மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

டிஜிட்டல் திண்ணை: ‘எனக்கு வைத்த செக்’- ரெய்டு பற்றி எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை:  ‘எனக்கு வைத்த செக்’- ரெய்டு பற்றி எடப்பாடி

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் மெசேஜ் வந்து விழுந்தது.

“குட்கா விவகாரத்தைப் பொறுத்தவரை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அதிமுகவுக்கும் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. அடுத்தடுத்து ரெய்டு நடக்கும் என்பதை எடப்பாடியே எதிர்பார்க்கவில்லையாம். டிஜிபி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இதுகுறித்து முதல்வரிடம் பேசியிருக்கிறார்கள். டிஜிபியின் ராஜினாமா முடிவையும் முதல்வர் தடுத்து நிறுத்தியது பற்றி இன்று பகல் மின்னம்பலத்தில் செய்தியாக வந்திருக்கிறது.

ஏற்கனவே 2017 ஏப்ரல் 7ஆம் தேதி ஒரே சமயத்தில் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள அவரது உறவினர்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போதும் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இப்போது சிபிஐ ரெய்டு நடத்தியிருக்கிறது.

‘இது உங்களுக்கு வைக்கிற செக் இல்லை. எனக்கு வைக்கிற செக். போன வருடம் குடியரசுத் தலைவர் தேர்தல்ல நாம பாஜகவுக்கு ஓட்டுப் போடணும்னு அப்ப ஒரு ரெய்டு நடத்தினாங்க. இப்ப வர்ற தேர்தல்ல கூட்டணிக்காக அச்சாரம் போடுவதற்காக ரெய்டு நடத்துறாங்க. என்ன நடந்தாலும் அமைதியாக இருங்க. நான் பார்த்துக்குறேன்...’ என அமைச்சர் விஜயபாஸ்கரிடம் எடப்பாடியே சொன்னதாக சொல்கிறார்கள் அமைச்சர் ஆதரவாளர்கள். ‘எப்படியும், திமுக கூட்டணியில் பிஜேபியை சேர்க்க மாட்டாங்க. அவங்களுக்கு நம்மைவிட்டால் வேற வழியே கிடையாது. நாம சேர்த்துக்கலைன்னா என்ன செய்யுறது என்ற பயத்துலதான் இவ்வளவு குடைச்சலைக் கொடுத்துப் பார்க்கிறாங்க. இப்போ நாம பயந்துகிட்டு அவங்ககிட்ட போய் நிற்போம்னு எதிர்பார்க்கிறாங்க. நான் பயப்படவும் போறது இல்ல...விஜயபாஸ்கரை நீக்கவும் போறது இல்ல. அவங்க சொல்றதை எல்லாம் அப்படியே ஏத்துக்கணும்னு எப்படி அவங்க கணக்கு போடலாம். அதுக்கு நாம எப்படி பொறுப்பாக முடியும்?’ என்றும் கேட்டாராம் எடப்பாடி” என்று முடிந்தது வாட்ஸ் அப்.

அதை ஷேர் செய்த ஃபேஸ்புக் தான் ஒரு ஸ்டேட்டஸை அப்டேட் செய்தது.

“சிறைக்குள் இருப்பவர்கள் விருப்பப்பட்டால் அங்கிருந்தபடியே படிக்கலாம் என்பது தெரிந்ததுதான். சிறைக்குள் இருந்தபடியே டிகிரி படித்தவர்கள் கூட நிறைய இருக்கிறார்கள். பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் இருக்கும் சசிகலா, தனக்கு ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டாராம். பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் ஏற்கெனவே ஒரு ஹிந்தி ஆசிரியையும், ஆங்கில ஆசிரியையும் வருகிறார்கள். கன்னடம் அவர்களுக்கு தாய்மொழி என்பதால் அதற்கு ஆசிரியர்கள் யாரும் இதுவரை தேவைப்பட்டது இல்லை. இப்போது சசிகலா கேட்டதால், அதற்காக அனுமதி வாங்கி ஒரு கன்னட ஆசிரியரும் வரத் தொடங்கி இருக்கிறார். ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் இந்த மூன்று மொழிகளையும் தினமும் 5 மணி நேரம் வரை கற்கத் தொடங்கியிருக்கிறார் சசிகலா. குறிப்பாக ஆசிரியைகள் சொல்வதை குறிப்பெடுத்துக் கொண்டு வந்த பிறகும் கூட, அதையே படித்துக் கொண்டிருக்கிறாராம். சிறைக்குள் இருக்கும் கர்நாடக மாநில கைதிகளிடம், பெரும்பாலும் கன்னடத்தில்தான் பேச முயற்சி செய்கிறாராம் சசிகலா.

டிவி பார்க்கும் போது, ஆங்கில சேனல்களையும் , ஹிந்தி சேனல்களையும் கூட கவனமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டாராம். அதாவது சிறைக்குள் இருந்து வெளியே போகும்போது, ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் மூன்று மொழிகளிலும் பேசவும் படிக்கவும், எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறாராம் சசிகலா. ‘அக்கா இங்கிலீஷ்லயும், கன்னடத்துலயும் சரளமாக பேசுவாங்க. ஹிந்தியும் நல்லா தெரியும். ஆனால் எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். என்கிட்ட பலமுறை, ‘நீயும் இங்கிலீஷ் கத்துக்கோ சசி’ன்னு சொல்லி இருக்காங்க. அப்போ கத்துக்கல. இப்போ அவங்க கூட இல்லை. ஆனால், நான் இங்கிலீஷ் கத்துக்குறேன். இதையெல்லாம் அக்கா பார்த்தால் ரொம்பவும் சந்தோஷப்படுவாங்க..’என இளவரசியிடமே சொல்லி கண்கலங்கினாராம் சசிகலா.

சிறைக்குள் சசிகலாவை பார்க்கப் போகும் அவரது உறவினர்கள் கூட, ‘இப்போ எதுக்கு ரொம்பவும் ஸ்ட்ரெய்ன் பண்ணிட்டு இருக்கீங்க.. நல்லா ரெஸ்ட் எடுங்க..’ என சொல்லியிருக்கிறார்கள். ‘ ஏன் நான் படிச்சு எல்லாம் தெரிஞ்சுகிட்டா உங்களுக்கு சிக்கலாகிடும்னு பயப்படுறீங்களா?’ என்று சிரித்தபடியே கேட்டதாக சொல்கிறார்கள். சிறைக்குள் இருந்து வெளியே வரும் போது, புது சசிகலாவாக வெளியே வருவார்... யாரும் எதிர்பார்க்காத சசிகலாவாக இருப்பார் என்று சொல்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.

அதேபோல, சர்க்கரையின் அளவும் இப்போது கட்டுக்குள் இருக்கிறதாம். டாக்டர்கள் அட்வைஸ்படி அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து ரெகுலராக வாக்கிங் போகவும் ஆரம்பித்துவிட்டாராம். இளவரசிக்கு யோகா தெரியும் என்பதால், வாக்கிங்கிற்கு பிறகு அரை மணி நேரம் யோகாவும் கற்றுத் தருகிறாராம். அதையும் தவறாமல் செய்கிறாராம் சசிகலா. வெளியில் இருந்து ஆட்கள் வரும்போது, சில புத்தகங்களையும் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் சசிகலா. சசிகலாவின் அறைக்குள் இப்போது நிறைய புத்தகங்களும் குவிந்திருக்கிறதாம்.” என்று ஸ்டேட்டசை போஸ்ட் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

வியாழன், 6 செப் 2018

அடுத்ததுchevronRight icon