மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

வெள்ள மீட்பு: அடையாளத்தை வெளிப்படுத்தாத ஐஏஎஸ்!

வெள்ள மீட்பு: அடையாளத்தை வெளிப்படுத்தாத ஐஏஎஸ்!

எட்டு நாட்கள் வரை, தன் அடையாளத்தை மறைத்து கேரளாவில் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் தாதர் நாகர்ஹவேலியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன்.

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஒரு வார காலம் பெய்த பெருமழையின் காரணமாக, கேரளாவில் வயநாடு, கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் சுமார் 20,000 கோடி ரூபாய் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது கேரள மாநிலம். இப்பெருமழை வெள்ளத்தினால், அங்கு சுமார் 55 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று தாதர் நாகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்துவரும் கண்ணன் கோபிநாதன் கேரளாவுக்குச் சென்றார். தாதர் நாகர்ஹவேலியின் சார்பாக, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை அவர் வழங்கினார். அதன்பின், திருவனந்தபுரத்தில் இருந்து செங்கன்னூர் சென்றார் கண்ணன் கோபிநாதன். வெள்ளத்தினால் அந்த வட்டாரம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள முகாம்களுக்குச் சென்று, அவர் நிவாரணப் பணிகளில் நேரடியாகப் பங்குகொண்டார். சாதாரண கடைநிலை ஊழியரைப் போல, அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டார்.

கொச்சியில் நடந்த நிவாரணப் பணிகளின்போது, நிவாரணப் பொருட்களைத் தலையில் சுமந்து செல்லும் பணியைச் செய்தார் கண்ணன் கோபிநாதன். அப்போது, அங்கிருந்த தன்னார்வத் தொண்டர்களிடம் தனது அடையாளத்தை அவர் வெளிக்காட்டவில்லை. இடைப்பட்ட நாட்களில், தனது சொந்த ஊரான புதுப்பள்ளிக்குக் கூட அவர் செல்லவில்லை. எட்டு நாட்கள், இவ்வாறு அவர் நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

9வது நாள், கேரள புத்தகப் பதிப்பு நிறுவன அலுவலகத்தில் நிவாரணப் பணிகள் நடைபெற்றபோது, கண்ணன் கோபிநாதன் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்ற விஷயத்தை வெளிப்படுத்தினார் அங்கு வந்த ஒரு மூத்த அதிகாரி. இந்த விவரம் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்களுக்குத் தெரியவந்ததை அடுத்து, அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறிவிட்டார். இதுபற்றித் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“நான் பெரிதாக ஏதும் செய்துவிடவில்லை. நான் ஒரு பார்வையாளன் மட்டுமே. வெள்ளத்தினால் கேரள மாநிலம் பாதிக்கப்பட்டபோது, களத்தில் இறங்கி மக்கள் பணி செய்த அதிகாரிகளிடம் தான் நீங்கள் பேசவேண்டும். அவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்” என்று கூறியுள்ளார் கண்ணன் கோபிநாதன். அது மட்டுமல்லாமல், தான் ஐஏஎஸ் அதிகாரி என்று தெரிய வந்ததும், தன்னோடு மற்றவர்கள் செஃல்பி எடுத்துக்கொண்டபோது சங்கடமாக உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

“சில அதிகாரிகள், ஏதாவது மோசமாகப் பேசியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக என்னிடம் கூறினர். அதற்கு மேல் அங்கிருந்து பணிகளை மேற்கொள்வது சரியாக இருக்காது என்று கருதியே, அங்கிருந்து அகன்றேன். இதுபற்றிய தகவல்களைச் செய்தியாக வெளியிடுவதை விட, நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட எத்தனையோ பேர்களைப் பற்றி செய்தி வெளியிடுங்கள்” என்று அவர் கூறினார்.

கேரளாவில் இருந்து திரும்பிய கண்ணன் கோபிநாதன், விடுப்பில் சென்றதாகக் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், அந்நாட்களை அவரது அலுவலகப் பணிக்காக கேரளாவில் முகாமிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது தாதர் நாகர்ஹவேலி அரசு.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon