மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 19 அக் 2020

முல்லைப் பெரியாறு: சர்வதேச ஆய்வு தேவையில்லை!

முல்லைப் பெரியாறு: சர்வதேச ஆய்வு தேவையில்லை!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முல்லைப் பெரியாறு அணை 152 அடி நீர் தேக்கும் அளவிற்கு வலுவாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை நிரந்தரமாக 139 அடியாகக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறியது தமிழக அரசு.

கேரளாவில் ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழையைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தேசிய பேரிடர் மேலாண்மை குழு அணையின் நீர் மட்டத்தை குறைப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அணை பலவீனமாக இருப்பதாக மீண்டும் கூறியுள்ள கேரள அரசு, நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இவ்வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீரைத் தமிழகம் திறந்துவிட்டதும் வெள்ள சேதம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் என்று கூறியிருந்தது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 139.99 அடியாகப் பராமரிக்கலாம் என துணைக்குழு பரிந்துரைத்ததன் அடிப்படையில் நீர் மட்டத்தைக் குறைக்க வேண்டும் எனவும், அணையின் நீர்மட்டத்தை மத்திய நீர்வளத் துறைச் செயலாளர் தலைமையிலான துணைக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இன்று இந்த மனு மீண்டும் விசாரிக்கப்பட்டது. அப்போது, சர்வதேச நிபுணர் குழுவைக் கொண்டு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுவில் இடம்பெற்ற கோரிக்கையை நிராகரித்தனர் நீதிபதிகள். அணையின் நீர்மட்டத்தை மீண்டும் 142 அடியாக உயர்த்துவது குறித்து தேசியப் பேரிடர் அணைகள் பாதுகாப்பு துணைக்குழு முடிவெடுக்கும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon