மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

பதவி நீக்க வாய்ப்பில்லை: ஜெயக்குமார்

பதவி நீக்க வாய்ப்பில்லை: ஜெயக்குமார்

அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரை பதவியிலிருந்து நீக்குவதற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் அரசு அதிகாரிகளின் இல்லங்கள் உள்பட 35 இடங்களில் நேற்று காலை முதல் சிபிஐ குழுவினர் சோதனை நடத்தினர். மாலை 6 மணிக்கு நிறைவுற்ற இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “இறுதித் தீர்ப்பு வரும்வரை சட்டத்தின் பார்வையைப் பொறுத்தவரை அனைவருமே நிரபராதிகள்தான். சிபிஐயின் நடவடிக்கைகளை வைத்து எதையும் தீர்மானிக்க முடியாது. ஒருவர் குற்றவாளி என்பதை நீதிமன்றம்தான் இறுதி செய்யும்” என்று தெரிவித்தார்.

“விசாரணைகள், சோதனைகள் என்பது வழக்கமாக நடைபெறக் கூடியது. சோதனை நடத்தி அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, அதை சிபிஐ குழு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பர். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று புகார் உண்மையா, இல்லையா என்பது தீர்ப்பு வந்த பிறகுதான் தெரியும். பின்னர் தான் நீக்குவதற்காகத் தார்மீக உரிமையை எழுப்ப முடியும். இந்த நிலையில் அவர்களை நீக்குவதற்கான வாய்ப்பில்லை” என்று குறிப்பிட்ட அமைச்சர், 2ஜி விவகாரம் வந்த நேரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டார்களா என்ன என்று கேள்வி எழுப்பினார்.

புதன், 5 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon