மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

மாவோயிஸ்ட் உறுப்பினர்களே: மகாராஷ்டிர அரசு!

மாவோயிஸ்ட் உறுப்பினர்களே: மகாராஷ்டிர அரசு!

கைது செய்யப்பட்ட இடதுசாரி ஆதரவாளர்கள், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர்கள்தான் என்றும் அவர்கள் ஆயுதக் கிளர்ச்சிக்குத் தயாராகி வருகின்றனர் என்றும் மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சமூகச் செயற்பாட்டாளர்களான கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சல்வெஸ், அருண் ஃபெரைரா, எழுத்தாளர் வரவரராவ் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த கைது சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரலாற்று நிபுணர் ரோமிலா தாப்பார் பேராசிரியர்களான பிரபாத் பட்நாயக், தேவகி ஜெயின், சத்தீஸ் தேஷ்பாண்டே மற்றும் மாயா தருவாலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கொன்றைத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது. சமூகச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த நிலையில், மகாராஷ்டிர போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 5) பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், “கைது செய்யப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். பெரிய அளவிலான வன்முறை பொருட்சேதம் ஆகியவற்றை ஏற்படுத்தி குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற மாவோயிஸ்ட் இயக்க சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் உள்ளனர்.

எல்ஜார் பரிஷத் என்ற பெயரில் பீமா கோரேகான் கிராமத்தில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற்றது. குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளுடன் விளையாடும் விதமாக இது நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. லேப்டாப், பென் டிரைவ் ஆகிய ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ள மகாராஷ்டிர போலீஸார், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஆயுதக் கிளர்ச்சிக்கு திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் விசாரணையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆதாரங்களை அவர்கள் அழிக்காமல் இருக்க அவர்களைக் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமாகிறது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 5 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon