மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

பேறுகால மரணம் குறித்து புதிய அரசாணை!

பேறுகால மரணம் குறித்து புதிய அரசாணை!

அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் நிகழும் பேறுகால மரணங்களுக்காக மருத்துவர்கள் தண்டிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், தமிழக அரசு புதிய அரசாணையைப் பிறப்பித்துள்ளது.

2011-2013ஆம் ஆண்டில், இந்தியாவில் 167ஆக இருந்த தாய்மார்களின் இறப்பு விகிதம், 2014-2016ஆம் ஆண்டில் 130ஆகக் குறைந்தது. 2013ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, தற்போது ஒவ்வொரு நாளும் 30 பெண்கள் காப்பாற்றப்படுகின்றனர். "இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தாய், சேய் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது” என்று தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகச் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேறுகால மரணங்கள் குறித்து ஒரு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில், பேறுகால மரணங்கள் குறித்து 2004ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தணிக்கை வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேறுகாலத்தின்போது பெண்கள் இறந்தால், அப்போது நிகழும் தவறுகள் முறைப்படி திருத்திக்கொள்ள வேண்டியவையாகக் கருதப்படும் என்று இந்த புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இனி பேறுகால மரணங்கள் குறித்த விசாரணை நடைபெறும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பிரசவத்தின்போது உயிரிழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், பேறுகால மரணங்கள் குறித்த விசாரணையின்போது, இறந்தவர்களின் உறவினர்கள் உடன் இருப்பது தவிர்க்க வேண்டும் எனவும், இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் நிகழும் பேறுகால மரணங்களுக்காகத் தாங்கள் தண்டிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், தங்களது கோரிக்கைகள் புதிய அரசாணையில் ஏற்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் புதிய அரசாணை, மருத்துவர்கள் தரப்பில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon