மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

மத்திய அரசின் நிதி பகிர்வு குறைந்து வருகிறது!

மத்திய அரசின் நிதி பகிர்வு குறைந்து வருகிறது!

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 15ஆவது நிதி குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் நிதி பகிர்வு குறைந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் 2020ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் நிலையில், 15ஆவது நிதிக்குழுத் தலைவர் என்.கே.சிங் தலைமையிலான உறுப்பினர்கள், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அரசு மற்றும் அரசியல்கட்சிகளின் கருத்துகளை அந்தக் குழு கேட்டறிந்தது. அரசியல் கட்சிகளுடனான கூட்டத்தை தொடர்ந்து உள்ளாட்சி சிறப்பு அலுவலர்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோர்களிடம் 15ஆவது நிதிக்குழு கருத்துக்களை கேட்டறிந்தது.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் இன்று|(செப்டம்பர் 6) முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் என்.கே. சிங் தலைமையிலான 15ஆவது நிதிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “தமிழக அரசு, நிதி குழுவிற்கு உறுதியான ஆதரவாளராக இருக்கும்.சமீபகாலமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி பகிர்வதில் சமநிலையை கடைப்பிடிப்பதில் வீழ்ச்சியடைந்துள்ளது. 14ஆவது நிதிக்குழு மத்திய அரசின் வரி பங்கீட்டை 32 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதம் உயர்த்தியது தமிழகத்திற்கு ஏற்புடையது கிடையாது. 14ஆவது நிதிக்குழுவால் தமிழக அரசு கடந்த ஆண்டு ரூ.6,000 கோடியை இழந்துள்ளது. மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு தராததால் தமிழகம் இழப்பை சந்தித்துள்ளது.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

15ஆவது நிதிக்குழு 2011 மக்கள்தொகை அடிப்படையில் வருவாய் பங்கீட்டை அமல்படுத்தினால் தமிழ்நாட்டுக்கு வந்து சேரவேண்டிய அதிகப்படியான நிதி வராமல் போய்விடும். 1971ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நிதி பகிர்வை தமிழகத்திற்கு மத்திய அரசு அளிக்க வேண்டும். தமிழகத்திற்கான நிதி பகிர்வு சமீப காலமாக குறைந்து வருகிறது” என முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon