மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

மன வலிமை தேவை: ரவி சாஸ்திரி

மன வலிமை தேவை: ரவி சாஸ்திரி

இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில், கடந்த 15-20 ஆண்டுகளைக் காட்டிலும் தற்போதைய இந்திய அணி சிறந்த அணியாக உள்ளதென பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது போட்டி ஓவல் மைதானத்தில் நாளை (செப்டம்பர் 7) தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதில் ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய இந்திய அணியின் செயல்பாடு குறித்துப் பேசிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "எங்கள் வீரர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போராடினார்கள். இருப்பினும் இங்கிலாந்து அவர்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டது. எதிரணிக்கு கடும் போட்டியளித்து வெற்றி பெற முயற்சிப்பதே எங்களின் நோக்கம். தற்போதைய இந்திய அணி கடந்த மூன்று ஆண்டுகளில் 9 வெளிநாட்டுப் போட்டிகளையும் மூன்று வெளிநாட்டுத் தொடர்களையும் வென்றுள்ளது.

கடந்த 15-20ஆண்டுகளில் இதைவிட சிறந்த இந்திய அணியை நான் பார்த்ததில்லை. இந்தத் தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்ட மிகச் சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர். ஆனால் இப்போதைக்கு இந்திய அணிக்குத் தேவை மன வலிமை மட்டுமே. தொடர் தோல்விகளால் துவண்டு விடாமல், கடுமையான சூழ்நிலையிலும் தொடர்ந்து போராடினால் ஒருநாள் வெற்றி கிடைக்கும்.

தொடரை இழந்ததற்கு ஓவல் போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் பெற இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. கடந்த தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பின்னரே இந்தியாவுக்கு முதல் வெற்றி கிடைத்தது. தோல்வியிலிருந்து பாடம் கற்பதே சிறந்தது" என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon