மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

வேதாந்தாவுக்கு அனுமதி: காவிரி மண்டலத்தை அழிக்கவா?

வேதாந்தாவுக்கு அனுமதி: காவிரி மண்டலத்தை அழிக்கவா?

தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், “காவிரி மண்டலத்தை அழிக்கும் திட்டமாக இது உள்ளது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நெல்லையில் இன்று (செப்டம்பர் 6) செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “குட்கா விவகாரத்தில் சம்பந்தபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் பதவிவிலக வேண்டும், இல்லையேல் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ரெய்டினால் அசாதாரண சூழ்நிலை உருவாகியிருப்பதாக சுட்டிக்கட்டியுள்ள ஸ்டாலின், ஆளுநருக்கும் இதனை கவனப்படுத்தியிருக்கிறார். குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரின் பெயரும் சிபிஐ அறிக்கை வெளியிடும்போது வெளிவரத்தான் போகிறது. எனவே இதில் யாரும் தப்ப முடியாது” என்று தெரிவித்தார்.

“ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது மீத்தேன், பாறைப் படிம வாயு உள்ளிட்ட எல்லா விதமான எரிவாயுக்களையும் உள்ளடக்கியது. இதனை எதிர்த்து நான் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். முன்னதாக பெங்களூருவைச் சேர்ந்த பாஜகவுடன் தொடர்புடைய ஜெம் லெபரேட்டரி நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளித்து, விரும்புகிற இடத்தில் எவருடைய அனுமதியும் பெறாமல் காஸை எடுத்துக்கொள்ளலாம் என்று ஒரு திருத்தத்தைத் கொண்டுவந்தனர்” என்று நினைவுகூர்ந்துள்ள வைகோ, இடிமேல் இடியாக நாசகர நச்சாலையை நடத்தி, தூத்துக்குடி சுகாதாரத்திற்கு பெருங்கேடு விளைவித்த, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சொந்தமான வேதாந்தா குழுமத்திற்கு காவிரி டெல்டாவின் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் ஒரு இடத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி காவிரி மண்டலத்தை பாலைவனமாக ஆக்கி, நிலங்களை விட்டுத்தர வேண்டிய நிலைக்கு விவசாயிகளுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தி, காவிரி மண்டலத்தை அழிக்கும் ஒரு திட்டமாக இது இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்திலுள்ள 2 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதி வேதாந்தா நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. தமிழகத்தில் மீதமுள்ள 1இடம் ஓஎன்ஜிசிக்கு கிடைத்துள்ளது.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon