மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

குட்கா: 5பேருக்கு நீதிமன்றக் காவல்!

குட்கா: 5பேருக்கு நீதிமன்றக் காவல்!

குட்கா ஊழல் வழக்கில் குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, பி.வி.சீனிவாச ராவ் உள்ளிட்ட 5 பேருக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்துள்ளது.

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திவரும் நிலையில், கடந்த வாரம் குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ அதிகாரிகள், சென்னையிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். மாதவ ராவ் டைரியில் சிக்கிய ஆதாரங்கள் அடிப்படையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ குழுவினர் நேற்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை விஜயபாஸ்கர், டிஜிபி, முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரது இல்லத்தில் சோதனை முடிந்த நிலையில், முன்னாள் ஆணையர் ஜார்ஜ் இல்லத்தில் விடிய விடியச் சோதனை நடைபெற்று இன்று காலை முடிவடைந்தது.

இந்த நிலையில் குட்கா வழக்கு தொடர்பாக குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, பி.வி.சீனிவாச ராவ், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், கலால் துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 6) கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. குட்கா ஊழல் தொடர்பான முதல் கைது நடவடிக்கை இதுவாகும்.

கைது செய்யப்பட்டவர்கள் மாலை 4.30 மணியளவில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அனைவருக்கும் செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க, நீதிபதி திருநீல பிரசாத் உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக குட்கா விவகாரத்தில் இடைத் தரகர்களாக செயல்பட்ட ராஜேஷ், நந்தகுமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. தமிழக வரலாற்றிலேயே டிஜிபி வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுவது இதுதான் முதல்முறை. அவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். குட்கா ஊழல் தொடர்பாக தற்போது சிலரை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆகவே ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரையும் கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon