மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: ஆசியப் போட்டியில் சாதித்துக் காட்டிய இந்தியா!

சிறப்புக் கட்டுரை: ஆசியப் போட்டியில் சாதித்துக் காட்டிய இந்தியா!

செந்தில் குமரன்

ஒலிம்பிக் போட்டியை அடுத்து மிகவும் பிரபலமான ஆசிய விளையாட்டுப் போட்டி இனிதே நிறைவுபெற்றுள்ளது. ஆசியப் போட்டிகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லமுடியாத இந்திய வீரர்கள் தங்களது கனவை நிறைவேற்றிக் கொள்ளவும், அடுத்த ஒலிம்பிக் போட்டிக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் ஆசியப் போட்டிகள் மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும். காமன்வெல்த் போட்டிகளும் இதே முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் ஆசியப் போட்டிகள் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் நெருக்கமானவை.

18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டில் இந்தோனேசியா நாட்டின் ஜகர்தா மற்றும் பலேம்பாங் ஆகிய இரண்டு நகரங்களிலும் நடைபெற்றன. ஆசியப் போட்டிகள் வரலாற்றில் இரண்டு நகரங்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை. ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆடம்பரமாகத் தொடங்கிய ஆசியப் போட்டிகள் செப்டம்பர் 2ஆம் தேதி வண்ணமயமான நிகழ்ச்சியுடன் இனிதே நிறைவு பெற்றது. 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் சாதித்த வீரர்களும், பதக்கத்தை நழுவவிட்ட வீரங்களும் பதக்க வேட்டையாட இந்தோனேசியா படையெடுத்தனர். இந்திய வீரர்களும் தங்களது பதக்க வேட்டைக்கு ஆயத்தமாயினர்.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 46 உறுப்பு நாடுகளும் இப்போட்டியில் பங்கேற்றன. வரலாற்றில் முதன்முறையாகத் தென்கொரியாவும், வடகொரியாவும் இணைந்து ஒரே கொடியின் கீழ் இத்தொடரில் களமிறங்கின. வழக்கம்போல, சீனாவின் ஆதிக்கம் இத்தொடரில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவோ தனது முந்தைய சாதனைகளை முறியடிக்கும் முனைப்பில் வலிமையான, திறமையான வீரர்களுடன் களமிறங்கியது. ஈட்டி எறிதலில் தேசிய சாதனை நிகழ்த்தி இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த நீரஜ் சோப்ரா, இந்தியக் கொடியை ஏந்தி, இந்திய வீரர்களை வழிநடத்தியவாறு, ஆசியப் போட்டியில் இந்தியா களம் கண்டது.

ஆசியப் போட்டியும் இந்தியாவும்

1951ஆம் ஆண்டு முதலே இந்தியா ஆசியப் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அந்த ஆண்டில் டெல்லியில் நடந்த ஆசியப் போட்டியில் 15 தங்கம், 16 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 51 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைத் தனதாக்கியது. அதன் பின்னர் 2006 வரையில் 13 ஆசியப் போட்டிகளில் இந்தியாவால் ஒரு தொடரில்கூட 50 பதக்கங்களை வெல்லவே முடியவில்லை. அதேபோல, 1951க்குப் பிறகு இந்தியாவால் தனது அதிகபட்ச தங்கப் பதக்க எண்ணிக்கையை (15) விஞ்சவே முடியவில்லை. எனவே, இந்த ஆசியப் போட்டிகளில் அதிக பதக்கங்களை வேட்டையாட வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் இருந்தனர். ஆசியப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 138 தங்கம், 178 வெள்ளி, 282 வெண்கலம் என மொத்தம் 598 பதக்கங்களை வென்றுள்ளது. 2010ஆம் ஆண்டில் சீனாவில் நடந்த ஆசியப் போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 65 பதக்கங்களை வென்றிருந்தது.

இந்த ஆண்டில் இந்தியா தனது முந்தைய சாதனைகளை முறியடித்ததா, எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து பதக்கத்தை வென்ற வீரர்கள் யார், எதிர்பார்ப்பை ஏமாற்றி பதக்கத்தை தவறவிட்ட வீரர்கள் யார், இந்திய வீரர்கள் சந்தித்த சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பார்க்கலாம்.

எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்

இந்த ஆண்டு ஆசியப் போட்டியில் இந்தியா அதிகப் பதக்கங்களைக் குவித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு நிறைய பதக்கங்கள் கிடைக்கவில்லை என்பதே உண்மை. நிறைய தங்கப் பதக்கங்களை இந்திய வீரர்கள் நூலிழையில் தவறவிட்டுள்ளனர். 2014ஆம் ஆண்டு ஆசியப் போட்டியில் இந்தியா சார்பில் மொத்தம் 541 வீரர்கள் களம் கண்டு மொத்தம் 57 பதக்கங்களை வென்றிருந்தனர். ஆண்டில் 570 வீரர்கள் பங்கேற்றதால் இன்னும் அதிகமான பதக்கங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு இந்திய மக்கள் காத்திருந்தனர்.

கபடி

இந்தியாவின் முதல் ஏமாற்றத்தைக் கபடி வீரர்கள் கொடுத்தனர். ஆசியப் போட்டி வரலாற்றிலேயே இந்தியா பங்கேற்ற அனைத்து கபடிப் போட்டிகளிலும் இந்தியாதான் சாம்பியன். ஆனால், இந்த முறை ஆண், பெண் என இரு அணிகளும் ஈரானிடம் தோல்வியடைந்து ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்தையும், இந்தியப் பெண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றி சோகத்துடன் நாடு திரும்பியுள்ளனர். இந்திய ஆண்கள் கபடி அணி இதற்கு முன்னர் களம் கண்ட அனைத்து ஏழு ஆசியப் போட்டிகளிலும் தங்கம் வென்றிருந்தது. அதேபோல, பெண்கள் கபடி அணியும் ஆண்களுக்கு நிகராக தான் களம் கண்ட இரண்டு ஆசியப் போட்டிகளிலும் தங்கம் வென்றிருந்தது.

ஹாக்கி

இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று கருதப்படும் ஹாக்கி போட்டியில் இந்த ஆண்டில் இரண்டு தங்கப் பதக்கங்கள் கட்டாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு முந்தைய ஆசியப் போட்டிகளில் இந்தியா 4 தங்கம், 11 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களை வென்றிருந்தது. சென்ற ஆண்டில்கூட இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றிருந்தது. ஆனால், இந்த ஆண்டில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் மட்டுமே கிடைத்தது. இந்தியப் பெண்கள் அணி இறுதிப் போட்டியில் ஜப்பானிடம் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இறகுப்பந்து

இறகுப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் சாய்னா நேவால், பிவி சிந்து ஆகிய இருவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. சாய்னாவுக்கு வெண்கலப் பதக்கமும், சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கமும் மட்டுமே கிடைத்தது. எனினும் ஆசியப் போட்டி வரலாற்றிலேயே தனி நபர் போட்டியில் இந்த ஆண்டில் இவர்கள் இருவரும் பதக்கங்கள் வென்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர் என்ற மனநிறைவு தங்கப் பதக்கக் கனவுக்கு ஆறுதலாய் அமைந்தது. இந்தியாவின் நம்பர் 1 வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார். பிரனாய் குமாரும் முதல் சுற்றோடு நடையைக் கட்டினார்.

ஸ்குவாஷ்

ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா ஒரு வெள்ளியுடன் மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்றிருந்தாலும் தங்கப் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிறைவேறாமலேயே போய்விட்டது. தீபிகா பலிக்கல், ஜோஸ்னா சின்னாப்பா ஆகியோர் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலமும், சவ்ரவ் கோஷல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலமும் வென்றனர்.

ஜிம்னாஸ்டிக்

இந்தியாவின் நம்பர் 1 ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான தீபா கர்மாகர் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் வால்ட் இறுதிச் சுற்றில் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட தீபா கர்மாகர் இந்தியர்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார். சென்ற ஆண்டில் நடைபெற்ற சர்வதேச ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்ற உத்வேகத்தில் இந்தத் தொடரில் களமிறங்கினார் தீபா. ஆனால், அவரால் 13ஆவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. ஒலிம்பிக் போட்டியில் நான்காம் இடத்தைப் பிடித்த அவர் ஆசியப் போட்டியில் இவ்வளவு பெரிய சறுக்கலைச் சந்தித்தது இந்திய ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மல்யுத்தம்

இந்த ஆசியப் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை பஜ்ரங் பூனியா பெற்றுத் தந்தார். ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவின் இறுதிச் சுற்றில் ஜப்பான் வீரரை வீழ்த்தித் தங்கம் வென்றார். ஆனால், இந்தியா அதிகம் எதிர்பார்த்தது 74 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட சுசில் குமார் மீதுதான். ஏனெனில் அவர் இதற்கு முன்னர் ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், காமன்வெல்த் போட்டியில் மூன்று தங்கம், ஆசியப் போட்டியில் ஒரு வெண்கலம் எனப் பதக்கங்களைக் குவித்திருக்கிறார். ஆனால், இந்த ஆசியப் போட்டியில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியுற்று வெறுங்கையோடு நாடு திரும்பினார். சந்தீப் தோமர், பவன் குமார் சுமித் மாலிக், ஹர்தீப் சிங் ஆகியோரும் பதக்கம் எதையும் வெல்லாமல் இந்தியாவுக்கு ஏமாற்றமளித்தனர். இந்தியாவுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகப் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத் தங்கம் வென்று தன் மீது இந்தியா வைத்திருந்த நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். சென்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற சாக்‌ஷி மாலிக்குக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை.

வில்வித்தை

வில்வித்தை பெண்கள் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி தனது இரண்டாவது சுற்றிலேயே வெளியேறிவிட்டார். உலகின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான இவர் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை வீணான சோகத்தில் கண்ணீருடன் நாடு திரும்பினார் தீபிகா. அடானு தாஸ், ஜகதீஸ் சவுத்ரி, விஸ்வாஸ், பிரோமிளா தைமாரி, அங்கிதா பகத், லக்‌ஷ்மிராய் உள்ளிட்ட யாரும் பதக்கம் வெல்லவில்லை. ஆறுதல் தரும் விதமாக காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஆண் மற்றும் பெண் இரண்டு அணிகளும் வெள்ளிப் பதக்கத்தை வென்றன.

தடகளத்தில் பதக்க வேட்டை

எப்போதும் போலவே தடகளப் போட்டியில் இந்தியர்களின் ஆதிக்கம் இந்த ஆண்டிலும் இருந்தது. ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.06 மீட்டர் தூரம் எறிந்து தனது முந்தைய தேசிய சாதனையை முறியடித்ததோடு தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார். வெறும் 20 வயதே ஆன நீரஜ் சோப்ரா 2018 காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார்.

ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் அர்பிந்தர் சிங் மொத்தம் 16.77 மீட்டர் தாண்டி தங்கத்தைத் தனதாக்கினார். இப்போட்டியில் மற்றொரு இந்திய வீரரான ராகேஷ் பாவுவால் ஆறாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தெஜிந்தர் சிங் தோர் 20.75 மீட்டர் தூரம் எறிந்து போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார். சோகமான விஷயம் என்னவென்றால் தங்கம் வென்று தாயகம் திரும்பிய அவரைப் பார்க்கும் முன்னரே அவரது தந்தை உயிரை இழந்ததுதான். தனது மகன் ஆசியப் போட்டியில் வென்ற பதக்கத்தை வீட்டுக்குக் கொண்டு வருவதைப் பார்க்க வேண்டும் என்பதே அவரது கடைசி ஆசையாக இருந்ததாம்.

ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் மஞ்சித் சிங் 1 நிமிடம் 46 நொடிகளில் போட்டி தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார். இதே போட்டியில் மற்றோர் இந்திய வீரரான ஜின்சன் ஜான்சனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜின்சன் ஜான்சன் 3 நிமிடம் 46 நொடிகளில் கடந்து தங்கம் வென்றார்.

ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் தேசிய சாதனைக்குச் சொந்தக்காரரான முகமது அனாஸ் (45 விநாடி 63 மணித் துளிகள்) இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதே போட்டியில் தமிழக வீரரான ஆரோக்கிய ராஜிவ் நான்காம் இடம் பிடித்து நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டார்.

ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தருண் அய்யாசாமி தேசிய சாதனையுடன் (48 விநாடி 96 மணித் துளிகள்) தங்கம் வென்றார். ஆண்கள் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தருண் அய்யாசாமி, முகமது அனாஸ், ஆரோக்கிய ராஜிவ், குன்னு முகமது ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளி வென்றது.

சோதனையைக் கடந்து சாதனை

2014ஆம் ஆண்டின் காமன்வெல்த் தொடருக்கு முன்னர் மிகுந்த எதிர்பார்ப்புடன் பதக்கக் கனவுடன் இருந்த டூட்டீ சந்த், பெண் இல்லை என்று கூறி தொடரில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்த ஆசியப் போட்டியிலும் இவர் புறக்கணிக்கப்பட்டார். இந்தியாவின் அதிவேகப் பெண்மணியான டூட்டீ சந்த் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய சாதனை படைத்தவர். மரபணு சோதனையில் தோல்வி கண்ட அவர் அதை எதிர்த்து சர்வதேச தடகள சம்மேளனத்தில் முறையிட்டு வெற்றியும் கண்டார். தன்மீது வீசப்பட்ட விமர்சனக் கற்களைத் தாங்கிக் கொண்டு, ஆசியப் போட்டியில் பதக்கம் வென்று, விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்க ஆயத்தமானார் டூட்டீ சந்த். அதன்படியே 100 மீட்டர், 200 மீட்டர் என இரண்டு போட்டியிலும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதித்துக்காட்டினார்.

இந்தியாவின் தங்க மங்கை

யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் தடகளப் போட்டிகளில் புதிய நட்சத்திரம் உதிக்கும் என்று. குறுகிய காலத்திலேயே தலைப்புச் செய்திகளில் தனது சாதனைகளால் மேலே வந்தவர்தான் ஹிமா தாஸ். இந்த ஆசியப் போட்டிக்கு முன்னர் சர்வதேச இளையோர் தடகளப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற இவர், இந்த ஆசியப் போட்டியில் எத்தனை பதக்கங்களைக் குவிப்பார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதன்படி அரையிறுதிப் போட்டி, இறுதிப் போட்டி என இரண்டு நாட்களில் இரண்டு முறை தேசிய சாதனையைத் திருத்தி எழுதிய ஹிமா தாஸ், 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளி வென்றார். இந்த ஆசியப் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், ஆரோக்கிய ராஜிவ், எம்.ஆர்.பூவம்மா ஆகியோருடன் இணைந்து மற்றொரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். பெண்கள் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று தங்கப் பதக்கத்தின் மீதான தாகத்தைத் தணித்துக்கொண்டார் ஹிமா தாஸ்.

200 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதியில் பங்கேற்ற ஹிமா தாஸ் ஓடுவதற்கான ஒலி எழும்புவதற்கு முன்னரே ஓடத் தொடங்கியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இல்லாவிட்டால் அவர் கண்டிப்பாக ஏதேனும் ஒரு பதக்கத்தை வெல்வதற்கான வாய்ப்பு அவருக்குப் பிரகாசமாக இருந்தது. அதேபோல, 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் பேட்டனை மாற்றும் போது பஹ்ரைன் வீராங்கனை குறுக்கே விழுந்ததால் அவரது ஓட்டத்தின் வேகம் குறைந்ததாக இந்தியா தரப்பில் புகாரளிக்கப்பட்டது. ஆனால் அப்புகார் பின்னர் ரத்து செய்யப்பட்டு விட்டது.

தங்கம் வென்ற ஏழை மகள்

பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் மொத்தம் 6,026 புள்ளிகளுடன் தங்கம் வென்று சாதித்தார். ஹெப்டத்லான் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது ஆசியப் போட்டி வரலாற்றில் இதுவே முதன்முறை. தொடக்கத்தில், உயரம் தாண்டும் பிரிவில் தனது தாடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் தொடர்ந்து விளையாடிய ஸ்வப்னா, இறுதியில் தங்கத்தை வென்றபோது அவரது காயத்தின் வலி காணாமலேயே போயிருக்கும். கை ரிக்‌ஷா இழுக்கும் ஏழைத் தந்தையின் மகளான ஸ்வப்னா, சாதிப்பதற்கு விடா முயற்சி மட்டும் போதும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார்.

மற்ற பதக்கங்கள்

3,000 மீட்டர் பெண்கள் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் சுதா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில் சித்ராவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. தட்டு எறிதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சீமா பூனியாவுக்கு இந்த ஆண்டு வெண்கலம் மட்டுமே கிடைத்தது. நீளம் தாண்டுதல் போட்டியில் நீனா வரக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

சுடச் சுடத் தங்கம்

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சவுரப் சவுத்ரியும், பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ரஹி சர்னோபாத்தும் தங்கம் வென்றனர். தீபக் குமார், சஞ்சீவ் ராஜ்புட், லக்‌ஷாய் செரான், ஷர்துல் விகான் ஆகியோருக்கு வெள்ளிப் பதக்கமும், ஹீனா சித்து, ரவி குமார் & அபூர்வி சண்டேலா, அபிஷேக் வெர்மா ஆகியோருக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது.

மற்ற போட்டிகள்

மூவர் பங்கேற்கும் ஆண்கள் படகுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா & திவிஜ் சரண் இணைக்குத் தங்கம் கிடைத்தது. ஆண்கள் குத்துச் சண்டை 49 கிலோ எடைப் பிரிவுக்கான தங்கம் அமித் பங்கலுக்குச் சொந்தமானது. பிரிட்ஜ் போட்டியில் இந்திய இணை தங்கம் வென்றது. ஈக்குவஸ்ட்ரைன், குராஷ், செயிலிங், லான் டென்னிஸ், வுஷு, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளிலும் இந்திய வீரர் -வீராங்கனைகள் குறிப்பிடும்படியான பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர்.

பறிபோன வெண்கலம்

ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்திய வீரர் லக்ஷ்மணன் கோவிந்தன் மூன்றாவதாக வந்து வெண்கலப் பதக்கத்துக்குச் சொந்தக்காரரானார். ஆனால், போட்டியின் முடிவில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். அவர் ஓடும்போது மைதானத்தின் உள்பகுதியில் அவர் காலை வைத்தது கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது வெண்கலப் பதக்கம் கைக்கு வராமலேயே பறி போய்விட்டது.

சாதித்துக் காட்டிய இந்தியா

இந்த ஆண்டு ஆசியப் போட்டியில் இந்திய வீரர்கள் 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் உற்சாகமாக நாடு திரும்பியுள்ளனர். ஆசியப் போட்டி வரலாற்றிலேயே இந்தியா வெல்லும் அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இதுதான். பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் தேசியக் கொடியை ஏந்தியவாறு இந்த ஆசியத் தொடரிலிருந்து இந்திய வீரர்கள் மகிழ்ச்சியுடன் அணிவகுத்து இந்தோனேசியாவிலிருந்து விடை பெற்றனர்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon