மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: சோபியாக்களும் தமிழிசைகளும்!

சிறப்புக் கட்டுரை: சோபியாக்களும் தமிழிசைகளும்!

ஆரா

பிடித்தமான நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது குழந்தை ரிமோட்டை வைத்து போகோவுக்கு மாற்றினால் சகித்துக்கொள்ள முடியாமல் கோபப்படும் அப்பாக்கள் இப்போது அதிகரித்திருக்கிறார்கள்.

தேர்வு முடிவுக்கு முன்னரே, “நீ பெயிலாதான் போகப் போறே” என்று பெற்றோர் திட்டியதைச் சகிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மாணவி, மறுநாள் பாஸ் செய்துவிட்டார். ஆனால், தான் பாஸானதைக் காண அவள் உயிரோடு இல்லை.

செய்தித் தாள்களில் இதுபோன்று ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். ஒரு உச் கொட்டிவிட்டு அடுத்த பக்கத்தைப் புரட்டிக்கொண்டே காபியை உறிஞ்சுகிறோம். இப்படி சமூகத்தில் சகிப்புத்தன்மை, பொறுத்தல் என்பதெல்லாம் என்பது தனி மனித வாழ்வு முதல் பொது வாழ்க்கை வரை மிக வேகமாகத் தேய்ந்து கொண்டிருக்கின்றன.

பெயர் தெரியாத மனிதர்களின் சகிப்புத் தன்மையற்ற செயல்கள் செய்தி தாள்களில் எட்டாம் பக்கமோ, ஒன்பதாம் பக்கமோ வருகிறது. பெயர் தெரிந்த பிரபலங்களின் சகிப்புத் தன்மையற்ற செயல்பாடுகள் பரபரப்பாகி அனைவரையும் பேச வைத்துவிடுகின்றன.

கருத்துரிமை, சகிப்புத் தன்மை என்ற தளங்களிலிருந்துதான் தூத்துக்குடி விமான சம்பவத்தையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

பொது வாழ்க்கைக்கு வர வேண்டுமென்றால் சூடு, சொரணை இருக்கக் கூடாது என்பதுதான் பொதுவாகவே அரசியல்வாதிகள் கற்க வேண்டிய அரிச்சுவடி. இதற்கு அர்த்தம் சுய மரியாதை இழந்து சூடு, சொரணை அற்று இருக்க வேண்டும் என்பதல்ல. பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் எதிர் முகாமில் இருப்பவர்கள் விமர்சிக்கிறோம் என்ற பெயரில் தனிப்பட்ட தாக்குதலைச் செய்வார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்பதே அந்த அரிச்சுவடி.

சகிப்புத் தன்மையும் சில சரித்திரக் குறிப்புகளும்!

தமிழகத்தின் அரசியல் பாட்டையைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் பல்வேறு குரூர விமர்சனங்களும், அதை மிக இலகுவாக எதிர்கொண்ட தலைவர்களையும் பார்க்க நேரிடும்.

நான் சிறுவனாக இருந்தபோது திமுக கூட்டம் நடக்கும் இடங்களுக்கு அருகே அதிமுகவினர் சென்று, “கட்டுக் கட்டு கமார் கட்டு கருணாநிதியை ஒழிச்சுக் கட்டு” என்ற கோஷமிட்டதைக் கேட்டிருக்கிறேன். அதேபோல ஜெயலலிதாவை மிகக் கேவலமான முறையில் சித்திரித்து கோஷமிட்ட திமுகவினரையும் பார்த்திருக்கிறேன்.

பெரியார் மீது செருப்பு வந்து விழுந்தபோது, செருப்பு வீசியவர் ஒன்றைத்தான் வீசியிருக்கிறார், இன்னொன்றையும் வீசினார் என்றால் அது உபயோகமாக இருக்கும் என்று அந்தச் செருப்படிக்கே செருப்படி கொடுத்தார் பெரியார்.

காஞ்சிபுரத்தில் ஒரு சுவரில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து திமுகவினர் திடுக்கிட்டார்கள். தங்கள் தலைவர் அண்ணாவின் பிறப்பு பற்றி மிகவும் தரக் குறைவாக எழுதப்பட்டிருந்தது. ஆனால், யார் எழுதியது என்ற குறிப்பு அதில் இல்லை. உடனே அண்ணாவிடம் ஓடிச் சென்ற தொண்டர்கள், இதுபற்றி பதற்றமாகக் கூறினார்கள்.

என்ன எழுதியிருக்கிறார்கள் என்று அண்ணா கேட்டார். சொன்னதும், “சந்துமுனை சிந்து பாடிகள், வேலையற்ற வீணர்கள் எழுதியதைப் பகலில் எல்லாரும் படித்துவிடுவார்கள். இரவில் இருட்டிவிடுமே. அதனால் அந்தச் சுவர் அருகே இரவு ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை வையுங்கள். இரவிலும் படிக்கட்டும் நான் யாருடைய மகன் என்று” எனத் தன் தொண்டர்களுக்கு உத்தரவிட்டார் அண்ணா. இதுதான் அண்ணா தன் மீதான தாக்குதலை எதிர்கொண்ட விதம்.

இதேபோல 1952ஆம் ஆண்டு கலைஞர் வசனத்தில் வெளிவந்த பராசக்தி படம் இந்து மத நம்பிக்கைகளையும், குறிப்பாகக் கோயிலில் பூஜை செய்பவர்களை இழிவுபடுத்தியும் அமைந்திருப்பதாக அப்போதைய முதல்வர் ராஜாஜியிடம் புகார் போனது. ராஜாஜியும் பராசக்தி பார்த்தார். அதில் ராஜாஜிக்குப் பல்வேறு மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் ஒரு படத்தைத் தடை செய்யக் கூடாது என்றே முடிவெடுத்தார் ராஜாஜி.

சகிப்புத் தன்மை பற்றிக் கடந்த சில தலைமுறைகளின் பதிவுகள் இவை.

சில மாதங்களுக்கு முன்பு...

சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் சிதம்பரம் நகரில் மதிமுக சார்பில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடைப்பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. வைகோ பேசிக்கொண்டிருக்கிறார்.

தூத்துக்குடி - நெல்லை நெடுஞ்சாலைக்குப் பக்கத்தில்தான் மேடை. எனவே கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் போய்க்கொண்டிருக்கும். அப்படி வைகோ பேசும்போது அந்த வழியாகச் சென்ற கூட்டமே இல்லாத ஒரு பேருந்தில் தலையை வெளியே நீட்டிய யாரோ ஒரு தனி நபர், மேடையை பேருந்து கடந்து செல்லும் நிமிடத்தில், வைகோவை நோக்கி மிக மோசமான வட்டார வழக்கில் ஒரு சாடுதல் வார்த்தையை வீசிவிட்டுச் செல்கிறார். அன்று வைகோ அதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டிருந்தால் மதிமுக நிர்வாகிகள் அந்த தனி நபரை இழுத்துப் போட்டு உதைத்திருப்பார்கள். ஆனால், தன்னை நோக்கி வீசப்பட்ட அந்த வார்த்தையைக் கேட்டு தலையில் அடித்துக்கொண்டு, “விடு அவனை எல்லாம்… டாஸ்மாக் படுத்துற பாடு” என்று ஒரு புழுவைத் தாண்டுவது போல தாண்டிவிட்டார் வைகோ. இதனால் அந்தச் சம்பவம் செய்தி ஆகாமல் அப்படியே செத்துப் போனது.

தவிர்த்திருக்கலாம் தமிழிசை!

இப்பேர்ப்பட்ட தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் அந்த விமானச் சம்பவத்தை இவ்வளவு பெரிதுபடுத்தியிருக்க வேண்டாம் தமிழிசை.

பாசிச பாஜக அரசு ஒழிக என்று அந்த மாணவி சோபியா முழக்கமிட்டார் என்னும் பட்சத்தில் தமிழிசைக்கு இருக்கும் அரசியல் முதிர்ச்சிக்கு அவர் செய்திருக்க வேண்டியதே வேறு. அந்த மாணவியை அருகே அழைத்து “வாம்மா, என்ன பண்றீங்க” எனக் கேட்டு, “பாசிஜ பாஜக அரசு ஒழிக என்று சொல்வது உங்கள் கருத்து. ஆனால், அதை இங்கே சொல்லக் கூடாதும்மா... வாங்க வெளியில் போய் பேசுவோம்” என்று ஒரு செல்ஃபி எடுத்திருந்தால் நிலைமையே வேறாகியிருக்கும். ஆனால் தமிழிசை அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டார்.

“நீதிபதியின் வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் எல்லாமே தீர்ப்புதான்” என்று மூத்த வழக்கறிஞர்கள் சொல்லுவார்கள். அதுகூட நீதிமன்றத்தில்தான். அதுபோல அரசியல்வாதி எல்லா இடத்திலும் அரசியல்வாதியாகவே இருப்பார் என்று நாம் எல்லாரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

தமிழிசை அப்போது சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானப் பயணி. சோபியா கனடா நாட்டில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவி. அவரது படிப்புக்கு அவர் செய்ய வேண்டிய அரசியல் என்பது, தமிழிசை முன் சென்று, தன்னை பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு, “மேடம்... நீங்கள் செய்வது எனக்கு உடன்பாடில்லை. பாசிச அரசாக பாஜக இருக்கிறது. அதனால் மத்திய அரசுக்கு எதிராகத்தான் நான் ஓட்டுப் போடுவேன். இதைப் படித்த பெண்களின் மன நிலையாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றால் அது தமிழிசைக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமே வேறு. ஆனால், சோபியாவும் தன் அந்தஸ்தைக் குறைத்துக்கொண்டார், தமிழிசையும் தன் அந்தஸ்தைக் குறைத்துக்கொண்டார்.

எனக்கும் தமிழ்தான் மூச்சு

ஆனால் அதைப்

பிறர்மீது விட மாட்டேன்

என்ற ஞானக் கூத்தன் கவிதைகளை யாராவது சோபியாவுக்குச் சொல்லிக் கொடுத்தல் நலம்.

தமிழிசையின் கனிவு எங்கே?

தமிழிசையைப் பற்றிப் பல வருடங்களாக அறிந்தவன், அவருடன் சில ஆண்டுகள் பழகியவன் நான். ஒரு மருத்துவர் என்ற முறையில் கனிவு நிறைந்தவர் தமிழிசை. தன்னை விட வயதில் குறைவானவர்கள் என்றாலும், “வாங்கப்பா... சரிங்கப்பா... சாரிப்பா...” என்று மரியாதையோடும் கனிவோடும் பழகக்கூடியவர்.

ஒருமுறை தமிழிசை ஏதோ ஒரு கூட்டம் முடித்துவிட்டுத் தன் இல்லம் திரும்பிக்கொண்டிருக்கிறார். அப்போது இரவு பத்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. தெருமுனையில் ஒரு பாட்டி உட்கார்ந்திருக்கிறார். அவர் முன்னால் விற்பனையாகாத கீரைக்கட்டுகள் வாடிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கீரைக் கட்டுகளை விட அந்த பாட்டியின் முகம் வாடியிருக்கிறது. சட்டென அதைப் பார்த்த தமிழிசை வண்டியை நிறுத்தி தன் உதவியாளரிடம் சொல்லி விற்காமல் மீதமிருக்கும் கீரைக் கட்டுகளை வாங்கிவரச் சொல்கிறார். அதற்குரிய தொகையைவிடக் கூடுதலாகவே கொடுத்து வாங்குகிறார் தமிழிசை. அப்போது அவரது டிரைவர், “என்ன மேடம் இனிமே இந்த கீரையைச் சாப்பிட முடியாது மேடம். வீணா போயிடுச்சு” என்று சொன்னார். அதற்கு தமிழிசை, “நான் சாப்பிட வாங்கலப்பா... அந்த அம்மா சாப்பிடணும்ல” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

இப்படிப்பட்ட கனிவுக்குரிய தமிழிசை சமீப மாதங்களாகத் தன் மேல் தொடுக்கப்பட்டுவரும் தனிநபர் விமர்சனங்களால் மிகவும் வேதனை அடைந்திருக்கிறார். அண்மையில் அவர் அளித்த தொலைக்காட்சிப் பேட்டிகளில்கூட , “நடு இரவிலெல்லாம் போன் வருகிறது. திட்டித் தீர்க்கிறார்கள்” என்று பதிவு செய்திருந்தார். இதை தமிழிசை என்ற பெண் அரசியல்வாதியின் தொடர் மன உளைச்சலின் வெளிப்பாடாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது.

இப்படிப்பட்ட ஓர் உளைச்சலை அவருடைய சூழல் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருந்த நிலையில்தான் சோபியாவின் கருத்து ரீதியான விமர்சனம் அவரைக் காயப்படுத்தியிருக்கிறது. சோபியா தமிழிசை மீது தனிப்பட்ட தாக்குதல் எதையும் முன் வைக்கவில்லை. அரசியல் ரீதியான கருத்து முழக்கம்தான் அது. ஆனாலும் இடம் பொருள் அறிந்து விமர்சனம் செய்ய வேண்டியது விமர்சகர்களின் கடமையாகிறது.

சமூகதளங்களின் ஃபோபியா!

இதை எல்லாம்விடச் சமூகதளங்களில் செயல்படும் அரசியல் ஆர்வலர்களுக்கும், ஆர்வக் கோளாறுகளுக்கும் அன்றன்றைக்கு ஏதோ ஓர் அரிப்பு தேவையாகியிருக்கிறது. இல்லையென்றால் தாங்களாகவே ஓர் அரிப்பை ஏதோ ஒரு வகையில் உருவாக்கி அதன் மீது அன்றைய பொழுதை நகர்த்த முனைகின்றனர். அதேநேரம் அரசியல் ரீதியான கொள்கை ரீதியான எதிர்ப்புகளை ஹேஷ்டாக் என்ற புதிய போராட்ட வடிவத்தின் மூலம் நடத்துவதும் இணையதளத்தை ஒரு கருத்துப் போராட்டக்களமாக மாற்றியிருக்கிறது.

பாசிச பாஜக ஒழிக என்பது கருத்து சார்ந்த வாசகம்தான். ஆனால், அதைப் பரப்புபவர்களே, மாற்றுக் கருத்துகளின்பால் சகிப்பின்மையையும் வெளிப்படுத்துகிறார்கள். தூத்துக்குடி சம்பவம் பற்றி ஓவியா ஒரு கருத்தை முன் வைத்ததும் அது தங்களுக்கு எதிரானதாக இருப்பதாகச் சொல்லித் தமிழிசைக்கு நிகராக ஓவியாவையும் தாக்குகின்றனர். இதன் மூலம் சமூகதளங்களில் அறிவுசார் விவாதங்களைக் காட்டிலும், “வார்டன்னா அடிப்போம்” என்ற வடிவேலு காமெடியே அதிகம் நடக்கிறது என்பது தெரிகிறது.

ஆயுதமும் கேடயமும்

கருத்துரிமை என்ற ஆயுதமும் சகிப்புத்தன்மை என்ற கேடயமும் இன்று எல்லாருக்கும் இன்றியமையாத தேவையாக உள்ளது. வீட்டில் வாழ்வது தனி வாழ்க்கை என்றால் வீட்டை விட்டு வெளியே வரும் நொடியே நாம் எல்லாரும் பொதுவாழ்வில்தான் இருக்கிறோம். எனவே எல்லாருக்குமே இந்த ஆயுதமும் கேடயமும் அவசியமாகிறது. அதைப் பயன்படுத்தும் முறையில் சோபியாக்களும், தமிழிசைகளும் இன்னும் கவனம் செலுத்த வேண்டியதாகியுள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon