மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

மாட்டு வண்டியில் பள்ளிக்குச் சீர்வரிசை!

மாட்டு வண்டியில் பள்ளிக்குச் சீர்வரிசை!

ஈரோடு அருகே முன்னாள் மாணவர்கள் சிலர், ஆசிரியர் தினமான நேற்று (செப்டம்பர் 5) தாங்கள் படித்த பள்ளிக்கு மாட்டு வண்டியில் சீர்வரிசையை எடுத்துச் சென்று ஆசிரியர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கோபிபாளையத்தில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் தூய திரேசாள் முதல்நிலைப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கவும் முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் கிராமக் கல்விக் குழு முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் இணைந்து, ஆசிரியர் தின விழாவைப் பள்ளிக்குச் சீர் வழங்கும் விழாவாகக் கொண்டாடினர்.

1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஐந்து பெரிய அளவிலான தொலைக்காட்சிப் பெட்டிகள், 25,000 ரூபாய் மதிப்பீட்டில் 50 நெகிழி நாற்காலிகள், 15,000 ரூபாய் மதிப்பில் தோட்டக் கருவிகள், துப்புரவுப் பொருட்கள், 10,000 ரூபாய் மதிப்பில் ஆசிரியர்களுக்குப் பரிசுப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் என சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தனர்.

ஆசிரியர்கள் பேருந்திலிருந்து இறங்கியவுடன், அவர்களை வரவேற்றுச் சீர்வரிசைகளுடன் ஊர்வலமாகப் பள்ளிக்கு அழைத்துச்சென்றனர். பள்ளிக் குழந்தைகள் ஆசிரியர்களுக்குப் பூங்கொத்துகள் கொடுத்து, ஆசிரியர் தின வாழ்த்துத் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கியும் வெகு சிறப்பாக ஆசிரியர் தின விழாவைக் கொண்டாடினர்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon