மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

ரஃபேல் ஒப்பந்தத்துக்குத் தடை கோரி மனு!

ரஃபேல் ஒப்பந்தத்துக்குத் தடை கோரி மனு!

ரஃபேல் ஒப்பந்தத்துக்குத் தடை கோரி நேற்று (செப்டம்பர் 5) தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. பிரதமரின் நண்பரான அனில் அம்பானி இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபமடைவார் என்பது அக்கட்சியின் தலைவர் ராகுலின் குற்றச்சாட்டு.

இதற்குப் பதிலளிக்கும் விதமாகக் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “ஆதாரமற்ற தகவல்களை ராகுல் காந்தி தெரிவித்து வருகிறார்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிரான்ஸுடன் இந்தியா ரஃபேல் போர் விமானம் வாங்க ஒப்பந்தம் செய்தது தொடர்பாக வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முரண்பாடு இருப்பதாகவும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

ரஃபேல் விவகாரத்தில் முன்னதாக போடப்பட்ட ஒப்பந்தம் காரணம் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய உடன்படிக்கையும் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே, ரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை முடிக்கும் வரை புதிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், தற்போதைய கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர், தொழிலதிபர் அனில் அம்பானி, பிரான்ஸ் நிறுவனம் டசால்ட் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறி, இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம் கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற நீதிபதிகள் அடுத்த வாரம் விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

புதன், 5 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon