மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

காமெடியன்களுக்கு மதிப்பளியுங்கள்: வித்யூலேகா

காமெடியன்களுக்கு மதிப்பளியுங்கள்: வித்யூலேகா

காமெடி நடிகர்களின் உடலை வைத்தும், அவர்களை அடித்தும் மட்டமான காமெடி செய்யாதீர்கள் என்று நடிகை வித்யூலேகா ராமன் தெரிவித்துள்ளார்.

நீதானே என் பொன் வசந்தம், தீயா வேலை செய்யணும் குமாரு, வீரம், ஜில்லா போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தவர் வித்யூலேகா ராமன். தமிழ் தவிர தெலுங்கில் இவரது கைவசம் பல படங்கள் தற்போதுள்ளன. அவ்வப்போது ட்விட்டரில் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறவர், காமெடி நடிகர்கள் மீதான பார்வையும் அவர்களுக்காகக் கட்டமைக்கப்படும் காட்சிகளும் மாற்றம் காண வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

காமெடி நடிகர்களின் உடல் வாகு, பருமனான தேகம், நிறம் ஆகியவற்றை வைத்து காமெடி செய்வதையும், காமெடி நடிகர்களை அடித்து அதை வைத்து மட்டமான காமெடி செய்வதும் கூடாது எனப் பல பேட்டிகளில் கூறிவருகிறார். இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் அவரது மேலதிகாரி சொல்லும் வேலை பிடிக்கவில்லை என்றால் வேலையை விட்டுவிட்டு வீட்டில் சம்பளம் இல்லாமல் இருக்க முடிகிறது. ஆனால் எனது வேலை மட்டும் ஏன் உங்களுடையதில் இருந்து வித்தியாசமாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை வைத்துப் பார்க்கும்போது, படப்பிடிப்பு தளத்திலோ, அல்லது வேறெங்கேயோ யாரோ இவரை உடலை வைத்து அவமானப்படுத்தி விட்டனரா அல்லது நடிக்கும்போது அதிகளவிலான சிரமம் உள்ளதா என நெட்டீசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் ஆறுதலாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக, கவர்ச்சியாக ஆடை அணிந்து அந்தப் படத்தை ட்விட் செய்த வித்யூலேகா விமர்சனத்துக்குள்ளானார். அதற்குப் பதிலளித்த அவர், “ஒரு காமெடியனாக நான் மிகவும் பிசியாக நடித்து வருகிறேன். ஹீரோயினாக நடிப்பது குறித்து இதுவரை நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. பெண்களுக்குத் தங்கள் உடல் பெரிதாக இருந்தாலும், என்ன நிறமாக இருந்தாலும், அதை அழகானதாக உணர வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இந்தப் படங்கள் எடுத்தேன். இதைப் பார்த்து நூறு பெண்களாவது தன்னம்பிக்கையையும், உறுதியையும் வளர்த்துக் கொண்டால் அதுவே எனக்கு போதும்” என்று கூறியிருந்தார்.

இவர் தமிழின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் மோகன் ராமனின் மகள்.

புதன், 5 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon