மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

கோடம்பாக்கத்தில் கதை வறட்சி!

கோடம்பாக்கத்தில் கதை வறட்சி!

இராமானுஜம்

பயோ பிக்கும் தமிழ் சினிமாவும்! 2

தமிழ் சினிமாவில் ஏற்கெனவே எடுத்து வெற்றி பெற்ற படத் தலைப்பில் இரண்டாம் பாகம் எடுப்பது தற்போது பிரபலமாகி வருகிறது. புதிதாக கதைக் கருவை யோசிக்க இயக்குநர்கள் தயாராக இல்லை.

அதே போன்றுதான் பயோ பிக் படங்களை எடுக்கும் முயற்சியில் பிரபல இயக்குநர்கள் முதல் புதிய இயக்குநர்கள் வரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வாழ்க்கையைப் படமாக்குகிறோம் எனக் கூறி அரசியல்வாதிகள் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் அதற்கு இங்கு அரசியல்வாதிகள் மயங்குவதும் இல்லை, கண்டு கொள்வதும் இல்லை. தமிழ் சினிமாவில் தயாரான முதல் பயோ பிக் திரைப்படம் சுதந்திர போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை பற்றியது. இவரைப் பற்றி பெருமை பொங்க அரசியல் மேடைகளில் எல்லாக் கட்சியினரும் பேசுகிறார்கள். ஆனால் இந்த படம் வெளியானபோது அரசியல்வாதிகளும், அரசும் கவனத்தில் கொள்ளவில்லை படம் வியாபார ரீதியாக தோல்வி அடைந்தது. அதற்குப் பின் இது போன்று படங்களைத் தயாரிக்க தொழில் ரீதியான படத்தயாரிப்பாளர்களும், புதியவர்களும் முயற்சிக்கவில்லை.

லாப நோக்கம் இன்றி வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் முயற்சியைத் தொடங்கியவர் இயக்குநர் ஞானராஜசேகரன். சுதந்திரப் போராட்ட கவிஞர் பாரதியின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க முயற்சி எடுத்தார். தொழில் ரீதியான தயாரிப்பாளர்கள் பலரும் அவரது முயற்சியை ஆதரிக்கவில்லை. தமிழ்த் திரைப்படத்துறையில் புதிதாகக் களமிறங்கிய மீடியா டீரிம்ஸ் நிறுவனம் ராஜசேகரன் முயற்சிக்கு ஊக்கம் தந்து பாரதி படத்தை தயாரித்து வெளியிட்டனர். அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்ற அப்படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை.

ஞானராஜசேகரன் உருவாக்கிய பயோ பிக் ராஜபாட்டையில் பயணிக்க வணிக இயக்குநர்களும், தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டினர். காரணம் தமிழக அரசியல் கள நிலவரம் இது போன்ற படங்களைத் தயாரிக்கும் போது சமகால அரசியல் தலைவர்கள் பற்றிய உண்மைகளைச் சமரசமில்லாமல் பதிவு செய்ய இயக்குநர்கள் முயற்சிக்கும் போது அவர்கள் நிறையப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்தன.

அப்படி ஒரு படம் தான் இருவர். இதில் மறைந்த முதல்வர்கள் கருணாநிதி - எம்.ஜி.ஆர் பற்றிய அரசியல் சம்பவங்கள் பற்றிப் பதிவு செய்ய வேண்டும். அதனை ஏற்க சம்பந்தப்பட்ட தலைவர்கள் விரும்பவில்லை. அதன் வெளிப்பாடு தான் இருவர் படம் சந்தித்த பிரச்சினைகள். அது என்ன?

சனிக்கிழமை பகல் 1 மணி பதிப்பில்..

பயோ பிக்கும் தமிழ் சினிமாவும்! 1

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon