மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 18 ஜன 2021

சிவகார்த்தி மார்கெட்: கள நிலவரம் என்ன?

சிவகார்த்தி மார்கெட்: கள நிலவரம் என்ன?

இராமானுஜம்

தமிழ் சினிமா வியாபாரம், வசூல் இவற்றில் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

2012 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதே ஆண்டு மனம் கொத்தி பறவை, 2013ஆம் ஆண்டு கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், 2014ஆம் ஆண்டு மான் கராத்தே, காக்கிச்சட்டை, 2016ஆம் ஆண்டு ரஜினி முருகன், ரெமோ 2017ஆம் ஆண்டு வேலைக்காரன் என கடந்த ஆறு ஆண்டுகளில் பத்து படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா செப்டம்பர் 13 அன்று ரிலீஸாக உள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப் பெரும் வெற்றிப் படமானதால் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு வியாபார முக்கியத்துவம் ஏற்பட்டது. அதன் பின் இவர் நடித்து வெளியான மான் கராத்தே, காக்கிச் சட்டை ஆகிய இருபடங்களும் வெற்றிப் படங்களாக அமையவில்லை.

அதே வேளை இவர் நடித்து பைனான்ஸ் பிரச்சினையில் முடங்கிக் கிடந்த ரஜினி முருகன் வெளியாகி அதிரி புதிரியான வெற்றியைப் பெற்றது. சிவகார்த்திகேயன் கால்ஷீட்டுக்காக அனைத்துத் தயாரிப்பாளர்களும் முட்டி மோத அவரோ வெளி நிறுவனங்களின் தயாரிப்பில் நடிக்கத் தயங்கினார். காரணம் ரஜினி முருகன் படத்தில் குறைவான சம்பளத்தில் நடித்திருந்தார்.

அப்படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி தயாரித்த படங்களின் மூலம் ஏற்பட்ட கடன் ரஜினி முருகன் ரிலீஸை தாமதப்படுத்தியது. சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்த பின்னரும் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களுக்குப் பிரச்சினை ஏற்படும் என சினிமா நாட்டாமைகளால் மிரட்டப்பட்டார்.

அந்த கசப்பான நிகழ்வுகள் காரணமாக வெளி நிறுவனங்களுக்கு கால்ஷீட் கொடுப்பதைத் தவிர்த்தார். தன் நண்பர் ராஜாவுடன் இணைந்து தொடங்கப்பட்ட 24 AM நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட ரெமோ, வேலைக்காரன் என இரு படங்களும் வர்த்தக ரீதியாக லாபம் தரவில்லை.

படத்திற்குச் செலவு செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கும் சிவகார்த்திகேயன் படத்திற்கான வியாபாரத்திற்கும் சம்பந்தமில்லாததே காரணம் என்கின்றனர் விநியோகஸ்தர்கள். இவரது படத்திற்கான வருமானத்திற்கான பெரும் பகுதி தொலைக்காட்சி வியாபாரம் மற்றும் தமிழ்நாடு தியேட்டர் வசூலை நம்பி உள்ளது.

விஜய்யுடன் இவரை ஒப்பிட்டுப் பேசினாலும் விஜய் படங்களுக்குக் கேரளா, கர்நாடகா, வெளிநாடுகளில் இருக்கும் வசூல் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இல்லை என்கின்றனர். இருப்பினும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இருந்து சிவகார்த்திகேயன் படங்கள் வெளிவரவில்லை.

செப்டம்பர் 13 அன்று வெளிவர உள்ள சீமராஜா அதே ரகத்தைச் சேர்ந்தது. தமிழகத்தில் சுமார் 45 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டிருக்கிறது சீமராஜா.

தமிழகத்தின் தென்பகுதியான மதுரை - திருநெல்வேலி பகுதிகளில் சீமராஜா வியாபாரம் - தியேட்டர் நிலவரம் முந்தைய படங்கள் வசூலித்த விபரங்களுடன் நாளை மாலை 7 மணி பதிப்பில்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon