மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

15ஆவது நிதிக்குழு: சிபிஎம், தேமுதிக வலியுறுத்தல்!

15ஆவது நிதிக்குழு: சிபிஎம், தேமுதிக வலியுறுத்தல்!

மாநில வளர்ச்சிப் பணிகள், ஒதுக்க வேண்டிய நிதி ஆகியவை குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் 15ஆவது நிதிக்குழு ஆலோசனை நடத்தி கருத்துகளைக் கேட்டு வருகிறது. அந்த வகையில், என்.கே.சிங் தலைமையிலான 15ஆவது நிதிக்குழு 8ஆம் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறது.

சென்னை, தலைமைச் செயலகத்தில் நிதிக்குழு ஆலோசனை கூட்டம் நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்றது. தேமுதிக சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் மோகன்ராஜ், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர். அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், “வருவாய் பங்கீடு என்பது மக்கள்தொகை அடிப்படையில் பிரிக்கப்படுவதாகும். அரசியல் அமைப்பு சட்ட விதிகள் 55, 170 (மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி வரையறை செய்வது) விதி 330 (நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வரையறை) என்பது 1971ஆம் ஆண்டின் மக்கள்தொகை அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டதைப் போலவே வருவாய் அதிகாரப் பகிர்வும் முடிவெடுக்கப்பட வேண்டும்.

15ஆவது நிதிக்குழு 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென்று விவரிக்கிறது. 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் முடிவெடுத்தால், அதிகப்படியான தவறுகள் உருவாவதற்கும், மேலும் அடிப்படை அரசியல் அமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கு எதிரானதாகவும், ஒருதலைபட்சமாகவும் அமைந்துவிடும்.

15ஆவது நிதிக்குழு 2011 மக்கள்தொகை அடிப்படையில் வருவாய் பங்கீட்டை அமல்படுத்தினால் தமிழ்நாட்டுக்கு வந்து சேரவேண்டிய அதிகப்படியான நிதி ஆதாரங்கள் வடமாநிலங்களுக்குச் சென்றுவிடும் என்பதால், மக்கள்தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பது போல் ஆகிவிடும்.

மேலும், நிதிக்குழுவானது நிதி ஒதுக்கீடு செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, திட்டங்களுக்கு முறையாக உபயோகப்படுத்தப்பட்டதா என்பதையும், எந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டதோ அந்த நிதி வேறு திட்டத்துக்காக மாற்றாமல் இருப்பதையும் நிதிக்குழு கடுமையாக கண்காணிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, தான் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற எடுக்கும் நடவடிக்கைகளை நிதி ஆணையம் தீர்மானிப்பதோ, நிராகரிப்பதோ பொருத்தமற்றது, ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.

தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் கடந்த காலங்களில் பல விஷயங்களில் சிறப்புற செயல்பட்டு சாதித்தவற்றுக்கு ஊக்கமளித்தல் உண்டா என்ற கேள்வி எழுகிறது. தற்போதைய நடவடிக்கைகளை மட்டும் கணக்கில்கொண்டு கடந்த கால சாதனைகளை ஊக்கமளித்தல் கணக்கில் விட்டுவிடுவதும் பிரச்சினையாகும்.

எனவே, இந்த ஊக்கமளித்தல் என்பதே - அதுவும் அதிகாரிகளைக் கொண்ட நிதி ஆணையம், அதுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிதி ஆணையம் ஊக்கமளித்தலின் வரையறைகளை நிர்ணயிப்பது என்பதே பொருத்தமற்றது.

பணி பட்டியலின் ஷரத்து 6 (ஏ) ஜிஎஸ்டி தொடர்பானது. உண்மையில் ஜிஎஸ்டி அமலாக்கம் மாநிலங்களின் வருமானத்தைப் பாதித்துள்ளது. மாநிலங்களின் சொந்த வரி வருமானத்தில் 44 சதமானம் ஜிஎஸ்டிக்குள் வந்துவிட்டது. மத்திய அரசைப் பொறுத்தவரையில் இந்த சதவிகிதம் 23 சதவிகிதம்தான். Cess மற்றும் Surcharges மூலம் மத்திய அரசு பெறும் வருமானம் அதன் மொத்த வரி வருமானத்தில் 2011-12இல் 6 சதவிகிதமாக இருந்தது. 2018-19இல் 12 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய தொகைகள் கணிசமாக உள்ளன. பட்டியல் இன மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பாக்கி உள்ளன. தமிழ்நாடு வர்தா புயல், ஓக்கி புயல், கடும் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு அளித்துள்ள நிவாரணத் தொகைகள் மிகவும் சொற்பமே.

15ஆவது நிதி ஆணையம் இயற்கை சீற்றங்களாலும் பேரழிவு நிகழ்வுகளாலும் பாதிக்கப்படும்போது நியாயமான நிவாரணத் தொகையை மத்திய அரசு அளித்திடும் வகையில் பொருத்தமான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்.

கோட்பாடு ரீதியாக, நிதி மற்றும் அதிகாரப்பங்கீட்டில் மையப்படுத்தும் தன்மை நிராகரிக்கப்பட்டு, அதிகாரங்களும் நிதி பகிர்வும் பரவலாக்கப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த நிதி ஆணையம் பரிந்துரைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் இந்த நிதிகள் மாநில அரசுகள் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்பதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதன், 5 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon