மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 6 ஜுன் 2020

முக்கொம்பில் புதிய பாலத்துக்கு ஆய்வு!

முக்கொம்பில் புதிய பாலத்துக்கு ஆய்வு!

திருச்சி முக்கொம்பில் நடந்துவரும் சீரமைப்புப் பணிகள் இன்று நிறைவடையும் என்றும், புதிய பாலம் கட்டுவதற்கான ஆய்வு நடந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார் தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

காவிரியில் அதிகளவில் நீர் திறந்துவிடப்பட்ட காரணத்தினால், கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று திருச்சி முக்கொம்பு மேலணையில் 8 தூண்களும் 9 மதகுகளும் உடைந்தன. அவை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த அணையின் மேற்பகுதி, அப்பகுதி போக்குவரத்துக்கான பாலமாகவும் செயல்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்காலிகமாக முக்கொம்பு அணையைச் சீரமைக்கும் பணிகளை இரவு பகலாக மேற்கொண்டு வந்தனர் தமிழக பொதுப்பணித் துறையினர். இந்தப் பணிகள், இன்று (செப்டம்பர் 6) 14வது நாளாகத் தொடர்ந்து வருகிறது.

இந்தப் பணிகளை தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆட்சியர் ராசாமணி ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

இதன்பின், செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது, முக்கொம்பு மேலணையில் நடைபெற்றுவரும் பணிகள் இன்று நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார். “காவிரி கடைமடைப் பகுதிகளுக்கு நீர் செல்ல, இன்று நடவடிக்கை எடுக்கப்படும். முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலத்துக்கான கட்டுமான ஆய்வு இன்று நடக்கிறது. மதகுகளைச் சீரமைக்கும் பணி இன்று மதியத்துடன் நிறைவடையும்” என்று அவர் கூறினார்.

தேசிய நீர்வழிச்சாலை மேம்பாட்டு அமைப்பின் தலைவரும், இந்திய நதிகள் இணைப்பு நிபுணர் குழு உறுப்பினருமான காமராஜ், முக்கொம்பு அணையைப் பார்வையிட்டார்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon