

கட்டடக் கலையில் மினிமலிசப் பாணி ஆரம்பித்தது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான். அதற்கு முன்னால் அதிகாரத்தைப் படம் போட்டுக் காட்ட பிரமாண்டமாகவும், அலங்காரமாகவும், ஆடம்பரமாகவும் கட்டடக் கலையை பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். முதல் அத்தியாயத்தில், பிரமாண்டமான கட்டடங்களின் மீதான ஹிட்லரின் மையலைச் சொல்லியிருந்தேன். நாஜி கட்டடக் கலைப்பாணி (nazi architecture) என்கிற சொல்லாடலே கட்டடக் கலை பற்றிய வரலாற்றில் இருக்கிறது. ஹிட்லர் ஓர் உதாரணம்தான். மேற்கு நாடுகளிலிருந்து கீழை நாடுகள் வரை இப்படி அதிகாரத்தின் காட்சி வடிவமாகக் கட்டடக் கலை இருப்பதைப் பார்க்கலாம். நம்மூர் உதாரணங்களை நீங்களே தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்.

மினிமலிசக் கட்டடக் கலை அந்த ஆடம்பரங்களை, அதீத டாம்பீகங்களை வடிவமைப்பில் தவிர்த்து மிக எளிமையான அடிப்படை வடிவங்களைக் கொண்டிருந்தது. அதே நேரம் எளிமை என்கிற பெயரால் கட்டடத்தின் காட்சி அழகியலை முற்றிலும் தவிர்க்கவுமில்லை. புதியதொரு காட்சி அழகியலைக் கொண்டிருந்தது என்று சொல்லலாம்.

மினிமலிசக் கட்டடக் கலைக்கு முன்னோடியாக இருந்தது என்று டி ஸ்டிஜில் (De Stijl) கலைப் பாணியைச் சொல்லலாம். De Stijl என்றால் டச்சு மொழியில் the style என்று அர்த்தம். இந்தக் கலைப் பாணியைச் சேர்ந்த டிசைனரான Gerrit Rietveld-ன் Red and Blue Chair என்று தலைப்பிடப்பட்ட இந்த நாற்காலியின் வடிவம் ஓர் உதாரணம். இன்று இதைப் போன்ற வடிவங்களில் உங்கள் வீட்டில்கூட நாற்காலிகள் இருக்கலாம். ஆனால், கெர்ரிட் இதை வடிவமைத்த காலத்தில் இவ்வகையான அடிப்படை ஜியோமிதி வடிவங்களைக் கொண்ட நாற்காலிகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. எளியதின் அழகியல் என்பது இதுதான். கெர்ரிட்டின் பிற நாற்காலிகளின் வடிவங்களை நீங்கள் இணையத்தில் தேடிப் பார்த்தால் இந்தக் கலைஞன் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அட்டகாசம் செய்திருக்கிறார் என்பது தெரியும்.

மினிமலிசக் கட்டடக் கலைக்கு இன்னொரு முன்னோடி என்று சொன்னால் வான் டி ரோ (van der Rohe) என்னும் கட்டடக் கலைஞர். மரபான பிரமாண்டமான கட்டடங்களில் ஆரம்பித்து மெல்ல மினிமலிச பாணியை நோக்கித் தன் வடிவமைப்பில் பயணித்த கலைஞன். அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த பிரமாண்டமான தூண்கள், தேவையற்ற சுவர்கள் எல்லாம் இவர் டிசைனில் இருக்காது.

மினிமலிசக் கட்டடக் கலையை ஜப்பானிய மரபான கட்டுமானப் பாணிகளும் பாதித்ததாகச் சொல்கிறார்கள். ஜப்பானியக் கட்டடக் கலை பெரும்பாலும் மரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட எளிய பாணியைக் கொண்டது. அடிக்கடி பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களை ஏற்படுகிற நிலமும் சூழலும் கொண்ட ஜப்பான் போன்ற நாடுகளில் இப்படி எளிய வடிவங்களில் கட்டடக் கலையைப் பின்பற்றியதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்திய மரபில் கட்டுமானக் கலை

நமது நாட்டில் மரபுக் கட்டடக் கலை என்றால் பிரமாண்டமான கோயில்களையும், அரண்மனைகளையும் சொல்லுவதுதான் வழக்கம். அது மிகச் சிறிய சதவிகிதமாகவே இருக்க முடியும். மற்றபடி பெரும்பான்மையான மக்களின் வீடுகள் சூழலும் ஏற்பவும் எளிய வடிவத்திலும்தான் இருந்திருக்கிறது.

நவீன மினிமலிசப் பாணி கட்டடக் கலையில் முக்கியமானது வெளியை (Space) எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது. கிராமத்து விவசாயிகளின் சிறிய மண் வீடுகள் என்பது பெரும்பாலும் பொருட்களைச் சேமிக்கவும் பாதுகாக்கவும் மட்டுமேயான அமைப்பைக் கட்டட வடிவத்தில் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். மற்றபடி சமைப்பது, தூங்குவது, பகலில் பெரும்பாலும் புழங்குவது கட்டடத்துக்கு வெளியேதான். சூழலைக் கெடுக்காத, அதீதத் தேவைகள் இல்லாத எளிய வடிவங்களை அம்மாதிரியான கட்டடங்கள் கொண்டிருக்கின்றன. கான்கிரீட் கட்டடங்கள்தான் வளர்ச்சி என்கிற பார்வை பொத்தாம் பொதுவானது. கட்டடத்துக்கும் சூழலுக்கும் வெளிக்கும் அதில் புழங்கும் மனிதர்களுக்குமான உளவியலுடன் புரிந்துகொண்டால் நம் மரபான கட்டடக் கலைகளைப் பற்றிய புதிய பார்வை நமக்குத் தேவைப்படுகிறது.

ஒரு வகையில் நமது இந்த எளிய மரபான கட்டடக் கலைகளில் மினிமலிசத் தன்மை இருப்பதைப் பார்க்கிறேன். நமது மரபு கட்டடக் கலையிலிருந்து ஊக்கம் பெற்று அற்புதமான டிசைனராகத் திகழ்ந்த லாரி பேக்கரின் (Lurie baker) கட்டடக் கலையிலும் மினிமலிச எளிமையை நாம் பார்க்கலாம். அதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

(காண்போம்)

(கட்டுரையாளர் சந்தோஷ் நாராயணன், ஓவியர், அட்டைப்பட வடிவமைப்பாளர், விளம்பர வடிவமைப்பாளர், எழுத்தாளர். இவரைத் தொடர்பு கொள்ள: [email protected])

முந்தைய அத்தியாயங்கள்:

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

செவ்வாய், 28 ஆக 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon