மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 18 ஜன 2021

சிலைக் கடத்தல்: ஸ்ரீரங்கத்தில் ஆய்வு!

சிலைக் கடத்தல்: ஸ்ரீரங்கத்தில் ஆய்வு!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் சிலைக் கடத்தல் பிரிவு அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 6) ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டதாகவும், உற்சவர் சிலை மற்றும் கோயிலிலுள்ள பழங்காலப் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைக் கடத்தல் புகார் மற்றும் ஆயிரம் கால் மண்டபம் தொடர்பாக ஆய்வு செய்து, 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஐஜி பொன்மாணிக்கவேல், ஏடிஎஸ்பி ராஜாராம் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இன்று கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் சிலைக் கடத்தல் பிரிவு போலீசார். சக்கரத்தாழ்வார் சன்னதி, மூலஸ்தானம், கம்பத்தடி ஆஞ்சநேயர், ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள வரதராஜர் சன்னதி, மற்றும் பழைய சிலைகள் பராமரிப்புப் பகுதி ஆகியவற்றைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்த புருஷோத்தமன் சிலை காணவில்லை என்று கூறப்பட்ட நிலையில், கோயிலில் ஆயிரம் கால் மண்டபத்தில் அந்தச் சிலை உள்ள தகவல் வெளியானது. இதுபோல சிதிலமடைந்த பல சிலைகள் ஆயிரம் கால் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள உற்சவர் சிலை மாற்றப்படவோ, கடத்தப்படவோ இல்லை என்று தலைமை அர்ச்சகர் முரளி பட்டர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon