மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

அழகிரி பேரணிக்கு முரசொலி பதில்!

அழகிரி பேரணிக்கு முரசொலி பதில்!

செப்டம்பர் 5 ஆம் தேதி மு.க. அழகிரி சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி நடத்திய பேரணி பற்றி திமுக தலைமை அதிகாரபூர்வமாக கருத்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியில் இன்று அழகிரியை மறைமுகமாக தாக்கும் வகையில் இரு பெட்டிச் செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

திமுக தலைவராகப் பொறுப்பேற்றபோதும் சரி, அதற்கு முன்பு செயல் தலைவராக இருந்தபோதும் சரி, அழகிரி சர்ச்சை பற்றி பேசுவதை தவிர்த்தே வந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அழகிரிக்கு யாரும் கட்சியில் இருந்து பதில் தர வேண்டாம் என்றும், அவரை ஒரு பொருட்டாக கருத வேண்டாம் என்பதும்தான் ஸ்டாலின் திமுகவின் நிர்வாகிகளுக்கு போட்டிருக்கும் வாய்மொழி உத்தரவு.

பேரணி நடத்திய அழகிரி, “என் பின்னால் ஒன்றரை லட்சம் பேர் வந்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்க முடியுமா?’’ என்று கேள்வி கேட்டார்.

இந்த நிலையில் நேற்று அழகிரி நடத்திய பேரணியில் சொற்ப அளவிலானவர்களே கலந்துகொண்டார்கள் என்பதை நேற்று இரவு உறுதிப்படுத்திக் கொண்டார் ஸ்டாலின். இன்று (செப்டம்பர் 6) காலை வெளிவந்த முரசொலியில் அழகிரிக்கு பதில் அளிக்கும் வகையில் முதல் பக்கத்திலும் கடைசி பக்கத்திலும் இரு பெட்டிச் செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

முதல் பக்கத்தில், ‘வெளிப்பகை.... உட்பகை’ என்ற தலைப்பிட்டு கலைஞர் படத்துடன் இடம்பெற்றுள்ள பெட்டியில், “ வெளிப்படை யுத்த தளவாடங்களோடு வரும். உட்பகை கருப்புச் சந்தைக்காரர்கள், கொள்ளை வியாபாரிகள், பதுக்கல் காரர்கள், அவசர நிலை உணராமல் ஆர்பாட்டங்களில் ஈடுபடும் ஐந்தாம் படையினர் ஆகியோர் உருவிலே வரும்’ என்ற கலைஞர் சொன்னது எடுத்தாளப்பட்டுள்ளது.

இதன் மூலம் அழகிரி பேரணியில் கலந்துகொண்டோர் கழகத்தைக் காட்டிக் கொடுக்கும் ஐந்தாம் படையினர் என்று விமர்சனம் செய்துள்ளது முரசொலி.

மேலும் இன்றைய முரசொலியின் கடைசிப் பக்கத்தில்... ’அழியக் கூடிய இயக்கமா இது?’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள பெட்டிச் செய்தியில், “ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சமயத்திலேயே திமுகவை அழிக்கப் பார்த்தார்கள். அப்போதைய தேர்தலில் திமுக தோற்றதே தவிர அழியவில்லை. அழியக் கூடிய இயக்கமா இது?’’ என்று கலைஞர் முன்பு சொன்னது வெளியிடப்பட்டிருக்கிறது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon