மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

ரெய்டு: சிபிஐ, அமைச்சர் விளக்கம்!

ரெய்டு: சிபிஐ, அமைச்சர் விளக்கம்!

தனது இல்லத்தில் நடத்தப்பட்ட சிபிஐ சோதனை குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், “காய்த்த மரம் கல்லடிபடும்” என்று தெரிவித்துள்ளார்.

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திவரும் நிலையில், நேற்று (செப்டம்பர் 5) அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரின் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிரடியாகச் சோதனை நடத்தினர். இதனையடுத்து விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இந்த நிலையில் சோதனை குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழக அரசு குட்கா மற்றும் பான்மசாலா விற்பனையை 2013ஆம் ஆண்டு தடை செய்து அதைச் சிறப்பாக நடைமுறைப்படுத்த பல சீரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேலும் குட்கா மற்றும் பான்மசாலா தொடர்புடைய மாதவ ராவ் என்பவரை நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சந்திக்காத நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பரப்பி என்னை அரசியலிலிருந்து அழித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“மேற்படி பிரச்சினை குறித்து திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. சட்டத்தை ஏற்று நடக்கும் குடிமகன் என்கிற அடிப்படையில் எந்த விசாரணைக்கும் என் ஒத்துழைப்பை அளிக்கத் தயாராக உள்ளேன். இப்போது நடந்த சோதனைக்கும் என் முழு ஒத்துழைப்பை அளித்துள்ளேன்” என்று விளக்கியுள்ளார்.

காய்த்த மரம் கல்லடிபடும் என்கிற ரீதியில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது, குறிப்பாக இரவும் பகலும் பாராமல் பொதுச் சேவையாற்றி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையை இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக மாற்றிட தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் என் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை அரசியல் எதிரிகள் எழுப்புவது இயல்புதான் என்று கூறியுள்ள அமைச்சர், “குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார். இதுபோன்ற பிரச்சினைகள் என் அரசியல் வாழ்வில் ஏற்படும்போதெல்லாம் அவற்றைக் கடந்து தொடர்ந்து வெற்றிபெற்று மக்கள் பணியில் தொய்வின்றி ஈடுபட்டுவருகிறேன். இப்போதும் சொல்கிறேன், எனக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. இந்தப் பிரச்சினையையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளிவருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

சிபிஐ விளக்கம்

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை மற்றும் குண்டூர் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. குட்கா நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் / இயக்குநர்கள் மற்றும் விற்பனை வரித் துறையின் அதிகாரிகள் உள்பட மற்ற பொது ஊழியர்கள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மத்திய கலால் வரித் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது என்று சிபிஐயின் தகவல் பிரிவு நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், "சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் குட்கா மற்றும் பிற வகை புகையிலை பொருட்களைச் சட்டவிரோத உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனை செய்வது ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

2011ஆம் ஆண்டு முதல் குட்கா மற்றும் இதர புகையிலை பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை வணிகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வந்ததாகக் கூறப்பட்டது. பின்னர், 2013ஆம் ஆண்டு மே மாதத்தில் குட்கா உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை செய்யப்பட்டது. எனினும், சட்ட விரோதமாக குட்கா உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது என்று குறிப்பிட்டு விசாரணை தொடரும்" என்று தெரிவித்துள்ளது.

புதன், 5 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon