மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

களத்தை மாற்றிய ராஜ்கிரண்

களத்தை மாற்றிய ராஜ்கிரண்

இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் அடுத்த படத்தில் ராஜ்கிரண் பிரதான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கிராமப்புற வேடங்களுக்குக் கச்சிதமாக பொருந்தக்கூடிய நடிகர்களில் முக்கியமானவர் ராஜ்கிரண். இவர் நடித்த பெரும்பாலான படங்கள், மற்றும் வெற்றி பெற்ற படங்கள் கிராமப்புறக் கதைக்களத்தை கொண்டே உருவாகியுள்ளன. தனுஷ் முதன்முறையாக இயக்கிய ப.பாண்டி படத்தில் வழக்கத்தை விட வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். வெவ்வேறு பாதைகளில் பிரிந்துவிட்ட காதலர்கள் வருடங்கள் பல ஓடிய பின்னர் மீண்டும் சந்திக்கும் போது உருவாகும் உணர்வுநிலைகளை அடிப்படையாகக் கொண்டு அந்த படம் உருவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து ராஜ்கிரண் தற்போது சைன்ஸ் பிக்சன் ஜானரின் ஒருவகையான ‘சைபர் பங்க்’ ஜானரில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

தொழில்நுட்பவளர்ச்சியால் மனித வாழ்க்கை எந்தவகையில் மாற்றத்தைச் சந்திக்கிறது என்பதை மையமாக வைத்து ராம்பிரகாஷ் ராயப்பா திரைக்கதை அமைத்துள்ளார். திரைக்கதையைக் கேட்ட ராஜ்கிரண் உடனே நடிக்கச் சம்மதித்ததுடன் இயக்குநரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விரைவில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக்கலைஞர்களின் முழு விபரம் வெளியாக உள்ளது.

ராம்பிரகாஷ் இயக்கியுள்ள சுட்டுப்பிடிக்க உத்தரவு திரைப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon