மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

தன்பாலின உறவு வழக்கு: இன்று தீர்ப்பு!

தன்பாலின உறவு வழக்கு: இன்று தீர்ப்பு!

தன்பாலின உறவைக் குற்றமாகக் கருதும் குற்றவியல் சட்டப் பிரிவு 377ஐ நீக்கக் கோரும் வழக்கில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டப்பிரிவு 377இன்படி, இயற்கைக்கு மாறான உடலுறவு தண்டனைக்குரிய செயலாக வரையறுக்கப்பட்டது. இதன்படி, தன்பாலின உறவை விருப்பத்துடன் மேற்கொண்டாலும் அது குற்றமாகக் கருதப்படும் நிலை உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர், தற்போது தன்பாலின உறவை விரும்புபவர்களும் தங்களுக்கான மரியாதையைச் சமூகம் வழங்க வேண்டுமென்று எண்ணுகின்றனர். இதன் ஒரு பகுதியாகவே, தன்பாலின உறவில் விருப்பத்துடன் ஈடுபடுவதைக் குற்றமாகக் கருதும் சட்டப் பிரிவு 377ஐ நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, இது தொடர்பான மனுக்களை விசாரணை செய்தது. தன்பாலின உறவைக் குற்றமாகக் கருதும் சட்டப் பிரிவை நீக்கக் கோரும் வழக்குகள் தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டது. மத்திய அரசு விளக்கம் தந்த நிலையில், இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த பிறகு, தீர்ப்பு வழங்கப்படாமல் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 6) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்த மாத இறுதியில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஒன்றான இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

புதன், 5 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon