மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

கல்லாதவர்களே இல்லாத மாநிலம்!

கல்லாதவர்களே இல்லாத மாநிலம்!

கல்லாதவர்களே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை அதிமுக அரசு மாற்றியிருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது, தூய்மை பள்ளி விருது ஆகியவற்றை வழங்கும் முப்பெரும் விழா நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர். 363 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளும், 960 மாணவர்களுக்குக் காமராஜர் விருதுகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பள்ளிகளுக்குத் தூய்மை பள்ளி விருதுகளும் வழங்கப்பட்டன.

இதையடுத்து விழாவில், உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, “வாழ்வில் இரண்டு அதி முக்கிய அறைகள் உண்டு. ஒன்று, கருவறை - அம்மாவுடையது. மற்றொன்று, வகுப்பறை - ஆசிரியருடையது. அம்மா, வாழ்க்கையைத் தந்து உலகத்தை அறிமுகப்படுத்துகிறார். ஆசிரியர், அறிவைத் தந்து வாழ்க்கையை அறிமுகப்படுத்துகிறார்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர்களின் பற்றாக்குறையினால், மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடு எந்தவிதத்திலும் பாதிப்புக்குள்ளாகக் கூடாது என்ற உயரிய சிந்தனையில், தமிழக அரசு, காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பி வருகிறது. அந்த வகையில் 4,362 ஆய்வக உதவியாளர்களும், 2,373 முதுகலை மற்றும் சிறப்பாசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

படித்த பின்பு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் தனித்திறன் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாட நூல்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்குத் தரம் மிக்கதாகவும், கருத்தாழம் மிக்கதாகவும், கண் கவரும் வண்ணங்களோடும் நம் மாணவர்களின் கைகளில் தவழ்ந்து அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது என்றார்.

“ஆசிரியர்கள் கற்பித்தலில் மட்டும் இல்லாமல் மாணவர்களின் தேடல்களுக்கு வழிவகை செய்யும் பன்முகத்தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். .

“புதிய பாடத் திட்டங்களைச் சிறப்பான முறையில் கையாளக்கூடிய வகையில், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட முதல்வர் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளதாகக் கூறினார்

இதனால் கல்லாதவர்களே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை அதிமுக அரசு மாற்றியிருக்கிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது உரையை முடித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon