மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம்!

மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம்!

நடிகர் ரஜினிகாந்த்தின் மக்கள் மன்றத்தில் இருந்து மாநில நிர்வாகிகள் 2 பேர் நீக்கப்பட்டு அந்த பதவி மாவட்ட செயலாளர்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியலுக்கு வரப்போவது உறுதி என கடந்த ஆண்டின் கடைசி நாளில் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரசியலுக்கான பணிகளிலும் அவர் வேகம் காட்டத்தொடங்கினார். தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றுவதாக அறிவித்த ரஜினிகாந்த், அதிக உறுப்பினர்களை மன்றத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்குக் கட்டளையிட்டார்.

தற்போது, ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மன்றத்தின் அமைப்பு செயலாளராகவும் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராகவும் இளவரசன் இருந்துவருகிறார். மன்ற நிர்வாகிகள் மீது எதாவது புகார் வந்தால், உடனடியாக அவர்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டச் செயலாளர் இப்ராகிம், புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக அணி செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாநில நிர்வாகிகள் இருவர் நீக்கப்பட்டதோடு அல்லாமல் அந்த பதவியும் கலைக்கப்பட்டுள்ளது. தென் சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருந்த காயத்ரி துரைசாமி தென்சென்னை மாவட்ட மகளிர் அணிச் செயலாளராகவும், இளைஞர் அணி மாநில பொறுப்பில் இருந்த சாமுவேல் சர்ச்சில் கோவை மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளராகவும் நேற்று (செப்டம்பர் 5) நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில மகளிர் அணி செயலாளர் மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் ஆகிய 2 பதவிகளும் கலைக்கப்பட்டு, மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இளவரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ரஜினி மக்கள் மன்ற அனைத்து மாவட்ட மகளிர் அணி மற்றும் இளைஞர் அணிகளின் அமைப்பு பணிகள், இனி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாடு, மேற்பார்வை மற்றும் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட வேண்டும். மாவட்ட மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள் தினசரி தங்கள் அணிகளின் அமைப்புப் பணி பற்றிய அறிக்கையை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட பொறுப்பாளர் மற்றும் செயலாளரிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்று அவர்களின் அறிவுரைப்படி மன்றப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி அமைப்பு நியமனப் பரிந்துரைகளை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் செயலாளர்கள் நேரடியாக தலைமைக்கு அனுப்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon