மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

இந்திய பால்பொருட்கள் தரமானவை அல்ல!

இந்திய பால்பொருட்கள் தரமானவை அல்ல!

இந்தியாவில் விற்பனையாகும் 68.7 சதவிகித பால் மற்றும் பால் பொருட்களானது, இந்திய உணவு விற்பனை மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தரங்களின் படி இல்லை என்று விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மோகன் சிங் அலுவாலியா, இதுபற்றிச் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியாவில் விற்கப்படும் 68.7 சதவிகித பால் மற்றும் பால் பொருட்கள் தரமானவை அல்ல என்று தெரிவித்தார். “அவற்றில் சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, குளுகோஸ், வெள்ளை வண்ணம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்றவை கலப்படம் செய்யப்படுகின்றன. 89.2 சதவிகித பொருட்களில், மேற்கூறப்பட்டவைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள் கலப்படம் செய்யப்படுகின்றன.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, இந்தியாவில் ஒரு நாளைக்கு 14.68 கோடி லிட்டர் பால் பயன்படுத்தப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. தென்மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, வட மாநிலங்களில்தான் அதிகளவில் பால் பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது.

பால் கலப்படம் குறித்த தேசிய ஆய்வு சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்டது. பால் பொருட்களைக் கையாளுதல் மற்றும் பேக்கேஜிங் செய்வதில் சுகாதாரப் பற்றாகுறை, பால் கண்டெய்னர்களை சோப்புத்தூள்களால் கழுவுதல் போன்றவை அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. சோப்புத் தூள், ஸ்டார்ச், குளுகோஸ், பார்மலின் போன்றவை, பால் அடர்த்தியாக இருக்கவும், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கவும் பயன்படுத்தப்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே அறிவுறுத்தியதாகவும் கூறினார். பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள கலப்படங்களை உடனடியாகக் கண்டுபிடித்து அகற்றவில்லை என்றால், 2025ஆம் ஆண்டில் 87 சதவிகித மக்கள் புற்றுநோய் போன்ற பெரும் வியாதியால் அவதிப்படுவார்கள் என இந்திய அரசுக்கு அறிவுறுத்தியது உலக சுகாதார அமைப்பு.

இதனால், அனைத்து உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்ய அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களைத் துரிதப்படுத்தியுள்ளார் மோகன் சிங் அலுவாலியா.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon