மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

சென்னை: வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்!

சென்னை: வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்!

சென்னையில் முறையாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க, சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

சென்னை மாநகரில், மாநகராட்சிக்குச் சொந்தமாக 152 வணிக வளாகங்கள் உள்ளன. அதில் மொத்தம் 6,240 கடைகள் உள்ளன. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.12 கோடி வருவாய் கிடைத்தது. மாநகராட்சி வருவாயை உயர்த்தும் விதமாக, மாநகராட்சிக் கடைகளுக்கு சந்தை மதிப்பில் வாடகை நிர்ணயிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், தற்போது கடைகளுக்குச் சந்தை வாடகையை நிர்ணயித்து மாநகராட்சி நிர்வாகம் அமல்படுத்தி வருகிறது. அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.37 கோடி வரை வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இதற்கு முன்னர் கடைகளுக்கான வாடகை மிகவும் குறைவாக இருந்ததாகத் தெரிவித்தனர். “இந்த கடைகள், ஒரு நபருக்கு 9 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். அதில், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகையானது 15 சதவிகிதம் உயர்த்தப்படும். அதனடிப்படையில் ஏற்கெனவே வாடகைக்கு விடப்பட்டு குத்தகை காலம் 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவற்றுக்குச் சந்தை மதிப்பில் வாடகை மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.37 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது.

இது முந்தைய ஆண்டுகளை விட ரூ.23 கோடி கூடுதல் வருவாயாகும். வாடகை உயர்த்தப்பட்டதற்கு ஏற்றவாறு, கடைகளையும் சீரமைத்து இருக்கிறோம். கழிவறைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறோம். அதனால், புதிய நடைமுறையின்படி, அமல்படுத்தப்பட்ட வாடகையை முறையாகச் செலுத்தாவிட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளுக்கு சீல் வைப்பது, உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு தொடர்வது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon