மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

கேரள அமைச்சர்: விஜய், பிரபாஸிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்!

கேரள அமைச்சர்: விஜய், பிரபாஸிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்!

கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதியுதவி செய்த நடிகர்கள் விஜய், பிரபாஸ், லாரன்ஸ் ஆகியோரைப் பார்த்து மலையாள நடிகர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன் கூறியிருக்கிறார்.

அண்மையில் கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதில் 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 320க்கும் மேற்பட்டோர் பலியாகினர். கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் நிதி அளித்தனர். ஆனால், மற்றவர்களைவிட மலையாள நடிகர்கள் குறைவான அளவிலேயே நிதி அளித்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுலாத் துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன், “தெலுங்கு நடிகர் பிரபாஸ் மலையாளத்தில் நடித்ததில்லை. ஆனாலும், அவருக்கு மலையாளத்தில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மலையாளத் திரைப்பட உலகோடு தொடர்பில்லாத பிரபாஸ் வெள்ள நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அதேபோல் தமிழ் நடிகர் விஜய் 75 லட்ச ரூபாயும் , நடிகர் லாரன்ஸ் 1 கோடி ரூபாயும் நிதியுதவி அளித்திருக்கின்றனர். முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு முதல் தொகையாக நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி கொடுத்தார்கள். ஆனால், இங்கே மலையாளத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான கார் வைத்திருக்கும் நடிகர்கள் கூட மிகக் குறைவாகவே நிதியுதவி அளித்திருக்கிறார்கள்.

நடிகர் மோகன்லால் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார். மம்மூட்டி மற்றும் அவரது மகன் இணைந்து ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார்கள். இன்னும் பல நடிகர்கள் களத்தில் இறங்கி வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டதைப் பாராட்டியே தீர வேண்டும். இருந்தாலும் அண்டை மாநிலத்து நடிகர்கள் அளவுக்கு இவர்கள் நிதியுதவி அளிக்கவில்லையே என்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான். அவர்கள் எல்லோரும் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார். இதே கருத்தை மலையாள நடிகை ஷீலாவும் கூறியுள்ளார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon