மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

எழுவர் விடுதலை: வலுக்கும் கோரிக்கை!

எழுவர் விடுதலை: வலுக்கும் கோரிக்கை!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையைத் தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அவர்களை விரைந்து விடுதலை செய்ய வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 27 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்துவருகின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு இவர்களை விடுதலை செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கில் இன்று (செப்டம்பர் 6) தீர்ப்பளித்த ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலைத் தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம்” என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், ”பேரறிவாளனின் விடுதலை சாத்தியம் என்ற உறுதியைக் கொடுத்துள்ள நீதிபதிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விடுதலையை முன்னெடுக்க வேண்டும் என்று முதல்வரை சந்தித்து வலியுறுத்தவுள்ளேன். விடுதலைத் தொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரை செய்யவும் கோரிக்கை விடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையைத் தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

தமிழக அரசே முடிவு செய்யலாம் என்பதுதான் தலைவர் கலைஞர் ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வந்த கழகத்தின் நிலைப்பாடாகும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவினை எடுக்க வேண்டும். 27 வருடங்களாக சிறையில் வாடிவதங்கிக் கொண்டிருக்கும் அவர்களை, மேலும் காலதாமதம் ஏதுமின்றி விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராஜீவ் படுகொலையில் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டு, கூண்டில் நிறுத்தப்பட்டு, அந்த சம்பவத்துக்கு தொடர்பே இல்லாத 7 பேர் கொடிய நரகத்தை அனுபவித்துள்ளனர். தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, முன்பு அமைச்சரவை எடுத்த முடிவைச் செயல்படுத்த வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தலாம். அமைச்சரவையின் முடிவை ஆளுநர் புறக்கணிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் கொள்கை என்பது - 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதுதான். மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதில் உறுதியாகவும் இருந்தார் என்பதையும் நினைவூட்டுகிறோம்.

இப்பொழுது தமிழ்நாடு அரசுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது; இதனைப் பயன்படுத்தி, காலதாமதம் செய்யாமல் உடனடியாக அனைவரையும் விடுதலை செய்யவேண்டும்” என்று கோரியுள்ளார்.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில், “ ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுத்து கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகல் கிடைத்த பின்னர், 7 பேர் விடுதலை குறித்து அரசு முடிவு செய்யும் என்றும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon