மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

என்னை மன்னித்து விடுங்கள்: கெஞ்சிய கோலி

என்னை மன்னித்து விடுங்கள்: கெஞ்சிய கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன் வாழ்நாளின் மோசமான சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, விஸ்டன் கிரிக்கெட் மாத இதழுக்குப் பேட்டியளித்தபோது, 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடரின்போது ரசிகர்களை நோக்கி நடுவிரலைக் காட்டிய சம்பவம் தன் வாழ்நாளின் மிக மோசமான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. அப்போது எல்லைக்கோடு அருகே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கோலியிடம் ரசிகர்கள் சிலர் தவறான வார்த்தைகளைப் பரிமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது பதிலுக்கு கோலி அவர்களை நோக்கி நடுவிரலைக் காட்டியிருந்தார். கோலியின் இந்தச் செய்கை கேமராவில் பதிவாகி சர்ச்சைகளுக்கு உள்ளானது. இதுகுறித்து விஸ்டனுக்கு அளித்த பேட்டியில் கோலி கூறியதாவது:

போட்டி முடிந்த பின்னர் நடுவர் ரஞ்சன் மதுகல்லே, என்னை அழைத்து விளக்கமளிக்குமாறு கேட்டார். நான் ஒன்றும் நடக்கவில்லை என்று வேடிக்கையாகக் கூறி சமாளித்தேன். அவர் உடனே ஒரு நாளிதழை என் முன் வைத்தார். அதில் நான் நடுவிரலைக் காட்டிய புகைப்படம் முதல் பக்கத்தில் வந்திருந்தது. நான் உடனே அவரிடம் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்குத் தடை விதித்து விடாதீர்கள் என்று கெஞ்சினேன். பின்னர் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன். அவர் மிகவும் நல்ல மனிதர். வீரர்களின் ஆரம்பக்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம் என்பதை அவர் புரிந்துகொண்டிருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கோலியின் தற்போதைய நிலைக்கு அவரது சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் ஷர்மாவுக்கும் மிகப்பெரும் பங்கு இருப்பதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "எனது குடும்பத்திற்கு அடுத்ததாக என்னை நன்கு புரிந்து கொண்ட மனிதர் என் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா மட்டுமே. பல ஆண்டுகள் அவருடன் செலவிட்டுள்ளேன். என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி. நான் பாதை தவறும் சமயத்தில் எல்லாம் எனக்கு நல்வழியைக் காட்டி ஊக்கப்படுத்தியவர்.

என்னிடம் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளும் ஒரே நபரும் அவர் மட்டும்தான். நான் வளரும் பருவத்தில் நான் பயப்படும் ஒரே ஆள் இவர் மட்டும்தான். எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது இவரது அகாடமியில் முதன்முதலாகச் சேர்ந்தேன். இன்றும் கூட என் ஆட்ட நுணுக்கங்கள் பற்றி இருவரும் பேசிக் கொள்வதுண்டு" என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon