மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

மின்னம்பலம்

நாங்கள் எதைக் குடிப்பது? - மக்கள் கேள்வி!

“நாங்கள் தண்ணீருக்குப் பதிலாக டாஸ்மாக் சரக்கைக் குடித்துக்கொள்ள வேண்டும் என்று அரசு நினைக்கிறதா? தண்ணீர் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் வருகிறது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஆனால், டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் மறைமுகமாக மது விற்பனை நடக்கிறது. அரசாங்கத்திற்கு எது அடிப்படை என்பது கூடவா புரியவில்லை."

-- திருப்பூர் குறைதீர் முகாமில் பொதுமக்கள்

திருப்பூரைச் சேர்ந்த முத்தணம்பாளையம், கோடீஸ்வரா நகர், குருவாயூரப்பன் நகர், அமராவதி நகர், பிள்ளையார் காலனி, பாலாஜி நகர் ஆகிய பகுதிகளுக்கு மாதத்துக்கு இரண்டு முறை மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. 2500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதிகளில் வசதி படைத்தோர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். பொதுமக்களின் நிலையோ பொதுக் குடிநீர் விநியோகம் போல பாவமாக இருக்கிறது.

2017ஆம் ஆண்டு இப்பிரச்சினைக்கான தீர்வாக, பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து 13.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின்படி, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படும் என்று உறுதியளித்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டு அந்தத் தொட்டி தேவையில்லை என்றும், ஒதுக்கப்பட்ட நிதியைத் திருப்பி அனுப்பிவிடுகிறோம் என்றும் 3ஆம் மண்டல மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைக் கண்டித்துத்தான் அம்மக்கள் குறைதீர் முகாமில் புகார் தெரிவித்திருந்தனர். தங்களுக்கு முறையான குடிநீர் வழங்கத் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அவசியம் என்றும் தங்கள் மனுவில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இதே குறைதீர் மன்றத்தில் பாமக சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், திருப்பூரில் அனுமதி மீறி 24 மணி நேரமும் செயல்பட்டுவரும் மதுபானக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டிருந்தது. அரசு அனுமதித்த 241 மதுக்கடைகளைத் தவிர மறைமுகமாக மது விற்பனை செய்து வருபவர்களைக் கைது செய்து மது விற்பனையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மதுவினால் பாதிக்கப்படும் மக்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இச்சமயத்தில் வெளிப்பட்ட பொதுமக்களின் மனக் குமுறல்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள வாசகங்கள்.

கேட்கக் காதுள்ளவர் கேட்கக் கடவது!

- நரேஷ்

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon