மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

கோவையில் காய்கறி விலை சரிவு!

கோவையில் காய்கறி விலை சரிவு!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாகவே பல்வேறு காய்கறிகளின் விலை 50 சதவிகிதம் வரையில் சரிந்துள்ளது.

இதுகுறித்து கோவை தியாகி குமரன் சந்தை காய்கறி வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவரான எம்.ராஜேந்திரன், தி இந்து ஊடகத்திடம் பேசுகையில், “சிறிய மற்றும் பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு, தக்காளி ஆகிய சமையலுக்கு முக்கியமான காய்கறிகளின் விலை கடுமையாகச் சரிந்துள்ளது. சில பகுதிகளில் வியாபாரிகள் மூன்று கிலோவுக்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர். இதிலிருந்து எந்த அளவுக்கு அவற்றின் விலை சரிந்துள்ளது என்பதைப் பார்க்கலாம். இந்தியாவின் பல்வேறு வட மாநிலங்களிருந்து காய்கறிகள் இங்கு விற்பனைக்காகக் கொண்டுவரப்படுகின்றன. இதில் காய்கறிகளை ஏற்றி இறக்குவதற்கான கூலி அதிகமாக இருப்பதால் விவசாயிகள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்” என்றார்.

காய்கறிகளின் விலை குறைந்துள்ளதற்கு அதிக உற்பத்தி மற்றும் குறைவான தேவை ஆகியவையே காரணம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர். கேரள மாநிலத்துக்கு இங்கிருந்து தினசரி 900 டன் அளவிலான காய்கறிகள் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், அங்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்குப் பிறகு வெறும் 300 டன் காய்கறிகள் மட்டுமே செல்கின்றன. எனவே எஞ்சிய காய்கறிகளை வீணடிக்காமல் வந்த விலைக்கு விற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் வியாபாரிகளும் விவசாயிகளும் குறைந்த விலைக்குக் காய்கறிகளை விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். எனினும் தமிழகத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து நல்ல மழை பெய்தால் தக்காளி, மிளகாய் மற்றும் கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயரத் தொடங்கிவிடும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon