மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

மாற்று எரிபொருட்களுக்கு வரவேற்பு!

மாற்று எரிபொருட்களுக்கு வரவேற்பு!

எலெக்ட்ரிக் வாகனங்களுடன், எத்தனால், மெத்தனால் போன்ற மாற்று எரிபொருட்களுக்கு மாறுவதற்கான முக்கியத்துவம் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.

செப்டம்பர் 5ஆம் தேதியன்று டெல்லியில் இந்திய வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆண்டு விழாவில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “எங்களது கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியை மேம்படுத்தி, மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். இந்தியா இரண்டு முக்கியப் பிரச்சினைகளைச் சந்திக்கின்றது. ஒன்று மாசுபாடு, மற்றொன்று அதிகரித்து வரும் எரிபொருள் இறக்குமதிச் செலவுகள்.

வாகனத் துறையில் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் இறக்குமதிச் செலவும் உயர்ந்து வருகிறது. இது நம் பொருளாதாரம் சந்தித்து வரும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று. இதற்காக நாங்கள் ஒரு திட்டத்தை வகுத்துள்ளோம். மாற்று எரிபொருட்கள் நமக்கு மிகவும் அவசியமானவை. உங்களது ஆதரவில்லாமல் மாற்று எரிபொருட்களால் முன்னேற்றம் அடைய முடியாது. நாங்கள் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் எதிரியல்ல. நாங்கள் எந்தத் தொழிற்துறையையும் மூடப்போவதும் இல்லை. வாகனத் துறையின் மனப்பான்மை மாறினால் அது வரவேற்கத்தக்கது” என்று பேசினார்.

மேலும், இறக்குமதியைக் குறைப்பதும், ஏற்றுமதியை மேம்படுத்துவதும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதுமே அரசின் கொள்கையாக உள்ளதாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon