மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

கிச்சன் கீர்த்தனா: இடியாப்ப பிரியாணி!

கிச்சன் கீர்த்தனா: இடியாப்ப பிரியாணி!

இடியாப்பத்தைச் சர்க்கரையிலும், தேங்காய்ப் பாலிலும் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஒரே சலிப்பா இருக்குதுன்னு நினைக்கிற உங்களுக்கு, கொஞ்சம் வித்தியாசமாக இடியாப்பத்தில் பிரியாணி செய்து சாப்பிடுவது எப்படின்னு பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்

இடியாப்பம் - 2 கப் ( 400 கிராம் ) (உதிர்த்து வைத்துக் கொள்ளவும்)

தக்காளி - 1

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - அரை டீஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

பட்டை - 1 இன்ச் அளவு

லவங்கம் - 2

பெரிய வெங்காயம் - 2

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

முதலில் இடியாப்பத்தை வேகவைத்து உதிர்த்து எடுத்துக்கொள்ளவும். பின்னர், வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடிதாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம் போட்டு தாளிக்கவும்.

தாளித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து சுருள வதக்கவும். தக்காளி சுருண்டு வரும்போது இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பச்சை வாடை போனதும் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான இடியாப்ப பிரியாணி ரெடி!

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon