மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு விதிகள்!

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு விதிகள்!

டிஜிட்டல் கட்டணப் பரிவர்த்தனைகளுக்கு விரைவில் விதிகள் வகுக்கப்படும் என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஸ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் டிஜிட்டல் கட்டண முறைகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் சமூகமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும். டிஜிட்டல் கட்டணங்களுக்கான விதிகள் விரைவில் வகுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 312.02 மில்லியன் பரிவர்த்தனைகள் யூபிஐ தளத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஜூலை மாதத்தில் நடந்த 235.65 மில்லியன் பரிவர்த்தனைகளைக் காட்டிலும் 32 விழுக்காடு அதிகமாகும் என்று கடந்த வாரத்தில் இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தது. மதிப்பீட்டின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.54,212.26 கோடி மதிப்பிலான யூபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது ஜூலை மாதத்தைக் காட்டிலும் 18 விழுக்காடு அதிகமாகும். ஜூலை மாதத்தில் ரூ.45,845.64 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நிதிச் சேவைகள் துறை செயலாளர் ராஜிவ் குமார் இதுபற்றி தனது ட்விட்டர் பதிவில், “டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மக்கள் வேகமாக உள்வாங்கத் தொடங்கியுள்ளனர். டிஜிட்டல் இந்தியா திட்டம் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரொக்கப் பணமில்லா பொருளாதாரம் உருவாகி வருகிறது” என்று கூறியுள்ளார்.

புதன், 5 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon